பல்லாயிரம் ஆண்டுகால பெருமைகொண்டது செம்மொழியான தமிழ்மொழி. அதன் சிறப்பை உலகறியச் செய்த சான்றோர்களின் முயற்சி அளப்பரியது. அவர்களில், எப்போதும் வித்தியாசமான, தனித்த பாணியைக் கையாள்பவர் கவிப்பேரரசு வைரமுத்து. அந்தவகையில், கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் மொழியின், தமிழர்களின் புகழுக்குப் புகழ்சேர்த்த ஆளுமைகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தி, அதுதொடர்பான கட்டுரைகள் அடங்கிய "தமிழாற்றுப்படை' நூலை எழுதியிருக்கிறார். எழுதியதோடு மட்டுமின்றி, அந்தக் கட்டுரைகளை உரைகளாக நிகழ்த்தி அரங்கேற்றமும் செய்திருக்கிறார்.
இந்தக் கட்டுரைகள் பல்வேறு நாளிதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் கபிலர், அப்துல்ரகுமான், ஔவையார், அண்ணா, பெரியார் ஆகியோர் குறித்த கட்டுரைகள் நமது நக்கீரன் இதழில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டன.
தமிழ் இலக்கியப் பெருவுலகின் முன்னோடிகளான தொல்காப்பியர், திருவள்ளுவர், செயங்கொண்டார், அவ்வையார். கம்பர், ஆன்மிகத் திருப்பணிகளில் தமிழை உயர்த்தியவர்களான அப்பர், கபிலர், ஆண்டாள், திருமூலர், வள்ளலார் மற்றும் மறைமலையடிகள். உ.வே.சா., கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன். தமிழின் பிறப்பிடமான திராவிடத்தின் வழியே மக்களுக்கான சமூக அரசியலை நிகழ்த்திக் காட்டிய பெரியார், அண்ணா, கலைஞர். திரையுலகிலும், இலக்கிய உலகிலும் கொடிகட்டிப் பறந்த புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். வைரமுத்து வின் காலத்திலேயே தமிழ் வழியே உலகமொழி பேசிய ஜெயகாந்தன், அப்துல் ரகுமான் என மொத்தம் 24 ஆளுமைகளுக்கும், தனித்தனி தலைப்புகளில் கட்டுரையாக எழுதப்பட்ட தமிழாற்றுப்படை நூல், சென்னை தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், ஜூலை 12-ம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விழாவிற்கு தலைமையேற்று, நூலை வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண் டார். நூலின் சிறப்புப் படிகளை நம் நக்கீரன் ஆசிரியர் மற்றும் பழனி பெரியசாமி, மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். அதே மேடையில் தமிழாற்றுப்படை நூலின் ஒலிப்புத்தக வடிவத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, ஓய்வுபெற்ற நீதியரசர் விமலா பெற்றுக்கொண்டார்.
ஒலிப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு தனது உரையைத் தொடங்கிய முன்னாள் நீதியரசர் விமலா, ""பொதுவாக பெண்களிடம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் எதுவென்று கேட்டால், முதல் குழந்தையைக் கையிலேந்திய தருணம்தான் என்பார்கள். என்னுடைய முதல் குழந்தையைக் கையிலெடுக்கும்போது இருந்த மகிழ்ச்சியை, இந்த நூலைப் பெற்றுக்கொள்ளும் போது அடைந்தேன். ‘புத்தகங்களை வாசிப்பதன் மூலம், அமெரிக்க சாம்ராஜ்யத்தையே வீழ்த்தமுடி யும்’ என்றார் கியூப புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ. அத்தகைய மரியாதை புத்தகங்களுக்கு உண்டு. இலக்கியம் என்பது கலைகளின் சிகரம். அது கடந்தகாலத்தின் கன்னி, நிகழ்காலத்தின் மனைவி, எதிர்காலத்தின் தாய். இலக்கியம்தான் மனிதனை உருவாக்குகிறது. மானுடம் வாழவேண் டும். மானுடம் வளரவேண்டும். அந்த மானுடம் தழைக்கவேண்டி எழுதிய தமிழாற்றுப்படை நூலுக்காக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு நன்றியும், பாராட்டும்''’என்று பேசி அமர்ந்தார்.
