திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த ரவி-ஜோதி தம்பதியின் மகள் அருணா, பொன்னேரியையடுத்த கீரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 29ஆம் தேதி பாம்பு கடித்ததாக முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தாயார் வீட்டு வேலை செய்யுமாறு திட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜனவரி ஒன்றாம் தேதி அதிகாலை 1:30 மணியளவில் அருணா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அருணா வீட்டு வேலை செய்யவில்லையென்று தாயார் திட்டியதால் தற்கொலை செய்துகொண்டதாக புகாரளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்ப மாக, சிவபாரதி என்பவர், "இது தற்கொலையல்ல, ஆணவப் படுகொலை'' என்று திருப்பாலைவனம் காவல்நிலையத்தில் ஆதாரத்துடன் புகாரளித்திருப் பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனியை சேர்ந்த சிவபாரதி, திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிவருகிறார். இவரும், அருணாவும் காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலை சிவபாரதியின் வீட்டில் ஏற்றுக்கொண்ட நிலையில், மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அருணாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லையாம். ஆவடி ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வரும் அருணாவின் அண்ணன் அரவிந்துக்கு, இவர்களின் காதல் விவகாரம் தெரியவரவும், இவரையும் அருணாவையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். சம்பவத் தன்று அருணாவின் தந்தை ரவி, தாயார் ஜோதி, அண்ணன் அரவிந்த், தம்பி அஜித் ஆகியோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வற்புறுத்தி அருணாவிற்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
விஷம் குடித்த அருணா, மருத்துவ மனையிலிருந்து தனக்கு குறுஞ்செய்தியாக இதுகுறித்து அனுப்பியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஆதாரமாக போலீஸ் மற்றும் பத்திரிகைக்கு கொடுத்துள்ளார். மேலும், அருணாவை கட்டாயப் படுத்தி, உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும், இருவரும் பேசிய ஆடியோவையும் ஆதாரமாக திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் வி.ஏ.ஓ.வை விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக காதலன் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இதேபோல பாம்பு கடித்ததாகக் கூறி, பெற்ற மகன்களே தந்தையை கொலை செய்த விவகாரத்தை தொடர்ந்து, தற்போது அருணாவின் வழக்கிலும் பாம்பு கடித்ததாக முன்னுக்குப் பின் முரணாகக் கூறியுள்ள அருணாவின் குடும்பத்தினர், பின்னர் விஷத்தைக் கொடுத்து கொலை செய்ததாக எழுந்துள்ள புகார், திருவள்ளூர் மாவட்டத்தை பரபரப்பாக்கியுள்ளது!.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/vao-2026-01-06-10-46-54.jpg)