காவிரியில் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.
மேட்டூர் அணையில் இருந்து இரண்டு லட்சம் கனஅடி நீர், பவானிசாகரில் இருந்து 75 ஆயிரம் கனஅடி நீர், அமராவதியில் இருந்தும், நொய்யலில் இருந்தும் உபரிநீர் ஆக காவிரியில் மூன்று லட்சம் கனஅடி நீர் நுங்கும் நுரையுமாய் பொங்கிப் புரண்டு அடித்துப் பாய்கிறது.
எடப்பாடி, ஈரோடு மாவட்ட அம்மாப்பேட்டை, நெருஞ்சிப்பேட்டையில் பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பவானியில், கருங்கல்பாளையத்தில், கொடுமுடியில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளம் அன்றாடம்காய்ச்சிகளின் வயிற்றில் ஈரத்துணியைப் போர்த்தியது.
நீலகிரி மாவட்ட மழையும் மாயாற்று வெள்ளமும், பில்லூர் அணையின் உபரிநீரும் பவானிசாகர் அணையின் 105 அடி கொள்ளளவை நிரப்பி, 75 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கிவிட்டது.
இதனால் சத்தியமங்கலம், தொட்டப்பாளையம், பகுடுதுறை, செஞ்சனூர், ஓட்டுவீராம்பாளையம், சதுமுகை, கரட்டூர், அரியம்பாளையம், கொத்தமங்கலம், அரசூர் ஆகிய ஊர்களின் ஆற்றங்கரையோர வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நான்காயிரம் மக்கள், பள்ளிகளிலும், மண்டபங்களிலும் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் அடைக்கலமாகியுள்ளனர்.
திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில் காவிரி ஆற்றில் இயக்கப்பட்டுவரும் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நீர்ப்பணி நிலையம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் இயக்கப்பட்டு வரும் பிராட்டியூர் கூட்டு குடிநீர் திட்டம், புத்தாபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் மற்றும் திருவெறும்பூர் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை தற்போது காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் நீரில் மூழ்கி உள்ளது.
இதேபோல ஸ்ரீரங்கம், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் பாலம் இடிந்து தொங்குவதால் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. திருவெறும்பூர், கூத்தைப்பார், BHEL, துவாக்குடி ஆகிய பகுதிகளுக்கு மூன்று நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன் ஆழ்துளைக் கிணறுகள், வடிநீர் கிணறுகள் மற்றும் பிரதான உந்து குழாய் தாங்கும் பாலம் ஆகியவை பழுதடைந்து இயக்க இயலாத நிலையில் உள்ளன. இதனால் திருச்சி மாநகர மக்கள் முழுவதும் குடிநீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.
திருச்சி-கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பல இடங்களில் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உத்தமர்சீலி தரைப்பாலத்தில் காவிரித் தண்ணீர் செல்வதால் அப்பகு

திருச்சி-கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பல இடங்களில் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உத்தமர்சீலி தரைப்பாலத்தில் காவிரித் தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு சுமார் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைத்தோட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. திருவானைக்காவல், கும்பகோணத்தான் சாலை பகுதியில் உள்ள மாந்தோப்பு, வாழைத்தோட்டத்தில் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள தெருக்களில் காவிரி தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து தண்ணீர் நிற்கிறது. உறையூர் பகுதியில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கரூர் மாவட்டம், கரூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 90 குடும்பங்களை சேர்ந்த 275 பேர் சமுதாயக்கூடம், பள்ளி உள்ளிட்டவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1924-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இரும்புப்பாலம் சேதம் அடைந்தது. அந்த பாலத்தை தாங்குகின்ற தூண்களில் கடந்த புதன்கிழமை இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால், எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் கொள்ளிடம் பழைய பாலம் இருந்ததால் முன்னெச்சரிக்கையாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தில் போக்குவரத்தைத் தடை செய்தனர். கடந்த ஞாயிறு அதிகாலையில் இந்த விரிசல் அதிகமாகி இரண்டாக பாலம் உடைந்தது. நள்ளிரவு பாலத்தின் 18-வது மற்றும் 20-வது தூண்கள் இடிந்து தண்ணீரில் மூழ்கின, நள்ளிரவில் தூண்கள் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை .
மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும் இன்னும் தலைமடைமுதல் கடைமடைப் பகுதிகள் வரையுள்ள பெரும்பாலான நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. மொத்த தண்ணீரையும் கடலுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.
கொள்ளிடம் ஆற்றின்கரைகளும் பலமிழந்து பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கரையோரம் உள்ள மக்கள் கடும்அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கரையோரம் உள்ள மக்களை அமைச்சர்களின் உத்தரவின்பேரில் போலீஸாரின் கெடுபிடியோடு கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். ஐந்து மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த அதிகாரிகளும், காவல்துறையினரும் கடலுக்குப் போகும் தண்ணீருக்கு கரையில் காவல் இருக்கின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் கல்லணைக்கு அருகில் உள்ள தலைமடைப் பகுதியான செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட 20 கிராமங்களின் விவசாயிகள் தண்ணீர் கேட்டு வறண்டுகிடக்கும் கட்டளைமேட்டு ஆற்றில் இறங்கிப் போராட்டம் நடத்திவருகின்றனர். அதேபோல் கொள்ளிடத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலையிலும் அதன் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வரவில்லை என குடிதாங்கி, நீலத்தநல்லூர் உள்ளிட்ட 10 கிராமங்களின் விவசாயிகள் தேசியக் கொடியை ஏந்தியபடி வறண்டுகிடக்கும் ஆறுகளில் நின்று போராட்டம் நடத்திவருகின்றனர்.
பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாவிற்கு இன்னும் தண்ணீர் எட்டிக்கூட பார்க்கவில்லை.’’வடகாடு வாய்க்கால், கல்யாண ஓடை வாய்க்கால், ராஜமடம் வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் போனதும், பாசன வாய்க்கால்களின் வழியே அதிக தண்ணீர் திறக்கப்படாததுமே காரணம் என்கிறார்கள் அங்குள்ள விவசாயிகள். அதேபோல் மதுக்கூர், தாமோதரங்கோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் தண்ணீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே கோரிக்கையை முன்வைத்து வரும் 24-ம் தேதி 20 கிராம மக்கள் தொடர்போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.’’""தஞ்சை மாவட்டத்தில் 694 ஏரிகள் இருக்கின்றன. அதன் மூலம் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்படும், ஆனால் ஒரு ஏரிக்குக்கூட தண்ணீர் வரவில்லை''’என்கிறார்கள் விவசாயிகள்.
திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, பாண்டவையாறு என முக்கியமான ஆறுகளில் தண்ணீர் சென்றாலும் அதன் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காததால்... ஏரி, குளங்களுக்கு இன்னும் தண்ணீர் செல்லவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் 720 ஏக்கர் பரப்பளவை கொண்ட திருமேனி ஏரி உள்ளிட்ட 16 ஏரிகளுக்கு தண்ணீர் எட்டிக்கூட பார்க்கவில்லை. 4,500 குளங்களுக்கு மேல் இன்னும் தண்ணீர் போகவில்லை.
2,700 குளங்களுக்கு தண்ணீர் போகாமல் காடாகிக் கிடக்கிறது. அதேபோல் திருவாலி ஏரி, பெருந்தோட்டம் ஏரிகளில் இன்னும் கட்டுமானப் பணிகள் நடப்பதனால் தண்ணீர் திறக்காமல் காய்ந்து கிடக்கிறது.
உணவுத்துறை அமைச்சர் காமராஜின் சொந்தக் கிராமமான எலவனூர் ஊராட்சியில் பாமினி ஆற்றில் இருந்து பிரிந்துவரும் திருமேனி ஆறு பாய்கிறது. அந்த ஆறு தூர்வாரப்படாததால் காய்ந்து கிடக்கிறது.
கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்த ஊரான ஓரடியாம்பள்ளம் பகுதியில் இறால்குட்டைகள் அதிகமாக இருப்பதால் தண்ணீரை திறக்கவிடாமல் தடுத்து வருகின்றனர். அந்தப் பகுதியில் குடிதண்ணீருக்கே இன்றுவரை தவிக்கின்றனர்.
""வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த கிராமமான ராஜகிரியில் உள்ள ராஜகிரி வாய்க்கால், கட்டளை வாய்க்கால் உள்ளிட்டவை தூர்வாராமல் விட்டதால், அப்பகுதியில் உள்ள குளங்களுக்கும், சாகுபடி நிலங்களுக்கும் தண்ணீர் போகவில்லை.’’ தடுப்பணைகள் இருந்திருந்தால் நிலத்தடிநீர் உயர்ந்திருக்கும். ஆனால் தடுப்புகளே இல்லாமல் ஒரு நிமிடத்திற்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் கடலுக்கு போய்விட்டது. ஒரு வாரத்தில் மட்டும் 40 டி.எம்.சி. தண்ணீரை விரயமாகக் கடலுக்கு அனுப்பிவிட்டனர். விவேகம் இல்லாத, நிர்வாக த்திறன் இல்லாத அரசு என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டே இல்லை'' என்கிறார் இயற்கை ஆர்வலரும், ஆசிரியருமான அணைக்கரை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம்.
""மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டும், டெல்டா மாவட்ட எந்தப் பகுதிக்கும் முறையாகத் தண்ணீர் செல்லவில்லை. குடிமராமத்துப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுமையையும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், அதிகாரிகளும் பகிர்ந்துகொண்டுள்ளனர். தண்ணீரை கடைமடைக்கு கொண்டு செல்லாமல் விரயமாக்கியதை கண்டித்து, திருவாரூரில் வரும் 28-ம் தேதி போராட்டம் நடத்தவிருக்கிறோம்'' என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், ""இதுவரை பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. விவசாயிகள் நாற்று நடும் பணியைத் தொடங்க முடியவில்லை. நேரடி விதைப்பு செய்தவர்கள் தண்ணீர் வைத்து பயிரை காப்பாற்ற முடியவில்லை. விவசாயிகள், தண்ணீர் கடலில் கலப்பதைப் பார்த்து பரிதவிக்கிறார்கள். மணல் கொள்ளைக்காக கரைகள் உடைக்கப்பட்டுவிட்டது. பாசன ஆறுகள் பள்ளமாகவும் விளைநிலங்கள் மேடாகவும் மாறிவிட்டன. பாசன வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல மறுக்கிறது. எனவே இதற்கு பொதுப்பணித்துறை முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஆகஸ்ட் 25-ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்த இருக்கிறோம்'' என்றார்.
