"தாமிரபரணி மகாபுஷ்கரம்' என்ற பெயரில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை குளு குளு குற்றாலத்தில் ஓப்பன் சிறை வைத்தார் தினகரன். தங்க தமிழ்ச்செல்வன், பிரபு, மாரியப்பன் கென்னடி, சுப்பிரமணியம், கதிர்காமு, பழனியப்பன் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் 22-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு பழைய குற்றாலத்தில் மாஜி எம்.எல்.ஏ.வான இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான இசக்கி ரிசார்ட்சுக்கு வந்தனர். சில எம்.எல்.ஏ.க்கள் ஐந்தருவிச் சாலையில் இருக்கும் இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான இன்னொரு ரிசார்ட்சில் தங்கினார்கள்.

mla-tour

மறுநாள் காலை 7 மணிக்கு டிராக் ஷூட், டீ சர்ட் சகிதம் அருவிச் சாலை டோல்கேட் வரை நடைபயிற்சிக்குப் போய்விட்டு ரிசார்ட் திரும்பினர் எம்.எல்.ஏ.க்கள். காலை 9 மணிக்கு இரண்டு கார்களில் 7 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் கிளம்பி பாபநாசம் சென்று, மகாபுஷ்கரத்தின் கடைசி நாளன்று புனித நீராடினார்கள்.

படித்துறையில் அமர்ந்து யாக பூஜை செய்து கொண்டிருக்கும் போது அவர்களின் முகங்களில் தீர்ப்பு குறித்த கவலையும் தெரிந்தது. பூஜை நடந்து கொண்டிருக்கும் போது, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரி, தனது கணவருடன் வந்து தங்க தமிழ்ச்செல்வனிடம் அட்டென்டன்ஸ் போட்டுவிட்டுக் கிளம்பினார்.

Advertisment

எல்லாம் வைபவங்களும் முடிந்து மதியம் 1.50 மணிக்கு ரிசார்ட்சுக்குள் எம்.எல்.ஏ.க்கள் நுழைந்தவுடன் தடபுடலான மதிய உணவு ரெடியாக இருந்தது.

mla-tour

Advertisment

"எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக இருக்க வேண்டாம், அனைவரும் ஒரே இடத்தில் இருந்தால் நல்லது' என தினகரனிடமிருந்து மதியம் 3 மணிக்கு தகவல் வந்ததும், எல்லா எம்.எல்.ஏ.க்களும் ஐந்தருவிச் சாலையில் இருக்கும் ரிசார்ட்சில் ஐக்கியமானார்கள். நெல்லை மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ரிசார்ட்சுக்கு படை எடுத்தனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை பெருகியதால், உணவுக்கான ஏற்பாட்டை, தென்காசி நகர மார்க்கெட்டிங் சொஸைட்டியின் தலைவரான துபாய் பாண்டியன் ஏற்றுக் கொண்டார். அவரது கண்காணிப்பில் கேட்டரிங் குரூப் வந்திறங்கி, நெல்லை ஸ்பெஷலான பார்டர் புரோட்டா, சிக்கன், மட்டன் சால்னா, சுக்கா என தூள் கிளப்பினார்கள்.

mla-tour

ஒட்டப்பிடாரம் சுந்தர்ராஜனும் சாத்தூர் சுப்பிரமணியும் தீர்ப்பு குறித்த கவலையில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த போது, அவர்களை ஆறுதல்படுத்தினார் அ.ம.மு.க. மா.செ.வான பாப்புலர் முத்தையா. எல்லாத்தையும் தெம்பூட்டினார். அனைவரின் முகத்திலும் கவலை ரேகை தென்படுவதைப் பார்த்த தங்க தமிழ்ச்செல்வன், மாலை 6 மணிக்கு ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கக் கிளம்பிவிட்டார்.

கேரள பார்டரில் இருக்கும் கண்ணுப்புளிமெட்டு மலையின் மேலிருக்கும் தனியார் அருவியில் ஆயில் மசாஜும் ஆனந்தக் குளியலும் போட்டுவிட்டு 8 மணிக்கு ரிசார்ட்சுக்கு திரும்பிய தங்க தமிழ்ச்செல்வன், “"தீர்ப்பு வரட்டும், அதுக்குப் பிறகு எங்க சித்து விளையாட்டைப் பாருங்க' என மீடியாக்களிடம் உற்சாகமாகப் பேசினார்.

தீர்ப்பு எதிராக வந்ததும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் 25-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்டனர்.

-பரமசிவன்

படங்கள்: ப.இராம்குமார்

_____________________

இந்திரா பானர்ஜியும் சத்யநாராயணாவும்

judges

முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை ஒட்டியே நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பளித்துள்ளார். முன்னாள் தலைமை நீதிபதி தீர்ப்பில்,’’""சபாநாயர் உரிமையை மீறி முடிவு எடுத்தாலோ, சட்டம், இயற்கை நியதி மீறப்பட்டாலோ மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். தனிப்பட்ட காரணமாக சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்தார் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லை'' என்றார். நீதிபதி சத்யநாராயணாவும், ""இதற்கு முன்னாள் வழங்கப்பட்ட தீர்ப்பின் உள்ளே செல்ல விரும்பவில்லை. தனிப்பட்ட தீர்ப்பு வழங்குகிறேன்'' எனச் சொல்லிவிட்டு, ""முதல்வருக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் மனு அளித்தபோது, "இதில் என்னால் தலையிட முடியாது' என ஆளுநர் கூறியுள்ளார். ஆனால் இந்த தகவலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கவில்லை'' என்று தீர்ப்பின் முக்கிய பகுதியை குறிப்பிட்டார். நீதிபதி சத்தியநாராயணா தீர்ப்பில் “சபாநாயகரின் உத்தரவு பாரபட்சமாகவும், உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டதாக குற்றச்சாட்டை போதுமான ஆதாரங்களுடன் 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் நிரூபிக்கவில்லை. இந்த வழக்கை கர்நாடக எடியூரப்பா வழக்குடன் ஒப்பிட முடியாது.

அரசியல் சாசன கடமை மீறியதாகவோ, உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டதாகவோ, இயற்கை நீதியை மீறியதாகவோ இதைக் கூறமுடியாது. 18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சபாநாயகரால் நெறி தவறி பிறப்பிக்கப்பட்டதாக சொல்ல முடியாது.

ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேருக்கு எதிராக செம்மலை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததாலேயே சபாநாயகர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஓ.பி.எஸ். அணிக்கு சாதகமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் சபாநாயகர் செயல்பட்டார் என்பதை ஏற்க முடியாது. தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுவதாக தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ் மணியிடம் பேசினோம், ""சபாநாயகரின் நடவடிக்கையில் தலையிட முடியாது என்று சொல்வது தவறு; தலையிட முடியும். மேல் முறையீடு சென்றால் வாய்ப்பு இருக்கும்'' என்றார்.’’

-சி.ஜீவா பாரதி