தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. மீண்டும் ஆட்சியை தன்வசம் வைத்துக்கொள்ள அடிப்படை கட்டமைப்புகளை கூர்செய்துகொண் டிருக்கின்றது ஆளும் தி.மு.க. அந்த வகையில், "இந்த படை போதுமா?' என திருவண்ணாமலையில் வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டை நடத்தியது துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான டீம். "இளைஞர் படைக்கு சளைத்ததல்ல எங்களது பெண்கள் படை. இது வெல்லும் பெண்கள்' என தமிழ்நாடே மெச்சுமளவிற்கு திருப்பூர் மாவட்டத்தில் மாநாட்டை நடத்தியுள்ளது கழக மகளிரணி.

Advertisment

மண்டலம்தோறும் மாநாட்டை நடத்தலாம் என்ற திட்டத்தில், முதல் மாநாட்டை திருப்பூர் மாவட்டத்தில் மகளிரணி மாநாடாக நடத்தலாம் என முடிவெடுத்தது கழக மகளிரணி பொதுச்செய லாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமையி லான மகளிரணி. பல்லடம் அருகேயுள்ள காரணம் பேட்டையில் மாநாடு என தீர்மானிக்கப்பட, மாநாட்டுத் திடலுக்கு 15 ஏக்கரையும், வாகனங்கள் நிறுத்துமிடத்திற்காக 150 ஏக்கர் நிலத்தையும் தேர்வுசெய்தனர் மேற்கு மண்டல பொறுப்பாள ரான செந்தில்பாலாஜி அணியினர். மேற்குமண்ட லத்திற்குட்பட்ட 6 மாவட்டங்களிலுள்ள 39 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 12,380 பூத் கமிட்டிகளில் ஒவ்வொரு பூத்திற்கு 15 நபர்கள் வீதம் மாநாட்டில் கூடும் பெண்களின் கூட்டம் சுமார் 1.50 லட்சம் என கணக்கிடப்பட்டது. 

Advertisment

இதில் கலந்துகொள்ளும் மகளிருக்கு தேவை யான அளவு குடிநீர், ஸ்னாக்ஸ், தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குவது, தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை வசதி, மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மினி கிளினிக், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. குறிப்பாக, அத்தனையும் மகளிர் விரும்பும் பிங்க் நிறத்திலேயே பார்த்துப் பார்த்து விழா ஏற்பாட்டைச் செய்தனர் விழா ஏற்பாட்டாளர்கள்.

dmkmagalirmeet1

மாநாட்டிற்கு வருகைதந்த பெண்கள் கருப்பு, சிவப்பு வண்ண சேலைகளுடனும், இளம்பெண்கள் கருப்பு, சிவப்பு நிற சுடிதார் அணிந்தும் கலந்து கொள்ள, மாநாடே கருப்பு சிவப்பு வண்ணமாகக் காட்சியளித்தது. திரும்பிய திசையெங்கும் 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம், கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’ என்கின்ற சாதனைப் பதாகைகள் மாநாடு முழுவதும் நிரம்பியிருந்தன. மாநாட்டுத் திடலுக்கு தனது பிரச்சார வாகனத்தில் வந்த கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை வரவேற்க கருப்பு சிவப்பு உடையணிந்த கழக மகளிரணியினர் தங்களது இரு சக்கர வாகனங்களைக் கொண்டு பைலட் வாகனமாக இருந்து வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment

முன்னதாக, ஐந்தாண்டுகளில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், வெறும் கண்துடைப்புக் காக பெண்கள் பாதுகாப்பு மாநாடு நடத்துவதாக வும் சொல்லி கண்டித்து, தாராபுரம் பஸ் நிலைய மருகே கருப்பு பலூன் பறக்கவிட முற்பட்டது இந்து மக்கள் கட்சியின் மகளிரணி. காவல்துறை அவர்களை கைதுசெய்தது. இதேவேளையில், வெல்லும் பெண்கள் மாநாட்டைக் கண்டித்து நூற்றுக்கணக்கில் பலூன் பறக்கவிட்டதாக ஏ.ஐ. மூலம் தோற்றத்தை உருவாக்கியது பா.ஜ.க. தரப்பு.

இது இப்படியிருக்க, வெல்லும் பெண்கள் மாநாட்டில் கலந்துகொள்வற்காக கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் சென்னையிலிருந்து விமானத்தில் கோவைக்கு வர, அதே விமானத்தில் பயணித்தார் பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன். எதிர்பாராத சந்திப்பு என்றாலும், மூவரும் இணைந்து செல்பியாக புகைப்படம் எடுத்துக்கொள்ள, தன்னுடைய சமூக வலைத்தளத் தில் அந்த படத்தை பதிவிட்டு 'வெல்லும் பெண்கள்' என தலைப்பிட்டார் கனிமொழி.

