காரைக்குடியிலுள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியில் தலைமையாசிரியை, துணைத்தலைமையாசிரியை, மாணவியின் தந்தை உள்ளிட்டோர் அருகிலிருக்க " பள்ளிக்கு புறப்பட்டு வந்தது உண்மைதான். ஸ்கூல் பேக்கை பள்ளித் தோழியான அவளிடம் கொடுத்துவிட்டு, டிரஸ் வைத்திருந்த பையோடு சிறிது தூரத்திலிருந்த விக்னேஷின் காரில் ஏறிப் போனேன். அது மன்ஜிலோட ரூம். எப்பவுமே அங்கே தான் போவேன். வெள்ளை பேப்பர் மாதிரி வேபர் பிஸ்கட் கொடுத்தாங்க.. அதை சாப்பிட்டதும் மயக்கமாகிட்டேன். உடம்பெல்லாம் ரணமாகி, ஸ்கூல் விடும் நேரத்திற்கு நான் திரும்பி ஸ்கூல் பேக்கை வாங்கிட்டு போகையில்தான் உங்களுக்கு விபரம் தெரிஞ்சது. நான் மட்டுமல்ல... எனக்கு முன்னால் அவள், அவள்....'' என நீண்ட லிஸ்ட்டையே வாசித்துள்ளாள், ஆங்கில மீடியத்தில் +1 வணிகவியல் படிக்கும் மாணவியான அம்பிகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
"ஸ்கூல் வாசலில் வரும் மாணவிகளுக்கு டெம்ப்ரேச்சர் செக்-அப் செய்து, சானிடைசர் கொடுத்து அதன்பின் வருகைப் பதிவு செய்வோம். பிறகு வகுப்பறையில் ஒரு வருகைப் பதிவு உண்டு. சம்பவத்தன்று அந்த மாணவி ஸ்கூல் வாசல்வரைக்கும் வந்து, அருகிலிருந்த காரில் சென்று, மீண்டும் மாலை நேரத்தில் வந்தாள். இது தினசரி நடப்பதாக இன்னொரு மாணவி கூற, மாலை நேரத்தில் வந்த மாணவியை அழைத்து எங்கள் அருகில் வைத்துக்கொண்டே அவளுடைய அப்பாவை வர வழைத்தோம். நடந்தவைகளை தயக்கமின்றி ஒப்புக்கொண்டாள்.
விவகாரம் இத்தோடு முடியட்டும் என அம்பிகாவிற்கும், அம்பிகாவிற்கு துணைபோன சக மாணவியான ராதாவிற்கும் (பெயர் மாற்றப்பட் டுள்ளது) டி.சி. கொடுத்தோம். அவர்களுடைய வகுப்பு ஆசிரியையையும், வேலையை விட்டு நிறுத்தினோம். இந்நிலையில், மாணவிகளிடம் அருவருக்கத்தக்க கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்திய ஆசிரியர் குழு, இது வரை காவல்துறையிடம் ஒரு புகார்கூட அளிக்கவில்லை. "மாணவி களுக்கு போதைப் பொருள் கொடுக்கப்பட்டதா?, மாணவி களை வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டி மீண்டும், மீண்டும் வரச்சொல்லி மிரட்டப்பட்டதா? ஏதேனும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்களா?' என பல மாணவிகளையும் விசாரித்த பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உண்மைக் கதை களைச் சொன்ன பின்னர்... "ஒரு ஆசிரியரை பணியில் இருந்து நிறுத்தியது ஏன்?' என சமூக வலைத்தளங்களில் பரபரப்பு பதிவுகள் வரத்தொடங்க, காவல்துறையும் விசாரிக்க ஆரம்பித்தது'' என்றார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர்.
விசாரணையின் இறுதியில், "காரைக்குடியில் தனியார் பள்ளியில் பயின்ற பள்ளி மாணவி தன்னுடைய வகுப்புத்தோழி மூலமாக அறிமுக மான அழகு நிலையத்திற்கு தன்னுடைய தோழி யுடன் கண் புருவம் திருத்துவதற்காக சென்றுள் ளார். அப்போது அங்கிருந்த அழகு நிலைய பொறுப்பாளருடன் நட்புரீதியாக பழக்கம் ஏற்பட்டு, பின்னர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாக தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில், விக்னேஷ், லெட்சுமி மற்றும் ஒரு நபர் மீது காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மூவர் கைது செய்யப்பட்டிருக்க, முதன் மைக் குற்றவாளியான மன்ஜிலை தேடி வருகின்றோம்'' என்றது சிவகங்கை மாவட்ட காவல்துறை.
காவல்துறை அதிகாரி ஒருவரோ,
"இப்பொழுது புகார் கொடுத்துள்ள அம்பிகாவின் தந்தை டிரைவராக வேலை செய்கின்றார். முதலில் அவர் புகார் கொடுக்கவே விரும்பவில்லை. தாய், தங்கையை இழந்த அம்பிகா +1 படிப்பிற்காகவே அந்த பள்ளிக்குச் சென்றிருக்கின் றார். அவளுடைய வகுப்புத் தோழியான ராதாவின் அம்மா லெட்சுமி, கல்லூரி சாலையிலுள்ள அழகு நிலையத்தில் பியூட்டிசி யனாக பணியாற்றி வருகின்றார். லெட்சுமியை பார்க்க அந்த அழகு நிலையத்திற்கு ராதாவுடன் அம்பிகா செல்ல, அவளுக்கு இலவச மேக்அப் ஆசை காட்டி அழகுபடுத்தியுள்ளார் லெட்சுமி. தொடர்ச்சியாக அம்பிகா இலவசமாக மேக்அப் செய்த நிலையில், அழகு நிலைய பொறுப்பாளர் மன்ஜில் அவளை தன் வசப்படுத்தியிருக்கின்றான். இந்த உறவு மன்ஜிலை தாண்டி ஏனையோருக்கும் பகிரப்பட்ட தாகத்தான் தகவல். இது போல் அந்த பள்ளி மாணவிகள் பலரும் இங்கு இலவசமாக மேக்அப் செய்து கொண்டு சென்றுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது மன்ஜில் கைதுக்கு பிறகு தான் தெரியும். அத்தனை மாணவிகளையும் கேன்வாஸ் செய்தது ராதாவும் அவளுடைய அம்மா லெட்சுமியுமே! இது முழுவதும் கலாச்சார சீரழிவே. அதுபோல் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைக்கும், இன்னொரு நபருக்கும் ஏற்பட்ட முன்விரோதமே இந்த வலைத்தள பதிவுகள். இது குறித்தும் விசாரித்து வருகின்றோம்'' என்கிறார் அவர்.
இது இப்படியிருக்க, "முதன்மைக் குற்றவாளி யான மன்ஜில் தலைமறைவாக வாய்ப்புக் கொடுத்ததே காவல்துறைதான்' என்கின்றனர். தப்பியோடிய மன்ஜிலின் தந்தை போலீஸ் அதிகாரி என்பதால் இந்த தயவு தாட்சண்யம்'' என்கின்றனர் உளவுப் பிரிவு அதிகாரிகள்.
படங்கள்: விவேக்