வளர்த்த கடா மார்பில் பாய்வது போல்,…இத்தனை நாள் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு கைகொடுத்து வந்த சமூக ஊடகங்கள், இப்போது தொடர்ச்சியாக பா.ஜ.க.வின் அவமானத்துக்கு காரணமாகி வருகின்றன. "அப்படி என்ன அவமானப் பட்டுட்டாக...'…என கேட்கிறீர்களா?…
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலை யில், கொரோனா முதல் வேளாண் சட்டங்கள் வரையிலான பல்வேறு விவகாரங்களால் கட்சிக்கு ஏற்பட்ட டேமேஜை சரிக்கட்ட விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டேமேஜ் கண்ட்ரோலின் ஒருபகுதி யாக உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூரிலிருந்து தொடங்கும் உத்தராஞ்சல் தேசிய நெடுஞ்சாலையை, அதன் பணிகள் முழுமையாக நிறைவடையாதபோதும் நவம்பர் 16-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்தார். நவம்பர் 25-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் ஜெவர் பகுதியில் நொய்டா சர்வதேச விமானநிலையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்த இரண்டு செய்திகளையும் சமூக ஊடகங்களில் வைரல் ஆக்கினர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்தியா போன்றோர், “கட்டிமுடிக்கப்பட்டதும் இதுவே ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும்” எனக் கூறுகின்றனர்.
உண்மையில் உலகின் மாபெரும் விமான நிலையம் சவூதி அரேபியாவின் தம்மம் விமான நிலையம்தான். 780 சதுர கிலோமீட்டரில் அமைந்துள்ள இது நொய்டா நகரைவிடப் பெரிதாகும். நொய்டாவுக்கு அருகில் அமையவிருக்கும் புதிய விமான நிலையம் 4,88,000 சதுர மீட்டர்களே ஆகும்.
மோடி, அடிக்கல் நாட்டியதும், சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள டாக்சிங் விமான நிலையத்தின் புகைப்படம் பா.ஜ.க.வினரால் சமூக வலைத்தளப் பக்கங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. தொண்டர்கள் செய்திருந்தால் பரவா யில்லை, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பிரஹலாத் சிங் படேல், அர்ஜுன் ராம் மேக்வால், உ.பி., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்ட பல்வேறு பா.ஜ.க. தலைவர்களும், இந்தத் தவறான படத்துடனான ட்வீட்டை பரப்பியவர்களுள் அடக்கம். பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே சீன அரசு ஊடகத்தைச் சேர்ந்த ஷென் ஷிவேய் என்ற பத்திரிகையாளர், “"இந்திய அரசின் உள்கட்டமைப்பின் சாதனைகளுக்காக சீன அரசின் டாக்சிங் விமான நிலைய படத்தைப் பதிவிட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்''’என ட்விட்டரில் பதிவிட... குட்டு வெளியாகி, பா.ஜ.க.வின் இமேஜ் உயர்வதற்குப் பதில், சர்வதேச அளவில் இந்திய மானம் காற்றில் பறந்தது.
சில மாதங்களுக்கு முன்பாகத்தான் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி, "தனது தலைமையின் கீழ் உத்திரபிர தேசம் உருமாற்றம் அடைகிறது' என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்திருந்தார். அதில் பிரம்மாண்டமான தோர் பாலத்தின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. உண் மையில் அந்தப் பாலம் கல்கத்தாவின் பாலம். இதையடுத்து திரிணாமுல் காங்கிரசின் பொதுச்செயலா ளர் அபிஷேக் பானர்ஜி, "யோகி ஆதித்யநாத் தலைமை யில் உ.பி.யை மாற்றுவதென்பது, மேற்குவங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டமைப்பு படங்களைத் திருடி தன்னுடைய சாதனையாக விளம்பரம் செய்துகொள்வது''’என காலை வாரினார்.
மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறி 2017-ல் ஹரியானா பா.ஜ.க. தலைவர் விஜேதா மாலிக் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில் ஒரு பெண்ணின் சேலையை ஒருவர் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்துவதுபோல் காட்சி இருக்க...…சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பு எழுந்தது. பிறகு அந்தக் காட்சி, போஜ்புரி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியென்பது வெளிப்பட்டு பா.ஜ.க. தலைகுனிவுக்கு உள்ளானது.
உத்தரப்பிரதேச தேர்தலுக்கான நாட் கள் நெருங்கிவரும் நிலையில், தனது கட்சித் தலைவர்களையும் தொண்டர்களையும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் எச்சரித்துள்ளார். சமீபத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பெயரில் போலி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு செய்திகள் பரப்பப்பட்ட நிலையில், காவல்துறையில் இதுகுறித்து புகார் செய்யப்பட்டது. சமாஜ் வாடி பதவிக்கு வந்ததும், ராமர் கோவில் இருந்த இடத்தில் மீண்டும் பாப்ரி மஸ்ஜித் கட்டப்போவதாக அகிலேஷ் பெயரில் போலி ட்விட்டர் பதிவுகள் பகிரப்படுகின்றன.
"மாநில தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜ.க.வினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், மக்களை முட்டாளாக்க என்ன பொய்யை வேண்டுமானாலும் பரப்புவார் கள். மக்களை அசல் பிரச்சினைகளிலிருந்து கவனம் திருப்புவதுதான் அவர்களது குறிக் கோள். சமூக ஊடகம் வலுவான தொடர்பு கொள்ளும் சாதனமாக வலுப்பெற்று வருகிறது. துரதிர்ஷ்டவசமாக பா.ஜ.க. அதனைத் தவறாகக் கையாண்டு வருகிறது. சமாஜ்வாடி தலைவர்கள் பெயரில் பா.ஜ.க. வெறுப்புச் செய்திகளைப் பரப்பிவருகிறது.
சமூக ஊடகங்களை தங்களுக்கான விளம்பர சாதனமாகவும், எதிர்க்கட்சிகளை இழிவுசெய்யும் கருவியாகவும் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் யுக்தியை எதிர்க்கட்சிகளும் மக்களும் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்ட னர். ஒருகாலத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த சமூக ஊடகங்களே, சமீபகாலமாக அக்கட்சிக்கு அவப்பெயரைக் கொண்டுவர ஆரம்பித்துள்ளன. என்ன செய்யப்போகிறது பா.ஜ.க?