""தமிழாற்றுப்படை வெளியிடப்படுகிற நாள், வரலாற்றிலே உன்னதமான நாள். இன்று ஜூலை-12. உலகப் புரட்சியாளன் சேகுவேரா சக வீரர்களுக்கு வாசித்துக் காட்டிய உணர்ச்சிமிகு கவிதைகளுக்குச் சொந்தக்காரரான சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெருடாவின் பிறந்ததினம். அவர் கவிதைகளுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப் பட்டார். இந்த தமிழாற்றுப்படை நூல் முறையாக ஆங்கிலத்திலே மொழிபெயர்க் கப்பட்டால், எந்த பாப்லோ நெருடாவைத் தேடி நோபல் பரிசு வந்ததோ, வடுகபட்டியாரின் வாசற்கதவையும் அது தேடிவரும் என்று நான் நினைக்கின்றேன். வைரமுத்து எழுதிய கள்ளிக் காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் 21-ம் நூற்றாண்டின் இரட்டை காப்பியங்கள். வைரமுத்து எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்''’என்று கேட்டுக்கொண்டார் வைகோ. தமிழாற்றுப்படையின் இரண்டாம் பாகமா? தமிழாற்றுப்படையின் மனிதப் பிரதியா? என்று வியந்து பாராட்டும் அளவுக்கு வைகோவின் உரை அமைந்திருந்தது. தமிழாற்றுப்படையின் பெருமிதத்தை, தன் உரைமுழுவதும் முழங்கிச் சீறினார் வைகோ.
அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ""இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் இலக்கியம் இருந்ததற்கு தொல்காப்பியமே ஆதாரம். இரண்டா யிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிற மொழி தமிழ். 1961-ல் இந்தியாவில் மக்கள்பேசும் 1,650 மொழிகள் இருந்தன. இன்றுவரை ஆண்டுக்கு பத்து மொழிகள் அதிலே செத்துக் கொண்டிருக் கின்றன. ஒரு நாகரிகத்தின் அடையாளம் மூன்றே மூன்றுதான். நிலம் - இனம் - மொழி. அந்த நாகரிகத்துக்குச் சொந்தமானவர்கள், நாடுவிட்டு நாடு குடியேறும்போது நிலத்தின் முக்கியத்துவம் குறைந்துபோகிறது. பிறகு எஞ்சிய அடையாளங்கள் இனமும், மொழியும்தான்.
கவிப்பேரரசு தமிழாற்றுப்படையின் மூலம் எதைச் சொல்கிறார் என்றால், மொழி வேறு இனம் வேறு அல்ல. அல்லது இனம் வேறு மொழி வேறு அல்ல. மொழி அழிந்தால் இனம் அழியும். இந்தி அல்லாத அனைத்து மொழிகளுக்கும் பேராபத்து வந்திருக்கிறது. மற்ற மொழிக்காரர்கள் அவர்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்று நாம் ஒதுங்கிவிட முடியாது. அனைத்து மொழிக்காரர்களும் ஒன்றா கச் சேர்ந்து கலகம் செய்தாக வேண்டியிருந்தாலும் அதற்கு தலைமையேற்கக் கூடிய தகுதியும், பெருமையும், தொன்மையும் ஒருங்கே கொண்டது தமிழினம்''’என்று தமிழினத்தைக் காப்பதற்கான முக்கியத்துவம் குறித்து பேசிமுடித்தார்.
