விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையை சேர்ந்தவர் சந்தியா, இவரது கணவர் சம்பத். அதிகம் படிக்காத மீன்பிடி தொழிலாளர் குடும்பம். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஷாலினி, 3 வயதில் யாமினி, ஒன்றரை வயதில் சந்தோஷ் என குழந்தைகள் உள்ளனர். நான்காவது முறையாக கர்ப்பமானவர், கருவை கலைத்துவிட்டு, குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள மருத்துவமனை சென்றவர், தற்போது உருக்குலைந்த உடலோடு படுத்த படுக்கையாகவுள்ளார்.
என்ன நடந்தது என படுத்தபடியே இருக்கும் சந்தியாவிடம் பேசியபோது, "மூன்று குழந்தைகள் பிறந்ததும் நான் காப்பர்டீ வச்சிக்கிட்டேன். திடீர்னு மாதாந்திரநாள் தள்ளிப்போனதும் சந்தேகமாகி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி என்னோட அக்கா புவனேஸ்வரியோட போனேன். செக் செய்துட்டு கர்ப்பமாயிருக்கேன்னு சொன்னாங்க. எனக்கு மூன்று குழந்தைகளிருக்கு, அதனால் கருவை கலைச்சிடறேன், குடும்ப கட்டுப்பாடு செய்துக்கறேன்னு சொன்னேன். அவுங்களும் சரின்னு அட்மிட் செய்து, சில டெஸ்ட்கள் எடுத்தாங்க. ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஆபரேஷன் செய்தாங்க. அன்னையிலேயிருந்தே வயிற்றுவலி. வயிறும் வீங்கிக்கிட்டேயிருந்தது, சாப்பிட முடியல, பாத்ரூம் கூட போகமுடியல. ஆகஸ்ட் 15-ஆம் தேதி மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்தாங்க. அப்பவும் எதுவும் மாறல'' என்றார்.
அதன்பின் நடந்தவற்றை சந்தியாவின் கணவர் சம்பத், புவனேஸ்வரி கணவர் மகாலிங்கம் இருவரும் நம்மிடம்... "டாக்டர், நர்ஸ்ங்ககிட்ட என்னாச்சின்னு கேட்டு எதுவும் பதில் சொல்லல. ஆபரேஷன் செய் துட்டு தரையில பாய் போட்டு படுக்கவச்சதால குளிர்ல காய்ச்சல் வந்துடுச்சி. அதுக்கப்பறம் டீனை பார்த்து சொன்னதுக்கு, வெளியில போன்னு சத்தம் போட்டு செக்யூரிட்டிகள வச்சி வெளி யில அனுப்பிட்டார். நாங்க அழுது புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிக் கிட்டு போறோம். அவுங்கள வெளியில அனுப்புங்கன்னு கேட்டதுக்கு சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பிட்டலுக்கோ, எக்மோர் ஆஸ்பிட்டலுக்கோ போறதுன்னா அனுப்ப றோம், இல்லன்னா அனுப்பமாட்டோம்னு சொன்னாங்க. எங்களுக்கு அப்பத்தான் சந்தேகம் வந்தது. ஒருவாரத்துக்குப் பிறகு செப். 2-ஆம் தேதி அவுங்களே 108 ஆம்புலன்ஸ் மூலமா ஜிப்மருக்கு அனுப்பி வச்சாங்க.
அங்க அட்மிட் செய்ததுக்கப்பறம் ஒருநாள் ஆஸ்பிட்டல்ல இருக்கற போலீஸ் பூத்லயிருந்து கூப்பிட்டு தப்பா ஆபரேஷன் செய்ததால் யூரின் டியூப் கட் செய்திருக்காங்கன்னு டாக்டர் தகவல் அனுப்பியிருக்கார்னு சொன்னப்பதான் எங்களுக்கு விஷயமே தெரியும். அதுக்கப்பறம் ஜிப்மர் டாக்டர்ங்க எங்கக்கிட்ட, யூரின் டியூப்லயிருந்து சிறுநீர் வயிற்றுக்குள்ள தேங்கியதால் வயிறு வீங்கியிருக்கு, அதோட இடது கிட்னியும் பாதிக்கப்பட்டிருக்குன்னு சொல்லி சிகிச்சை அளிச்சாங்க.
