"அவர்களாகவே முன்வந்து நிலத்தைக் கொடுக்கிறார்கள். ஒரு சிலர்தான் பிரச்சினை செய்கிறார்கள்' -இதுதான் சென்னை -சேலம் பசுமை வழி விரைவுச்சாலை திட்டம் பற்றி முதல்வர் எடப்பாடியின் திருவாய்மொழி.

முதன்முதலில் ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்திற்கு நிலம் கையகப்படுத்தச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை, அங்குள்ள விவசாயிகள் முற்றுகையிட்டு, நில எடுப்புக்கு கடும் எதிர்ப்பு காட்டினர். உண்ணாமலை என்ற மூதாட்டி தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். மூதாட்டி என்றும் பாராமல் அவரையும், உறவினர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.

salem-protest

அதற்கு அடுத்த நாளும் ஆச்சாங்குட்டப்பட்டியில் இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளரான கல்லூரி மாணவி வளர்மதியைக் காவல்துறையினர் கைது செய்தனர். அதற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகான், பியூஷ் மானுஷ் ஆகியோரை கைது செய்து, எதிர்ப்புக்குரல் எழாதபடி வன்மத்துடன் அடக்கியிருந்தது காவல்துறை.

Advertisment

வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி கிராமங்களுக்குள் நிலம் அளவீட்டுக்குச் செல்லும்போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், அணிவகுப்பு நடத்தினர்.

இதற்கிடையே, அடுத்த அஸ்திரத்தை சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி ஏவினார். "சேலம் மாவட்டத்தில், சென்னை -சேலம் பசுமைவழி விரைவுச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு (ஒரு ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர்) குறைந்தபட்சம் 21.52 லட்சமும், அதிகபட்சமாக 9.04 கோடி ரூபாயும் இழப்பீடு கிடைக்கும்' என்றார்.

""வீடு இழந்து இடம் பெயரும் நிலையில் உள்ளோருக்கு மாதந்தோறும் பிழைப்பு ஊதியமாக 3000 ரூபாய் வீதம் ஓராண்டுக்கு 36 ஆயிரம் ரூபாயும், மீள் குடியேற்றத்திற்காக ஒரே தவணையில் 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

Advertisment

நில ஆர்ஜிதம் செய்வதால் மரங்களை இழக்க நேர்ந்தாலும் இழப்பீடு உண்டு. அதாவது முதிர்ந்த தென்னை மரங்களுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய், மாமரத்திற்கு (ஒட்டு ரகம்) 30 ஆயிரம் ரூபாய், உள்ளூர் ரகத்திற்கு 13 ஆயிரம் ரூபாய், பாக்கு மரத்திற்கு 8,477 ரூபாய் கிடைக்கும். கொய்யா மரத்திற்கு 4,200 ரூபாய், நெல்லி மரத்திற்கு 9600 ரூபாய், புளிய மரத்திற்கு 9,375 ரூபாய், பனை மரத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்'' என்று கலெக்டர் ரோகிணி அறிவித்தார்.

salem-protest

சென்னை-சேலம் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக "மெசர்ஸ் ஃபீட்பேக் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அந்த நிறுவனம், இந்த பசுமை வழி விரைவுச்சாலைத் திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ 1,900 ஹெக்டேர் நிலம் மட்டுமே ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

கலெக்டர் ரோகிணி அறிவித்த சலுகைகள் குறித்து சில விவசாயிகளிடம் பேசினோம்...

""எங்களுக்கு இவங்க யாருங்க சலுகை காட்டுறது? நாங்களா நிலத்தைக் கொடுத்தோம் முதலமைச்சரே பச்சைப் பொய் சொல்றாரு.. நாங்க கொடுக்கலை.. அடிச்சுப் புடுங்குறாங்க...''’ என்றனர் பெரும்பாலான விவசாயிகள்.

சேலம் மாவட்டம் சித்தனேரியைச் சேர்ந்த ரவி, ""எத்தனை கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தாலும் எங்களால் ஏற்க முடியாது. சட்ட ரீதியாக இப்பிரச்னையை அணுக முடிவு செய்திருக்கிறோம்'' என்றார்.

பூலாவரியைச் சேர்ந்த விவசாயி மோகனசுந்தரம் கூறுகையில், ""சேலம் -உளுந்தூர்பேட்டை நான்குவழிச் சாலைக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் முழுமையாக செட்டில்மென்ட் கிடைக்கவில்லை. அப்போது நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகையை அதிகப்படுத்துவதற்காக அப்போதைய கலெக்டர் மகரபூஷணம், சதுர அடிக்கு 1,200 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால், நீதிமன்றம் அந்த தீர்மானத்தை நிராகரித்துவிட்டது.

அதேபோலத்தான் இப்போதுள்ள கலெக்டர் ரோகிணி, நிலத்தின் வழிகாட்டி மதிப்பைவிட நான்கு மடங்கு அதிகமாக இழப்பீடு தொகை தருவதாகச் சொல்வதெல்லாம் நிலத்தைக் கையகப்படுத்தும் வரைதான். இதை விவசாயிகள் நம்பி ஏமாந்து விடக்கூடாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஹெக்டேருக்கு 20 லட்சம் தரப்படும் என்று சட்டப்பேரவையில் சொல்லியிருக்கிறார். பசுமைவழிச்சாலைத் திட்டம் என்பதெல்லாம் சேலத்தில் உள்ள கனிமங்களை தனியார் நிறுவனங்கள் சுரண்டி எடுத்துப் போக மட்டுமே வழிவகுக்கும். அடுத்த 50 ஆண்டுகளில் சேலம் மாவட்டம் பாலைவனமாகி விடும்,'' என்றார் வேதனையுடன்.

