அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழையும், மே முதல் ஆகஸ்ட் வரையிலான தென்மேற்குப் பருவமழையும் தயைசெய்வதால் வருடம் முழுக்க தாமிரபரணியாறு தன் ஈரத்தை எப்போதும் தொலைப்பதில்லை. இப்படி வருடம் முழுக்க பாய்ந்தோடி வருவதால் வற்றாத ஜீவநதியானது தாமிரபரணி.
நெல்லை, தூத்துக்குடி விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் குடிநீர்த் தாகத்தைப் போக்குகிறது தாமிர பரணி. மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு என மூன்று பெரிய அணைகளையும் நிரப்பிய பின்பு வெளியேறும் உபரித்தண்ணீர் கடலில் கலப்பது காலம்காலமான நடைமுறை. அப்படி வீணாகக் கடலில் கலக்கும் தாமிரபரணி நீரை மாவட்டங்களின் வறட்சிப் பகுதிக்குத் திருப்பினால் விவசாயம் மற்றும் மக்களின் குடிதண்ணீர் பயன்பாட்டிற்கு உதவும் என்று வேளாண் மக்கள் அரசுக்குப் பல முறை கோரிக்கை அனுப்பியும் அவை கண்டு கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது..
1991-ல் ஜெ. முதன்முதலாக முதல்வரான போது 1992-ல் பொழிந்த அடைமழையினால் மூன்று அணைகளின் உபரித் தண்ணீர் நடு இரவில் திடீரென எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் திறந்துவிடப்பட்டது. கரைப்பகுதி வீடுகளில் வசித்த 17 அப்பாவி மக்கள் அப்படியே ஜலசமாதியாகினர்.
இந்தத் துயரத்திற்குப் பிறகே தாமிரபரணியின் உபரிநீர் வறட்சிப்பகுதியின் நலன் பொருட்டு திருப்பி விடப்படவேண்டும் என்று வேளாண்மக்களின் குரல்கள் ஏகோபித்தன. ஆனாலும் அந்த அழுத்தம் ஆட்சித் தலைமையிலிருந்தவர்களுக்கு எட்டவில்லை. விளைவு வருடம்தோறும் ஒரு சில டி.எம்.சி. உபரி நீர் வீணாகப்போவது நடை முறையாகவே மாறிப்போனது.
2019 மே தொடங்கி ஆகஸ்ட் வரையிலான நான்கு மாதங்களிலும் நான்ஸ்டாப்பாகப் பொதிகை மலையில் பெய்த மழையின் பலனாய் வற்றிப்போன அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன. தொடர்ந்து பெய்த தொடர்மழை காரணமாக பாய்ந்தோடி வந்த உபரிநீர் அத்தனை அணைகளிலிருந்தும் ஒரே சமயத்தில் திறந்துவிடப் பட்டதால் 24 டி.எம்.சி. அளவிலான உபரிநீர் அந்தக் கோடையிலும் வீணாய்க் கடலில் கலந்தது.
முந்தைய ஆண்டு ஓரளவே மழைபொழிந்திருந்த நிலையில், 2021 ஆரம்பத்தில், இலங்கைப் பக்கம் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஜன 11 முதல் 16-ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நான்-ஸ்டாப்பாக அடைமழை பெய்தது. இதன்காரணமாக 118 அடி கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய அணையான மணி முத்தாறு 5 வருடம் கழித்து தற்போது நிரம்பியிருக்கிறது.
இதுபோன்று நிரம்பி வழிந்த சேர்வலாறு, பாபநாசம் மணிமுத்தாறு தவிரவும் கடனாநதி ராமநதி அணைகளி லிருந்தும் திறந்துவிடப்பட்ட உபரி நீர் மொத்தமும் கடலோடு கடலாய்ச் சங்கமித்திருக்கிறது. "கடந்த ஐந்து நாட்களில் தாமிரபரணியிலிருந்த கடலில் கலந்த உபரி நீர் 31 டி.எம்.சி. இது 6 பெரிய அணைகளின் கொள்ளளவுத் திறன் கொண்டது' என அதிரவைக் கின்றனர் பொ.ப.துறையினர்.
""எங்கள் பகுதி நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த, எடப்பாடி பழனிசாமி, வெள்ளநீர்க்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தாமிரபரணியைக் கொண்டு வருவோம். களக்காட்டில் வாழைத்தார் குளிரூட்டும் நிலையம் அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார். அது பேச்சோடு போய்விட்டது... கண்டுகொள்ளப்படவில்லை''’என்று படபடத்தார் விவசாய சங்கத் தின் மாநில துணைத்தலை வரான பெரும்படையார்.
""மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதி என்று நான்கு கால்வாய்களில் 1200 கன அடி நீர் கொண்டு செல்லப்பட்டு 43,000 ஏக்கர் விவசாய நிலங்களில் மூன்று போகம் விளைந்தது. ஆண்டாண்டு காலமாக அது தூர் வாரப்படாததால் 400 கன அடித் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. கால் வாயை முறைப்படுத்துங்கள் என்று அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தும் சீர்செய்யப் படவில்லை. அதனால் ரெண்டுபோக விளைச்சல் போச்சு'' -என வேதனையை வெளிப்படுத்தினார் ஸ்ரீவைகுண்டம் பகுதியின் விவசாய சங்கத் தலைவரான முத்துராமலிங்கம்.
ராதாபுரம் எக்ஸ் எம்.எல்.ஏ.வான அப்பாவு, “"வீணாகப் போகும் தாமிரபரணியை வெள்ளநீர்க் கால்வாய் மூலம் கொண்டுவந்து கருமேனியாறு, நம்பியாற்றில் இணைத்து ராதாபுரத்தின் எம்.எல். தேரியில் சேர்த்தால் வறட்சியான நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளின் 1012 ஏக்கர் நிலம் பயனடையும். இத்திட்டத்திற்காக கலைஞர் 369 கோடிகளை ஒதுக்கினார். அதில் 214 கோடியில் திட்டப் பணிகள் இரண்டு கட்டம் முடிக்கப்பட்டு பின்பு 10 வருடமாகக் கிடப்பிலிருக்கிறது. அதனைத் துரிதமாக முடிக்கவேண்டும் என்று தலைமைச் செயலரிடம் முறையிட்டுள்ளேன்''’என்கிறார்.
தற்போதைய நெல்லை கலெக்டர் விஷ்ணுவோ, ""வெள்ளநீர்க் கால்வாயை விரைவுபடுத்திக்கொண்டிருக்கிறோம். நான் வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. கூடிய விரைவில் திட்டத்தை முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவோம்''’ என்கிறார்.
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் உறுதிமொழிகளைக் கேட்டு இந்தியாவில் உள்ள நதிகள் பிரதிவினை செய்யமுடிந்தால், இந்தியாவெங்கும் நதிகளின் கேலிச்சிரிப்பு மட்டும்தான் கேட்கும்.
-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்