மாநாட்டில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பலர் நினைவுப் பரிசு களை வழங்க, மாநாட்டின் வில்லையை நேரடி யாகவே மு.க.ஸ்டாலினின் சட்டையில் பதித்தார் செந்தில்பாலாஜி. மாநாட்டில் உரையாற்றிய துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின், "பல்லடத்தில் மாநாடு எழுச்சியுடன் நடைபெறுகின்றது. கடந்த 14-ஆம் தேதி திருவண்ணாமலையில் வடக்கு மண்டல இளைஞரணிக் கூட்டம் நடத்தினோம். 1.30 லட்சம் பேர் வரை அதில் கலந்துகொண்டனர். அதைப் பார்த்து சங்கி கூட்டமும், அடிமைக் கூட்டமும் புலம்பிக்கொண்டே இருந்தது. இந்த மகளிர் மாநாட்டைப் பார்த்ததும் அடுத்த பத்து நாட்களுக்கு அவர்கள் நிச்சயம் தூங்கப்போவ தில்லை. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா செய்தியாளர்களைச் சந்தித்தபோது, காஷ்மீரி மொழியில் பேசினார். அப்போது உருதுவில் பேசுங்கள் எனக் கேட்டபோது, இதை தி.மு.க. தலைவரிடம் கேட்கமுடியுமா எனக் கேட்டார். அந்தப் பேட்டி வைரலானது. மொழி உரிமை, மாநில உரிமை, பெண் உரிமை என்றால் தி.மு.க. தலைவர்தான் என்ற நிலையிருக்கிறது. வைக்கம் போராட்டத்தின்போது, பெரியாரை கைதுசெய்தனர். அவரை கைதுசெய்தால் போராட் டம் நீர்த்துப்போய்விடும் என நினைத்தார்கள். ஆனால், பெரியார் கைது செய்யப்பட்டவுடன் அவரது மனைவி நாகம்மையார் அந்தப் போராட் டத்தை முன்னெடுத்து நடத்தினார். பெரியார் என்ற பெயரைக் கொடுத்தவர்களே பெண்கள்தான். அண்ணா சுயமரியாதை திருமணத் திட்டத்தைக் கொண்டுவந்தார். கலைஞர் காவல்துறையில் பெண்களைக் கொண்டுவந்தார். பெண்களுக்கு சொத்துரிமை கொண்டுவந்தார். ஸ்டாலின் மகளிர் விடியல் பயணத்திட்டம் கொண்டுவந்தார். கல்வி உதவித் தொகையை கொண்டுவந்தார். கலைஞர் உரிமைத் தொகை 1.30 கோடி மகளிருக்கு வழங்கப்பட்டுவருகிறது. திராவிட மாடல் 2.0-வில் பெண்களுக்கு இன்னும் கூடுதல் நலத்திட்டங்களை முதலமைச்சர் கொடுப்பார். 

சங்கிகளால் தமிழகத்தை தொட்டுக்கூட பார்க்கமுடியாது. குஜராத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, பீகாரில் வென்றுவிட்டோம். அடுத்து தமிழ்நாடுதான் எனத் தெரிவித்தார். பாசிச சக்திகளுக்கு சலாம் போட்டு தமிழகத்தின் கதவுகளைத் திறந்துவிட நாம் அண்ணா தி.மு.க. கிடையாது; அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம்''’என்றார்.

கழக மகளிரணித் தலைவியான கனிமொழி யோ, "தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர். தமிழகத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' பெறும் 1.30 கோடிப் பெண்கள், "நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி யிருக்கிறோம்' என்று உரக்கச்சொல்வார்கள். இது தான் தி.மு.க.வின் சாதனை. தமிழகத்தில் தற்போது பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நடந்தபோது, அதைக் கண்டித் துப் போராட்டம் செய்யக்கூட அனுமதி வழங்கப் படவில்லை. தி.மு.க. நடத்திய தொடர் போராட்டங் களுக்குப் பிறகுதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட் டன. ஆனால், தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. சமீபத்தில் கோவையில் பெண்ணிற்கு எதிராக நடந்த சம்பவத்தில், 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதுதான் தி.மு.க.விற்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்'' என்றார்.

dmkmagalirmeet2

தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டா லின் பேசும்போது, "கருப்பு - சிவப்புக் கடல்போன்று இலட்சக்கணக்கான  தாய்மார்கள், இப்படி ஒரே இடத்தில் கூடியதாக வரலாறே இருக்காது. உங்க ளைப் பார்க்கும்போதே, பவர்ஃபுல்லாக இருக்கிறது! ‘வுமன் பவரால் தி.மு.க மீண்டும் பவருக்கு வரப்போவதும் உறுதியாகி இருக்கிறது’ மகிழ்ச்சி!  இப்படியொரு பவர்ஃபுல் மாநாட்டுக்கான பணி களை செய்த அன்புச் சகோதரர் செந்தில்பாலாஜி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்! 

நிறைய பேர், “இப்போது எதற்கு மகளிர் மாநாடு?”என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, பெண்களின் முன் னேற்றமே, நாட்டின் முன்னேற்றம்! பெண்களின் வெற்றியே, சமூகத்தின் வெற்றி! அடிமைத்தனத்தை உடைத்து, பகுத்தறிவுச் சுடரை கையிலேந்தி, தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா -முத்தமிழறிஞர் கலைஞர்  கட்டியெழுப்பிய தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறது.  நம்முடைய அந்த மாபெரும் மரபைப் பற்றி நம்மைக் கேள்வி கேட்கிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தொடக்கத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்கள். நிறைய இளம்பெண்கள் இங்கு வந்திருப்பதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது!    

பல்லடத்தில் ஒலிக்கும் உங்கள் குரல் தமிழ்நாடு முழுக்க கேட்கட்டும். பெண்களை மிஞ்சிய பேராற்றல் எதுவுமே இல்லை! வீட்டிலும் சரி, நாட்டிலும் சரி, பெண்களான நீங்கள் முடிவுசெய்துவிட்டால், அதை யாராலும் மாற்றமுடியாது! வெல்லும் தமிழ்ப் பெண்களே… வெற்றியைத் தேடித் தாருங்கள்! அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0-வும் பெண்களுக்கான ஆட்சியாகத்தான் இருக்கும்'' என்று உற்சாகத்துடன் பேசியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.