raviசாதிய அமைப்புகள் மூலமாகவும் ஆளும் தரப்பு இத்திட்டத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறது. கள் இயக்க நல்லசாமி, செங்கோட்டுவேல் தலைமையிலான பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்திற்கு பலத்த ஆதரவு கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, ஜூன் 24-ஆம் தேதி, சேலம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "விவசாயிகள் தாங்களாக முன்வந்து நிலம் கொடுக்கிறார்கள்' என்றதுடன், ''நாட்டின் வளர்ச்சிக்கும், வாகன பெருக்கத்திற்கும் ஏற்ப, எட்டு வழி பசுமைச்சாலை அவசியமாகிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியைவிட அ.தி.மு.க. ஆட்சியில் நிலம் வழங்குவோருக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படுகிறது'' என்றார்.

உண்மையில், இந்த பசுமைவழி விரைவுச்சாலை நாட்டின் வளர்ச்சிக்கானதா? என்பதுதான் இப்போது மக்கள் முன் எழுந்துள்ள மிகப்பெரும் கேள்வி.

சேலம் மாவட்டம் கஞ்சமலை, திருவண்ணாமலை கவுத்தி மலை, வேடியப்பன் மலைகளில் இரும்புத்தாது பொதிந்து கிடப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சாலை போக்குவரத்தில் இந்தியா உலகளவில் 35-ஆவது இடத்தில் இருக்கிறது. அதை மேம்படுத்தினால்தான் பிரதமர் மோடி எதிர்பார்க்கும் முதலீடுகள் இந்தியாவுக்குள் வர முடியும். அதற்காகவே இந்த "பாரத்மாலா பரியோஜனா' திட்டத்தை விரைவு படுத்துகின்றன மத்திய, மாநில அரசுகள்.

இந்த திட்டம் இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. தமிழ்நாட்டில் தொழில் வழித்தடம் அமையவுள்ள சென்னை, ஓசூர், கோவை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து நகரங்களையும் இணைக்கும் வகையில் மேலும் புதிய சாலைத் திட்டங்களை முன்னெடுக்கும் முயற்சிகளும் நடந்து வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்.

எதிர்காலத்தில் ஓசூர், சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் அமையவுள்ள ராணுவத் தளவாட உற்பத்தி ஆலைகளில் இருந்து சரக்கு போக்குவரத்து கையாளவும் இந்த பசுமைவழி விரைவுச்சாலை துணைபுரியும் என்கின்றனர். இதனால் தொழில் வளம் பெருகலாம். ஆனால் உணவு உற்பத்திக்கு எங்கே போவது?

உழவை மறுதலித்து தொழிலுக்கு மட்டும் வந்தனம் செய்வது வளர்ச்சி ஆகாது. வாழ்வுரிமையைப் பறிக்கும் கொடூரச் செயலாகும்.

-இளையராஜா

திருவண்ணாமலை நிலவரம்!

சேலம்-சென்னை எட்டுவழிச் சாலைக்காக சேலம் மாவட்டத்தில் 35 கி.மீ. நிலமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 124 கி.மீ. நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன.

dmkprotest

சேலம் மாவட்டத்தில் ஆளும் கட்சி தவிர மற்ற அத்தனை கட்சிகளும் அமைப்புகளும் போராட்டம் நடத்துகின்றன. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் (அ.தி.மு.க. பன்னீர்செல்வம்), செய்யாறு (அ.தி.மு.க. தூசி மோகன்), செங்கம் (தி.மு.க. கிரி), கீழ்ப்பெண்ணாத்தூர் (தி.மு.க. பிச்சாண்டி), போளூர் (தி.மு.க. கே.வி.சேகரன்), வந்தவாசி (தி.மு.க. அம்பேத்குமார்) ஆகிய ஆறு தொகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதில் அரசின் நிலைப்பாட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரிக்கிறார்கள். அதேநேரத்தில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நால்வரும் எதிர்ப்பு காட்டாமல், மறைமுக ஆதரவாக இருந்தனர்.

இந்த மறைமுக மௌனம், ஒன்றிய -கிராம தி.மு.க.வினரிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நக்கீரன் இணையதளத்தில் விரிவான செய்தி வெளியானது. இதையறிந்த தி.மு.க. தலைமை தி.மலையில் உள்ள தி.மு.க. நலம் விரும்பிகளிடம் விசாரித்தறிந்திருந்தது. அதோடு, பா.ம.க. தலைமை 5 மாவட்டங்களில் மக்களிடம் கருத்துக் கேட்புபற்றி செய்திகளும் வெளியாயின.

இதன்பிறகு திருவண்ணாமலை தி.மு.க. மா.செ. எ.வ.வேலுவை தொடர்பு கொண்டு ஆர்ப்பாட்டத்துக்கு உத்தரவிட்டார் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

காவல்துறையினரோ, ""இப்போது எட்டுவழிச்சாலை பிரச்சினையில் தி.மு.க., பா.ம.க., வி.சி.க., ஆகிய பெரிய கட்சிகள் போராட்டம், ஆர்ப்பாட்டம், கருத்துக் கேட்பு என இறங்கிவிட்டன. இதனால் பொதுமக்கள் பயமில்லாமல் போராட்டக் களத்திற்கு வருவார்கள். அவர்களை அடக்குவது கடினம்'' எனக் கூறுவதோடு, அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

-து.ராஜா