"நான் எல்லாரையும் சாகக்கொல்லுவேன்...''
"ஒரு எதிர்பார்க்கப்படாத கூட்டணி இருக்கு... ஐ.எஸ்.ஐ.க்கும் கிளர்ச்சியாளர்களுக்கும்''
-இவை "தி ஃபேமிலி மேன்-2' வெப் சிரீஸின் ட்ரைலரில் வரும் வசனங்கள். கிளர்ச்சி யாளர்கள் என்று குறிப்பிடப்படுவது, அந்தத் தொடரில் சமந்தா நடித்திருக்கும் பாத்திரம் அங்கம் வகிப்பதாகக் காட்டப்பட்டிருக்கும் குழு என்றும், அந்தக் குழுவில் இருக்கும் சமந்தா இலங்கைத் தமிழ் பேசுவதால் அந்தக் குழு தமிழீழ விடுதலை புலிகளைக் குறிப்பிடுகிறது என்றும், அதற்கும் ஐ.எஸ்.ஐ.க்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவது, விடுதலைப் புலிகளையும் தமிழர்களையும் தவறாகச் சித்தரிக்கும் முயற்சி எனவும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
எதிர்ப்பாளர்கள் கொள்ளும் சந்தேகம் நியாயம்தான் என்பதைப்போல் இருக்கிறது அந்த ட்ரைலர். தமிழ் பேசும் கிளர்ச்சியாளர், சென்னையில் நடக்கும் தீவிரவாத முயற்சி, சென்னையைச் தாக்கத் திட்டம், தமிழ் பேசும் பாத்திரங்கள், சமந்தா, தேவதர் ஷினி உள்பட பல தமிழ் நடிகர்கள் என இந்த முறை தமிழ்நாட்டை நோக்கி வருகிறது "தி ஃபேமிலி மேன்-2'. அமேசான் ப்ரைமில் வெளிவர இருக்கும் இந்த வெப் சிரீஸின் முதல் பாகம் 2019-இல் வெளி யாகி ஞபப அளவீட்டின்படி சூப்பர் ஹிட்டானது. அந்த வெப்சீரீஸில் நாயகன் மனோஜ் பாஜ்பாயீ, இந்திய உளவுத்துறையில் ரகசிய ஏஜெண்டாக பணியாற்றுபவர்.
அவரது மனைவி ப்ரியாமணியுடன் செலவு செய்ய நேரமும் காதலுமில்லாமல் வேலைக்காக மட்டுமே வாழ்க்கையைச் செலவிடுபவர். இவரது குடும்பச் சிக்கல்களும் இவர் களமிறங்கி முறியடிக்கும் தீவிரவாதத் திட்டங்களும்தான் கதை. முதல் பாகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் எனச் சென்ற கதையில்தான் இப்போது தமிழ் பேசும் போராளிகள் இடம் பெறுகிறார்கள்.
உண்மை வரலாற்றைத் தழுவி படங்களோ தொடர்களோ எடுப்பது பிரச்னை இல்லை. ஆனால், அந்த வரலாற்றைத் திரித்து எடுத்து உலகம் முழுவதும் அது சென்றடைவது பெரும் ஆபத்து. உலகின் பிற தீவிரவாத இயக்கங்களுடன் தமிழீழ விடுதலை புலிகளை சுலபமாக ஒப்பிட முடியாது. அவர்கள் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள் என ஒரு அரசாகவே செயல்பட்டு வந்தவர்கள். சிங்கள பேரினவாதத்திலிருந்து விடுதலை பெற போராடியவர்கள். முப்படைகள் கொண்டு விடுதலைப் போர் நடத்தியவர்கள். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின் சீருடை, மொழி போன்ற அடையாளங்களுடன் பாத்திரங்களை உருவாக்கி அந்த இயக்கம் குறித்த தவறான சித்தரிப்பை உண்டாக்குகிறார்களோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது இந்த ட்ரைலர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு இந்த வெப் தொடரை தடைசெய்ய வேண்டுமென்றும் இல்லையெனில் தமிழகத்தில் போராட்டம் வெடிக்குமென்றும் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். சீமான் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். பல்வேறு தமிழுணர்வாளர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், தமிழக அரசு சார்பாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இந்தத் தொடர் வெளிவந்தால் உலகெங்குமுள்ள தமிழர்களின் உணர்வுகள் பாதிக்கப்படும்' என்று குறிப்பிட்டு உலகம் முழுவதும் தடை விதிக்குமாறு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே ஜான் ஆப்ரஹாம் நடித்த "மெட்ராஸ் கஃபே' என்ற திரைப்படத்தின் ட்ரைலர் இப்படி ஒரு எதிர்ப்பை சந்தித்தது. பிறகு அந்தப் படம் தமிழகத்தில் திரையிடப்படவில்லை. சந்தோஷ் சிவன் இயக்கிய "இனம்' என்ற திரைப்படமும் எதிர்ப்பை சந்தித்தது. லைகா நிறுவனம் தமிழ் திரைப்படங்களை தயாரிக்கத் தொடங்கியபோது எதிர்ப்புகள் கிளம்பின. ராஜபக்ஷே குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதால் லைகா நிறுவனர் சுபாஷ்கரன் தமிழ் திரையுலகில் நுழைவது ஆபத்து என்று எதிர்ப்புகள் உண்டாகின.
பின்னர் அவர் மற்றும் "கத்தி' திரைப்படக் குழு கொடுத்த விளக்கங்கள் மற்றும் முன்னெடுத்த சமாதான நடவடிக்கைகளால் பின்னர் லைகா தமிழில் பல படங்களைத் தயாரித்தது. அதில் எந்தப் படமும் தமிழர்கள் உணர்வை புண்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளிவர, தமிழ் இயக்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து படத்தில் இருந்து விலக வேண்டுமென கோரிக்கை வைத்தன. "நன்றி... வணக்கம்' என அறிவித்து படத்திலிருந்து விலகினார் விஜய்சேதுபதி.
தற்போது இந்த வெப்சீரீஸின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் உஃ ஆகியோர் உள்பட குழுவினர் தங்கள் குழுவில் பல தமிழர்கள் இருப்பதாகவும், தாங்கள் ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகே இந்தத் தொடரின் திரைக்கதையை எழுதியதாகவும், எந்த விதத்திலும் தமிழர்கள் உணர்வைப் புண்படுத்தும் காட்சிகள் இருக்காது எனவும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
முதல் பாகத்திலேயே இடையிடையே அப்பாவி இசுலாமியர்களை தீவிரவாதியாகக் காட்டும் அரசியல்வாதிகள் குறித்த காட்சிகளையும் வைத்து, இரு பக்கமும் சமன்செய்யும் முயற்சியும் நடந்திருக் கும். அப்படி இந்தப் பாகத்தில் காட்சிகள் உள்ளனவா என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஈழம் குறித்த காட்சிகளை வைத்து தமிழுணர்வைச் சீண்டிப் பார்க்கும் வேலை அவ்வப்போது நடக்கிறது. அதற்கு எதிர்ப்பும் கிளம்புகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முடிவு கிடைக்கிறது.
இந்தமுறை என்ன முடிவு... எப்போது விடிவு?
-வீபீகே