"ஹலோ தலைவரே... பட்ஜெட் கூட்டத் தொடர் விறுவிறுப்பாத் தொடங்குது. காகித மில்லாத டிஜிட்டல் பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் என்னென்ன இருக்கும்ங்கிற எதிர்பார்ப்பும் நிலவுதே?''”

"நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் டிஜிட்டல் பட்ஜெட்டுக்காக, சட்டமன்றக் கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தில் 234 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளின் இருக்கைகளில், கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கு. அதோட, அவங்க எல்லோருக்கும் கையடக்க டேப் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கு. இதனை அரசின் எல்காட் நிறுவனம் கடந்த மாதமே அவசரம் அவசரமாகக் கொள்முதல் செஞ்சிடுச்சி. அதே வேகம் மக்களுக்கான திட்டங்களை அறிவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் இருக் கும்னு எதிர்பார்க்கப்படுது.''”

"ஒருமாத காலத்துக்கு மேலே பட்ஜெட் கூட்டம் நடக்கும்னு அறிவிக்கப்பட்டி ருக்கே?''”

rang

Advertisment

"சபாநாயகர் அப்பாவு நடத்திய அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், பட்ஜெட் தாக்கல், அதன் மீதான விவாதங்கள், அதற்கு பதிலுரைன்னு 5 நாட்களுக்குள் முடித்து விட்டு, செப்டம்பரில் துறைரீதியிலான மானியக் கோரிக்கைகளை நிறைவேத்திக்கலாம்ன்னு ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கு. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலினோ மானியக் கோரிக்கையை ஏன் தள்ளிப்போடணும்னு கேட்டிருக்கார் அதனால், பட்ஜெட் கூட்டத் தொடர் இடைவெளி இல்லா மல் செப்டம்பர் 21-ந் தேதிவரை நடக்கப்போகுது.''”

"செப்டம்பர் 15-க்குள், நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்தை யும் நடத்தி முடிக்கணும்னு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்குதே?''”

"செப்டம்பர் 15-க்குள் நிலுவையில் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலை எல்லாம் நடத்தி முடிக்கணும்னு உச்சநீதிமன்றம் கெடு விதிச்சிருப்பது உண்மைதான். ஆனால், பட்ஜெட் கூட்டத்தையே செப்டம்பர் 21 வரை நடத்தவேண்டிய நெருக்கடி இருப்பதால், நீதிமன்றத்தில் காலஅவகாசம் கேட்டு, தேர்தலை டிசம்பர் வாக்கில் நடத்தலாம்ங்கிற முடிவுக்கு ஸ்டாலின் வந்திருக்காராம். பலவகையிலும் உள்ளாட்சித் தேர்தலை நம்பியிருந்த ஆளுந்தரப்பு பிரமுகர்களுக்கு இதில் ஏமாற்றம்தானாம்.''”

Advertisment

"தனக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தைக் காலி பண்ணித் தராமல் ஒரு அதிகாரி இழுத்தடிப்பதால், அமைச்சர் ஒருவர் அதிருப்தியடைஞ்சிருக் காராமே?''”

"உங்க காதுக்கும் இந்த செய்தி வந்துடுச்சுங்களா தலைவரே, மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருக்கும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜகோபாலுக்கு சென்னையில் பங்களாக்கள் இருக்கு. அப்படி இருந்தும் எடப்பாடி ஆட்சியில், அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் பங்களா ஒன்று, அவருக்கு ஒதுக்கப்பட்டது. இப்போது ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் நிலையில், புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்குவதற்காக, மாஜியாகிவிட்ட அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் குடியிருந்த பங்களாக் களைக் காலி செய்து தரும்படி, ராஜகோபால் உட்பட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது பொதுப்பணித் துறை. இருந்தும், நோட்டீஸ் விட்டு 3 மாதங்கள் ஆகியும், தான் வசித்துவந்த பங்களாவைக் காலி செய்யாமல் அடம் பிடித்து வருகிறாராம் ராஜகோபால். இந்த பங்களா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான மனோ தங்கராஜுவுக்கு ஒதுக்கப்பட்டது. அதிகாரி காலி செய்யாததால, அமைச்சரால் குடிபோக முடியலைங் கிறதுதான் தகவல்.''”