எப்போதும் கவிஞர் வைரமுத்துவின் புத்தகங்களை கலைஞர் மட்டுமே வெளியிடுவார். அவர் இல்லாத தருணத்தில் தமிழாற்றுப்படை நூலை கலைஞரின் இடத்திலிருந்து வெளியிட்ட அவரது மகனும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டா லின், ""தன்னுடைய லட்சியத்தை, கொள்கையை எழுத்தின் மூலமாக எடுத்துச் சொல்வதற்கு ஒருபோதும் தயங்காதவர் கவிப்பேரரசு வைரமுத்து. அந்தத் துணிவுமிக்க எழுத்தாற்றலின் இன்னொரு வெளிப்பாடுதான் இந்த தமிழாற்றுப்படை. மிகச் சரியான நேரத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்திருக் கிறது. தமிழினுடைய பெருமைகளைச் சிதைத்து, தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க பல்வேறு முயற்சிகள் நடக்கிறது. மத்திய அரசு மும்மொழித் திட்டத்தைத் திணிக்கப் பார்க்கிறது. ரயில்வே துறையில் தொடங்கி மத்திய அரசு நிறுவனங்களில் தமிழை ஒழித்துக்கட்டும் வேலைக்கு ஆயத்தமாகி விட்டார்கள். நாம் எல்லோரும் போராட வேண் டிய நிலைக்கு வந்திருக்கிறோம். அந்தப் போராட் டத்திற்கு உறுதுணையாக தமிழாற்றுப்படை நமக்கொரு ஆயுதமாக கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய ஆயுதத்தை தமிழர்களுக்கு தந்திருக்கும் அண்ணன் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை, பாராட்டுகளை, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று முடித்துக்கொண்டார்
இறுதியாக ஏற்புரை வழங்கவந்த கவிப்பேரரசு வைரமுத்து, “""தமிழாற்றுப்படை என் மூளைப்பழத் தைப் பிழிந்தெடுத்த சாறு. என் வாழ்நாள் ஆவ ணம். என் உழைப்பின் உச்சம். இது தமிழர்களுக்கு நான் கொடுக்கும் எளிய கொடை. ஓர் இனத்துக்கு நேரக்கூடாத மிகப்பெரிய ஆபத்து என்பது, அது தன் பெருமிதத்தை உணராமல் இருப்பதுதான். என்ன நோக்கத்திற்காக நான் தமிழாற்றுப்படை எழுதினேன் என்பதற்கு பொருளாதார மேதை ப.சிதம்பரம் கொடுத்த விளக்கத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதனினும் ஒரு சிறந்த நோக்கம் அதற்குள் இருக்கிறது. தமிழில் எல்லாமும் இருக்கிறது என்று தமிழர்கள் முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது என்பதற்காக எழுதினேன். தமிழ் எதையும் படைப்பதற்கு தகுதிமிக்கது என்பதை தமிழர்களுக்கு உணர்த்த எழுதினேன்.
எதிர்காலத் தமிழர்களுக்கு இரண்டு கடமைகள் இருக்கின்றன. உலகுக்குள் தமிழ் -அது நடப்பதற்கு உலகம் முழுக்க தமிழ் மொழிபெயர்க்கப் படவேண்டும். இன்னொன்று தமிழுக்குள் உலகம் -உலகத்தை தமிழுக்குள் கொண்டு வரவேண்டும். இதைச் சொல்லத்தான் தமிழாற்றுப்படை எழுதினேன் என்பதை இந்த மன்றத்தில் வெளிப்படையாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். என்னுடைய அடுத்த படைப்பு என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். தொல்காப்பியம் வரை மூவாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற நான், இனியொரு மூவாயிரம் ஆண்டுகள் மேல்நோக்கி போக ஆசைப்படுகிறேன். கி.பி. ஐயாயிரமாம் ஆண்டிலே தமிழ் உலகம், இலக்கிய உலகம், மண்ணகம், விண்ணகம் எப்படி இருக்கிறது என்பதை எழுதி முடிக்க ஒரு தமிழ்மூளை தயாராகிக்கொண்டிருக் கிறது''’என்று தன் அடுத்த புத்தகத்துக்கான அறிவிப் போடு தன் செம்மாந்த உரையை நிறைவுசெய்தார்.
தமிழுக்கு இனி மரணமில்லை என்ற முழக்கத் தால் அதிர்ந்து அடங்கியது அரங்கம். தமிழ்தேடி வந்தக் கூட்டம், தன்னிறைவான நெஞ்சோடு திரும்பிச் சென்றது.
-ச.ப.மதிவாணன்