நெல்லை மாவட்டம் அம்பையை ஒட்டியுள்ள தென் மேற்குத்தொடர்ச்சி மலையில், சுமார் ஆறாயிரம் அடி உயரத்தில் இருக்கும் அகத்தியர் மொட்டிலிருந்து தனது பயணத்தைத் தொடங்குகிறது தாமிரபரணி.

தாமிரபரணியில் 27 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் வாயிலாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகிக்கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் சுமார் 22 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கொடுக்கிறது தாமிரபரணி ஆறு.

thamiraparani

Advertisment

கடந்த பிப்ரவரியில் தாமிரபரணி வாய்க்காலானது.

மேற்குத்தொடர்ச்சி மலையிலிருக்கும் மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி ஆகிய ஆறு அணைகளில் சொற்பத் தண்ணீரே இருந்தன.

Advertisment

""அணைகளில் இருக்கும் நீரின் அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. பொதுமக்கள் குடிதண்ணீரை அளவோடு பயன்படுத்துங்கள். பருவமழைக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. அதுவரை தாக்குப்பிடிப்பது சந்தேகமே'' என்று அப்போதைய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கடந்த பிப்ரவரியில் எச்சரிக்கை செய்தார்.

தினமும் விநியோகித்துக்கொண்டிருந்த குடிநீர், அணைகள் வற்றியதால் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க வேண்டிய அவலம்.

அத்தகைய மோசமான சூழலில்தான், மே மாதத்தில் தென்மேற்குப் பருவமழை பொய்க்காமல் பெய்தது.

குற்றாலத்து அனைத்து அருவிகளிலும் நீர் கொட்டியது. மலையிலுள்ள ஆறு அணைகளின் நீர் மட்டமும் எதிர்பாராத வகையில் எகிறத் தொடங்கியது. நான்ஸ்டாப்பாக, ஜூலை கடைசிவரை பெய்த தென் மேற்குப் பருவமழையினால், அணைகளின் நீர் மட்டங்கள் உயர்ந்து கொள்ளவை எட்டிக் கொண்டிருந்தது.

thamiraparaniகடந்த வாரம், தொடர்ந்து பெய்த தென் மேற்குப் பருவமழை, பேயாட்டம் ஆடித்தீர்த்ததன் விளைவு, அண்டை மாநிலமான கேரளாவின் ஏழு மாவட்டங்கள் உருக்குலைந்தன. அதன் தாக்கம் நெல்லை, மலைமுகடுகளிலும் எதிரொலித்தது. அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வெள்ளமாய்ப் பொங்கிப் பாய்ந்தது.

மாவட்ட ஆட்சியரான ஷில்பா, ""அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' என எச்சரிக்கை அறிவிப்புக் கொடுத்தார்.

142 அடி கொள்ளளவைத் தாண்டிய பாபனாசம் அணைக்கு வரும் உபரி நீர், வினாடிக்கு 14,295 கனஅடி அப்படியே வெளியேற்றப்பட்டது. 146 அடியைத் தாண்டிய சேர்வலாறின் உபரி ரோடு, அந்தப் பகுதியின் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து மொத்தமாய் வினாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர் வெளியேறியதால், அந்தப் பகுதியின் முண்டன்துறைப் பாலம் துண்டிக்கப்பட்டது. இதே போன்று கடனா நதியின் 2380 கனஅடி, ராமநதியின் 443 கனஅடி, கருப்பாநதியின் 900 கனஅடி என அனைத்து அணைகளிலும் உபரி நீர் ஒரே நேரத்தில் மொத்தமாக வினாடிக்கு 38,018 கன அடித் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் தாமிரபரணியில் ஆகஸ்ட்-15 அன்று விடிய விடிய வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

வினாடிக்கு இப்படிப் பாய்ந்த மொத்த உபரிக் கன அடித் தண்ணீரும் ஸ்ரீவைகுண்டம் அணை, ஏரல் வழியாக கடலின் முகத்துவாரமான புன்னக்காயலை ஒட்டியுள்ள கடலில் வீணாகக் கலந்தது தாமிரபரணி. யாருக்கும் பயன்படாமல் இப்படி தண்ணீர் கடலில் கலந்தது.