"அ.தி.மு.க. புதிய அவைத்தலைவர் விவகாரத்தில் எடப்பாடிக்கு, ஓ.பி.எஸ். ஹெவி ஷாக் கொடுத்திருக்காரே?''”

ops

"உண்மைதாங்க தலைவரே, மதுசூதனன் மரணமடைந்ததால், அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க. புள்ளிகள் பலரும் காய் நகர்த்திக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையில், ஓ.பி.எஸ்.சிடம் எடப்பாடி, நம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் சசிகலாவை உட்கார வைக்கணும்னு பா.ஜ.க. எதிர்பார்க்குது. அதுக்கு நாம் இடம் கொடுத்துடக் கூடாது. அதனால், கட்சி நிர்வாகத்தை மாற்றி நாம் அமைப்போம். நான் பொதுச்செயலாளரா இருந்துக்கறேன். நீங்க அவைத்தலைவர் பொறுப்பை ஏத்துக்கங்கன்னு சொல்லியிருக்கார். உடனே, ஓ.பி.எஸ்., இப்ப கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் இருக்கேன் . நீங்க சொன்னா, அவைத்தலைவர் பதவியையும் ஏத்துக்கறேன்னு சொல்லியிருக்கார். இதைக்கேட்டு ஷாக்கான எடப்பாடி, ஒட்டுமொத்தக் கட்சியையும் ஓ.பி.எஸ் சுவாஹா பண்ணப் பார்க்கறார்னு புலம்பறாராம்.''

opss

"நானும் ஒரு முக்கியமாக தகவலைப் பகிர்ந்துக்கறேன். டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஸ்கோர் கமிட்டி, மோகன் பகவத் தலைமையில் கூடியிருக்கு. அந்தக் கூட்டத்தில், "தமிழகத்தில், தி.மு.க. அரசு, ஆன்மீகவாதி களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில், செயல்படுது. கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்பதோடு, கோயில்களை சிறப்பாகப் பராமரிப்பதோடு, குடமுழுக்கு விழாக்களையும் நடத்துது. அதோடு மாநில மக்களின் மனம் குளிரும் வகையில் தமிழ் அர்ச்சனைகளும் நடத்தப்படுது. அதனால், நாம் பகிரங்கமாகவே ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசைப் பாராட்டணும்'னு பேசியிருக்காங்க. "கொள்கை எதிரிகள் பாராட்டினால் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்'னு சொல்றாங்க திராவிட இயக்கத்தினர்.''”

__________________

இறுதிச்சுற்று!

ஆறே மாதம்! பொள்ளாச்சி கொடூரத்திற்கு நீதி!

தமிழ்நாட்டை அலறவைத்த அந்த வீடியோதான் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. 2019-ல் அன்றைய ஆளுந்தரப்பு பின்புலத்துடன் இளம்பெண்கள் பாலியல் கொடுமைக்குள்ளான வீடியோவை நக்கீரன் வெளிக்கொண்டு வந்தது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில்... மாஜிகளின் பின்னணி பற்றிய செய்திகளும் வெளிப்பட்டன. கைதான அருளானந்தம் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய நிலையில், அதனை எதிர்த்த தமிழக அரசு தரப்பு, "சி.பி.ஐ. விசாரணை தாமதமாகாமல் இருக்க தமிழக காவல்துறை ஒத்துழைக்கும்' என தெரிவித்தது. இதையடுத்து அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி, மக்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை ஆறு மாதங்களுக்குள் விரைந்து விசாரித்து முடிக்க, கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.