"நாடு பாதுகாப்பானவர்கள் கைகளில் இருக்கிறது' என்று பிரதமர் மோடி தனது கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அதற்கு ஒத்து ஊதுவது போல முதல்வர் எடப்பாடியும் பேசினார். அந்த நேரத்தில்தான், ராணுவ அமைச்சகத்தில் இருந்து ரஃபேல் விமானம் வாங்குவது தொடர்பான ஆவணங்கள் திருடு போயிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசே தெரிவித்தது அதிர்வலைகளை உருவாக்கியது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு அமித்ஷா வழக்கு தொடர்பான ஆவணங்கள், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அனுப்பிய தீர்மானம் உள்ளிட்டவை காணாமல் போன நிலையில் ரஃபேல் ஆவணத் திருட்டு சர்ச்சையை பற்றவைத்தது.
இந்திய ராணுவத்துக்கு பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்க மோடி அரசு முடிவு செய்தது. காங்கிரஸ் அரசு 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பேசப்பட்ட தொகையைவிட அதிக தொகைக்கு மோடி அரசு பேரம் பேசியிருந்தது.
இந்த விமானங்களுக்கான உதிரிப்பாகங்களை தயாரிக்கும் பொறுப்பை அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகலிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அனுபவமே இல்லாத புதிதாக தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸிற்கு வழங்க மோடி ஏற்பாடு செய்திருந்தார். இந்த பேரத்தில் பிரதமர் அலுவலகமே நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டினார்.
இந்நிலையில்தான், ரஃபேல் விமான பேரத்தில் முறைகேடு நடந்திருப்பதால் அந்த பேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2018 டிசம்பர் இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டன.
மத்திய அரசு முழுமையான தகவல்களைத் தரவில்லையென்றும் அதனால் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீது 6 ஆம் தேதி புதன்கிழமை விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் விமான பேரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டதற்கான ஆதாரத்துடன் "தி இந்து' நாளிதழில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் விரிவான கட்டுரை எழுதியிருந்தார்.
அந்த கட்டுரையை மேற்கோள்காட்டிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "மத்திய அரசு முக்கியமான உண்மைகளை மறைத்துவிட்டது' என்றும், "உண்மைகளை வெளியிட்டிருந்தால் ரஃபேல் ஒப்பந்தத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்திருக்காது' என்றும் கூறினார்.
பிரசாந்த் பூஷனின் வாதத்தை எதிர்த்த அரசு அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ""ராணுவ அமைச்சகத்திடம் இருந்த ரகசிய ஆவணங்கள் திருடு போயிருக்கின்றன. அந்த ஆவணங்களை வெளியிட்டது சட்டப்படி குற்றம். இதுதொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. ஆனால் விசாரணை நடைபெறுகிறது'' என்றார்.
மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்ட இந்த விவரங்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ""ரஃபேல் ஊழல் தொடர்பாக மோடி மீது வழக்குப் பதிவுசெய்ய போதுமான ஆதாரம் இருக்கிறது'' என்று காங்கிரஸ் கட்சி கூறியது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் மார்ச் 7-ஆம் தேதி காலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது மோடி அரசை கடுமையாகச் சாடினார்.
""இந்திய இளைஞர்களின் 2 கோடி வேலைவாய்ப்பு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மாயமாக்கிய மோடி அரசு, இப்போது ரஃபேல் விமான பேரம் தொடர்பான ஆவணங்களையும் மாயமாக்கியிருக்கின்றது. ஆவணங்களை வெளியிட்ட ஊடகங்கள் மீது விசாரணை என்றால், 30 ஆயிரம் கோடியை திருடி அனில் அம்பானிக்கு கொடுத்த மோடி மீது விசாரணை இல்லையா?''’என்று காட்டமாகக் கேட்டார்.
இதனிடையே, ஆவணங்களை வெளியிட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்து என்.ராம், “""ஆவணங்கள் உண்மையானவை. அரசு மூடி மறைத்ததால் நாங்கள் வெளியிட்டோம். அவற்றை நாங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடவில்லை. நம்பிக்கையான இடத்திலிருந்து பெற்றோம். அவற்றை நாங்கள் எங்கிருந்து பெற்றோம் என்பதை கூறமுடியாது.
இத்தகைய ஆவணங்களை வெளி யிடுவதற்கு அரசியல் சட்டம் எங்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது. பொதுநலன் சார்ந்த முக்கிய தகவல்களை புலனாய்வு இதழியல் வழியாக வெளியிடுவது எங்கள் கடமை''’என்றார் உறுதியான குரலில்.
-ஆதனூர் சோழன்