திருவண்ணாமலையில் தப்பான ஆப்ரேஷன் செய்துட்டு அதை மறைச்சி, சரி செய்யாம ஒரு மாதம்வரை ஆஸ்பத்திரியில வச்சிருந்தது என்னங்க நியாயம்? டாக்டரை கடவுளா நினைச்சத்துக்கு இப்படி எங்களை ஏமாத்தலாமா? வீட்டுக்கு வந்து ஒருவார மாச்சி, இன்னமும் எழுந்து உட்கார முடியல. நாங்க தினமும் வேலைக்கு போனால்தான் சாப்பாடு, இரண்டு மாசமா ஆஸ்பத்திரியே கதின்னு கிடந்தோம். 3 குழந்தைகளை வச்சிக் கிட்டு வேலைக்கு போக முடியாம தவிச்சிக் கிட்டிருக்கோம்'' என கண் கலங்கினர்.
இதுபற்றி விளக்கமறிய திருவண்ணா மலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் திருமால்பாபுவின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்ட போது, பிஸி பிஸி என்றே பதில் வந்தது. லேண்ட்லைன் நம்பரில் இருந்து நமது லைனுக்கு வந்தவர், டீன் அலுவலகத்தில் உள்ள உதவியாளர் என்றும், சார் மீட்டிங்கில் இருக்கிறார் என்றும் சொல்லியுள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஆளும்கட்சி பிரமுகரான மருத்துவர் கதிரவனின் ராஜ் மருத்துவமனை யில், சங்கராபுரம் ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்த ராஜகுமாரி முருகனுக்கு கர்ப்பப்பையில் நீர் கொப்பளத் துக்கான அறுவை சிகிச்சை கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி நடந்தது. அறுவை சிகிச்சையின்போது முறையான மருத்துவர்கள் உடனிருக்கவேண்டும் என்கிற மருத்துவ விதிகளைமீறி நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் போது அதிகமாக வழங்கப்பட்ட மயக்க மருந்தால் அந்த பெண்மணி கோமாவுக்குப் போய் இறந்ததாகக் கூறப்படு கிறது. மருத்துவமனை வாசலில் அமர்ந்திருந்த உறவினர் களுக்கே தெரியாமல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு ராஜகுமாரி உடலை அனுப்பி ஐ.சி.யூவில் வைத்து சீரியஸ் என நடத்திய நாடகத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் உடந்தையென கூறப்படுகிறது.
மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டுமுறை சாலை மறியல் செய்தனர், ஆளும்கட்சி பிரமுகர்கள் பஞ்சாயத்துப் பேசி விவகாரத்தை சரிக்கட்டினர். அதன்பின்பே அந்தப் பெண்மணி இறந்தாரென 22-ஆம் தேதி அறிவித்தது அரசு மருத்துவக் கல்லூரி என்று குற்றம்சாட்டுகிறார்கள் பலரும். திருவண்ணாமலை மாவட்ட சி.பி.எம். கட்சி, தவறான அறுவை சிகிச்சையால் இறந்த பெண்மணிக்காக போராடிய பின்பே போலீஸ் வழக்குப்பதிவு செய்தது, மருத்துவ விசாரணை நடத்தப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டீன் விளக்கம் அளித்தால் பிரசுரிக்க தயாராகவுள்ளோம். மருத்துவர்களை கடவுளாகவே மக்கள் நினைக்கிறார்கள். ஏழை மக்களிடம் மட்டும் கருணை காட்ட இப்படி சில அரசு மருத்துவர்களே தயங்குவது ஏன்?