2016 நவம்பரின் போது கொட்டிய அடைமழை காரணமாக சுமார் 36 டி.எம்.சி. தாமிரபரணி கடலில் வீணாகப் போய்ச்சேர்ந்ததை அப்போதே நக்கீரன் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் கூட, வீணாகும் நீரை, மக்கள் மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்வதற்கான முயற்சியில் கூட அரசு ஈடுபடவில்லை என்கிற கவலையை வெளிப்படுத்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இது குறித்து சி.பி.எம்.மின் மா.செ.வான பாஸ்கர் சொல்லுவது...

10 வருடத்திற்கு முன்பாகவே மலையில் இஞ்சிக்குளி அணைகட்ட வேண்டும் என்கிற வரைவுத் திட்டம் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டும் கவனிக்கப்படவில்லை. அடுத்து வறட்சிப் பகுதியான ராதாபுரம், நாங்குனேரித் தொகுதிகள் பயன்படுகிற வகையில் தாமிரபரணியைக் கொண்டு செல்கிற வெள்ளக் கால்வாய் திட்டத்தின் இரண்டாம்கட்டப் பணி முடிந்து, மூன்றாம் கட்டப் பணிகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் அது முற்றுப் பெறவில்லை. காரணம் அது, கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதால் அது நிறைவேறவில்லை. அரசின் தொலைநோக்குத் திட்டமின்மை காரணமாக வீணாகக் கடலில் கலக்கிறது தாமிரபரணி'' என்கிறார் வேதனையின் வெளிப்பாடாய்.

சி.பி.ஐ.யின் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில து.தலைவரான பெரும்படையார், ""தாமிரபரணியை வைப்பாற்றோடாவது இணையுங்கள் இலகுவான வேலை. அப்படிச் செய்தால் தூத்துக்குடி மாவட்டத்தின் மானாவாரிப் பகுதியான விளாத்திகுளம், அண்டை மாவட்டமான நெல்லையின் சங்கரன்கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட வறட்சியான மூன்று தாலுகாக்கள் பயனடையும் என்ற எங்களின் வரைவுத் திட்டத்தை ஏற்ற கலெக்டர்களான சமயமூர்த்தியும், கருணாகரனும், நல்ல திட்டங்கள் என்று சொல்லி அரசுக்கு அப்போதே கோப்புகளை அனுப்பிவைத்தும், அவற்றை அரசுகள் திரும்பிப் பார்க்கவில்லை. விளைவு தற்போதைய மழை வெள்ளத்தில்கூட, மாவட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டு போய்க் கிடக்கும் நிலை'' என்கிறார் ஆத்திரம் கொப்பளிக்க.

""வீணாகப் போகும் தண்ணீரைத் திருப்பி, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிற திட்டம் ஏதேனும் அரசிடம் இருக்கிறதா? என்பதையறியும் பொருட்டு நெல்லை மாவட்டக் கலெக்டரான ஷில்பா பிரபாகர் சதீஷிடம் கேட்டதில்...

""வீணாகும் தண்ணீரை வறட்சிப் பகுதிகளுக்குத் திருப்பிக் கொண்டு செல்கிற வெள்ளக் கால்வாய் திட்டம் முடிகிற தறுவாயில் உள்ளது. மூன்றாம் கட்டப் பணிகளுக்கான நில ஆர்ஜிதம் மற்றும் நிதி ஒதுக்கீடு காரணமாகத் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நிலைமையை அரசுக்குத் தெரியப்படுத்தி, அந்தப் பணிகளை விரைவில் மேற்கொள்ள முயற்சிகளை எடுத்து வருகிறேன்''. என்கிறார் அக்கறையோடு.

இயற்கை, வகை தொகை தெரியாமல் அள்ளிக் கொடுக்கும் கொடையை மனிதகுலம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அலட்சியப்படுத்தினால் இயற்கையின் கண் திறக்காது... சரித்திரம் சாபமிடும்.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்