வெள்ளத்தால் பாதித்த மக்களை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வந்த பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி, ""மொத்தம் 170 டி.எம்.சி. மட்டுமே பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 110 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றுவிட்டது. இந்த நிலைமையில் ஒருபுறம் வெள்ளம் மறுபுறம் வறட்சி நீடிக்க திட்டமிட்டே செய்கிறது அரசு. பசுமையாகிவிட்டால் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் உள்ளிட்ட கனிமவளங்களை எடுக்கமுடியாது என்பதுதான் உண்மையான காரணம்'' என்கிறார் எரிச்சலுடன்.
"இதேநிலை நீடித்தால்... 2 மாதத்தில் குடிப்பதற்குக் கூட தண்ணீர் இருக்காது' என்கிறார்கள் வல்லுநர்கள்.
மேட்டூர் தண்ணீர் கல்லணைக்கு வந்ததும் 7 அமைச்சர்கள் பாசனத்துக்கு திறந்துவிட்டார்கள். அடுத்தடுத்து மாவட்ட ஆட்சியர்கள் "கரை ஓர மக்களே பாதுகாப்பாக இருங்கள்' என்று எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நெற்களஞ்சியமான தஞ்சை, திருவாரூர் மற்றும் கடைமடை பாசனமான புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. சில இடங்களில் எட்டி மட்டும் பார்த்துவிட்டுப் போகிறது.
""டெல்டா ஆற்றுப்படுகையில்தான் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற இயற்கை எரிவாயு இருக்கிறது என்பதை கண்டறிந்த எண்ணெய் நிறுவனம் அதை செயல்படுத்த விவசாயிகளை வெளியேற்ற நினைத்து தண்ணீர் கொடுக்க மறுக்கிறது போல'' என்கிறார் ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன்.
கடைமடை விவசாயிகள் தேவதாஸ், நீலகண்டன் ஆகியோர்.. ""கல்லணைக் கால்வாயை மராமத்து செய்து பல வருடங்கள் இருக்கும். ஆனால் மராமத்து செஞ்சதா கணக்கு சொல்றாங்க. எங்களுக்கு தெரியாம எங்க ஊர்ல எப்ப தூர் வாருனாங்கன்னு தெரியல. பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிக்கு ஒரு சொட்டுத் தண்ணிகூட வரலை'' என்றனர்.
விவசாய சங்க மாநில செயலாளர் துரைமாணிக்கமோ.. ""இந்த அரசாங்கம் விவசாயிகள் மீது அக்கறை செலுத்தாததால் இப்படி நிதி எல்லாம் சுரண்டப்பட்டு நதிகள் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஒரு போகம்கூட சாகுபடி செய்ய முடியாது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பிரதான கால்வாய்கள், துணை வாய்க்கால்களை மராமத்து செய்து கடைமடைவரை தண்ணீர் செல்ல வழி செய்யவில்லை என்றால்... விவசாயிகளை திரட்டி எழுச்சிப் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.
இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள் டீம், கறி விருந்தை வளைத்துக் கட்டும் படங்கள் வெளியாகி, விவசாயிகளின் வயிற்றெரிச்சல் சாபத்தை வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது.
-ஜீவா தங்கவேல், இரா.பகத்சிங், ஜெ.டி.ஆர்., க.செல்வகுமார்
வனத்துறை உதவியால் திருமணம்!
மலைவனக் கிராமமான தெங்குமராட்டாவைச் சேர்ந்த அவிநாசியின் மகள் ராஜாத்திக்கு 20-08-18 அன்று சத்தியமங்கலத்தில் திருமணம். மணமகன் வீடும் அங்குதான். சத்தியமங்கலம் செல்ல மாயாற்றைக் கடக்க வேண்டும். மாயாற்றிலோ வெள்ளம் சுழித்துச் சுழித்துப் பாய்கிறது. பரிசல் பயணத்திற்கு தடை விதித்துவிட்டது வனத்துறை.
மணமகள் ராஜாத்தியோ, ""குறித்த நேரத்தில், குறித்த நாளில் திருமணம் நடக்கட்டும்... மாயாற்று வெள்ளம் ஒன்றும் செய்யாது'' என உறுதியாக நின்றார்.
மணமகள் வீட்டாரும், கிராம மக்களும் பிடிவாதமாக வனத்துறையிடம் முறையிட்டதால், ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட பரிசலில் மணமகளையும், உறவினர்கள் 15 பேரையும் ஏற்றி பத்திரமாக அக்கரை சேர்த்தது வனத்துறை. ராஜாத்தி திருமணம் 20-08-18 காலையில் சிறப்பாக நடந்தது.
-ஜீவா