ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சைக் கேட்க லட்சக்கணக்கானோர் காத்துக் கிடப்பது யாவரும் அறிந்தது. ஆனால், வைகோவே கல்லூரி மாணவர்களின் பேச்சை பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து ரசித்த நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
சென்னையில் ம.தி.மு.க. மாணவரணி சார்பில் மாநில அளவிலான பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று செப்டம்பர் 2-ல் நடத்தப்பட்டது. புரசைவாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ‘பெரியார்-அண்ணா’ என்ற தலைப்பில் பேசுவதற்காக, 2,200 கல்லூரி மாணவர்களில் இருந்து தகுதிபெற்ற 21 பேர் கலந்துகொண்டனர். ம.தி.மு.க. மாணவரணி மாநில செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் விழா ஏற்பாடுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
முதன்மை நடுவர் முனைவர் கு.திருமாறன் போட்டி விதிமுறைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னபோது குறுக்கிட்ட வைகோ... "என்னைப் புகழ்ந்து பேசினாலோ, என் பெயரை உச்சரித்தாலோ இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்'’ எனச் சொன்னதும் அரங்கில் சிரிப்பலைகள் பரவின.
போட்டி தொடங்கியதும் மேடையில் இருந்து கீழிறங்கிய வைகோ, மேடையின் வலதுபுறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்தபடி, மாணவர்களின் பேச்சைக் கண்டும் கேட்டும் ரசித்தார். போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் திராவிடத்தின் பெருமை, அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் மற்றும் சமகாலத் தேவை குறித்து அனல்பறக்கப் பேசினர். காலையில் போட்டி, மதிய உணவுக்குப் பிறகு பரிசு வழங்கும் நிகழ்வு என இரண்டு அமர்வுகளாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது தீர்ப்பு குறித்த சந்தேகத்திற்கு இடமளிக்கலாம் என்பதால், பரிசு வழங்கிய பிறகு மதியஉணவு உண்ணலாம் என வைகோ கேட்டுக்கொண்டார்.
நடுவர்களாகப் பங்கேற்றவர்கள், ""பல பேச்சுப் போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்திருக்கிறோம். ஆனால், தீர்ப்பு வாசிக்கும் பொறுப்பு எங்களுக்குக் கொடுக்கப்பட்டதில்லை. பல சமயங்களில் எங்கள் முடிவுகளுக்கு மாறாக தீர்ப்பு வழங்கப்பட்டதுண்டு. ஆனால், இங்கு தீர்ப்பு வழங்கும் சுதந்திரத்தை எங்களுக்கே வைகோ தந்துவிட்டார். மகிழ்ச்சியாக இருக்கிறது''’என பெருமிதம் கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “""திராவிடத்தை நிலைநிறுத்தும் வகையில், பெரியார்-அண்ணா பாரம்பரியத்தைப் போற்றும் நிகழ்வாக இந்தப் போட்டி அமைந்திருக்கிறது. இதுமாதிரியான போட்டிகளின் மூலம் பெரியா-அண்ணாவை அறியாத மாணவர்களுக்கும், அவர்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் இதன்மூலம் நாம் ஏற்படுத்தி வருகிறோம்''’என தெரிவித்தார்.
போட்டியில் வெற்றிபெற்ற முதல் மூன்று மாணவர்கள் தலா ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும், பெரியார்-அண்ணா முகம் பதித்த தங்கம், வெள்ளி பதக்கங்களும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
-அ.அருண்பாண்டியன்