மிழக நெடுஞ்சாலைத்துறை கட்டிய பாலத்தில் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறது அறப்போர் இயக்கம். இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார்களும் அனுப்பப் பட்டுள்ளன. கட்டி முடித்து திறந்து வைக்கப் பட்ட மூன்றே மாதத்தில் மழை வெள்ளத்தில் இடிந்துபோன பாலத்தில் நடந்துள்ள ஊழல்களை அம்பலப்படுத்துகிறது அந்த புகார்.

திருவண்ணாமலை மாவட்டம் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம், கடந்த 2024 செப்டம்பரில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், டிசம்பரில் வெளுத்து வாங்கிய கனமழையில் அந்த புதிய பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் நெடுஞ்சாலைத்துறையை மட்டு மல்ல; தி.மு.க. அரசையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த சம்பவம் குறித்து, "வரலாறு காணாத அளவுக்கு கனமழை பொழிந்ததால் ஏற்பட்ட துயரம்' என்று மழை வெள்ளத்தின் மீது குற்றம்சாட்டிவிட்டு அமைதியாகிப் போனார்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

ss

இந்த நிலையில், "உயர்மட்டப் பாலம் உடைந்து போனதற்கு மழை வெள்ளம் காரணமல்ல; பாலத்தில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள்தான் காரணம்' என்று குற்றம்சாட்டுகிறது அறப்போர் இயக்கம்.

இதுகுறித்து அந்த இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேச னிடம் பேசியபோது, ‘’"தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அகரம் பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் இடையே இந்த உயர்மட்ட பாலத்தை கட்டுவதற்காக 17 கோடி ரூபாயை ஒதுக்கியது தமிழக நெடுஞ்சாலைத்துறை.

பாலம் கட்டுவதற்கான டெண்டர், நெடுஞ்சாலைத் துறை நபார்ட் மற்றும் கிராம சாலைகள் செங்கல்பட்டு வட்டத்தின் கண் காணிப்பு பொறியாளரால் கடந்த 2022, ஆகஸ் டில் வெளியிடப்பட்டது. டெண்டர் அறிவிப் பின்படி, பாலம் கட்டுவதற்கான மொத்த தொகை 12.98 கோடி என மதிப்பிடப்பட்டி ருந்தது. ஆனால், அரசு நிர்ணயித்திருந்த இந்த தொகையை எவ்வித காரணமும் இல்லாமல் 13.94 கோடியாக உயர்த்தி ஏ.எஸ்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் எனும் காண்ட்ராக்ட் நிறுவனத்துக்கு இந்த பாலத்தைக் கட்டும் டெண்டரை கடந்த 2023, பிப்ரவரியில் ஒதுக்கீடு செய்துள்ளனர். அதாவது, டெண்டர் தொகையை 7 சதவீதம் உயர்த்திக் கொடுக்கப்பட் டது. அதேசமயம், பாலம் கட்டி முடிக் கப்பட்ட பிறகு, இந்த பாலம் விழுங் கிய மொத்தச் செலவு 15.9 கோடி.

இந்த நிலையில், மக்களின் பயன்பாட்டிற்காக இந்த உயர்மட்ட பாலத்தை கடந்த 2024, செப்டம்பரில் துறையின் அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். ஆனால், பாலம் திறந்து வைக்கப்பட்ட அடுத்த மூன்றாவது மாதம் (டிசம்பர்) பெய்த கனமழையில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

இந்தியன் ரோடு காங்கிரஸின் வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின் பற்றியே பாலத்தை வடிவமைக்கிறது தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை. அதன்படி கட்டப்படும் பாலத்தின் ஆயுள் 100 ஆண்டு காலம் இருக்க வேண்டும். இதற்காக, 100 ஆண்டுகாலத்தில் பொழிந்த கனமழையின் அளவைக் கணக்கிட்டே பாலத்தின் வலிமையை இறுதி செய்து அதன்படி கட்டப்பட வேண்டும்.

கடந்த 2024, டிசம்பரில் இங்கு பெய்த கனமழையினால் இந்த பாலத்தின் வழியாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தின் அளவு 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி. வரலாறு காணாத அளவுக்கு கூடுதல் மழை பெய்ததால் பாலம் தாங்கவில்லை என வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதற்கு காரணம் சொல்கின்றனர். ஆனால், கடந்த 1972-ல் தென்பெண்ணை ஆற்றின் வழியாக 2 லட்சத்து 80 ஆயிரம் கன அடி வெள்ளம் கடந்து சென்றது என்பதை 2019-ல் நெடுஞ்சாலைத் துறையிடம் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான தரவு களை துறை அதி காரிகள் வைத் துள்ளனர். அப் படிப்பட்ட நிலை யில், விதிகளின்படி, 100 ஆண்டுகளுக்கான வெள்ளத்தின் அளவை வைத்து இந்த பாலத்தை வடிவமைத்திருக்க வேண்டும்.

bb

Advertisment

ஆனால், இதனை கவனத்தில் கொள்ளாமல் வெறும் 54,000 கன அடி வெள்ளத்தின் அளவை மட்டுமே வைத்து பாலத்தை வடிவமைத்துள்ளனர் அதிகாரிகள். அதனால் 54,000 கனஅடிக்கு அதிகமாக வெள்ளம் வந்ததால் பாலம் இடிந்துள்ளது. 2 லட்சத்து 68 ஆயிரம் கன அடிக்கு இந்த பகுதியில் கடந்த காலத் தில் வந்த வெள்ளத்தைக் கணக்கிடாமலும், தொழில் நுட்பக் காரணங்களை புறந்தள்ளியதாலும் பாலம் அடித்துச் செல்லப் பட்டதை மறைத்து, வரலாறு காணாத மழை வெள்ளம் எனப் பொய்யான காரணத்தை சித்தரித்திருக்கிறார்கள். இது முதல் தவறு.

மேலும், 249 மீட்டர் அளவுக்கு பாலத்தில் தண்ணீர் செல்ல வழி இருக்க வேண்டும் என டெண்டரில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், பிறகு அதனை 183 மீட்டராகக் குறைத் துள்ளனர். இப்படி குறைத்ததால், வெள்ளத்தின் அழுத்தம் பாலத்தில் அதிகரித்துள்ளது. தண்ணீர் செல்லும் வழியின் நீள அளவைக் குறைத்தது ஏன்? இதற்கான காரணங்களை அதிகாரி கள் தெரிவிக்கவில்லை. பாலங்களின் தூண்கள் அடியுடன் சாய்ந்திருப்பதை கணக்கிடும் போது முறையான ஆழத்தில் தூண்கள் அமைக்கப்படவில்லை என்பதும் புலனாகிறது. அதுமட்டுமல்லாமல், பாலத்தின் அடித்தளம் 4.7 மீட்டர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 3 மீட்டருக்கு மேலிருப்பது மெதுவான உடைந்த பாறைகள் என்பதால் தேய்த்தல் ஆழத்தை பொறியாளர்கள் சரியாகக் கணக்கிடவில்லை.

அதேசமயம், இந்த பாலத்திற்கு அருகேயுள்ள மற்றொரு பாலமும் 54,000 கன அடிக்குத்தான் வடிவமைக்கப்பட்டிருக் கிறது என்கிற வாதத்தை வைக்கின்றனர். ஆனால், அந்த பாலம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. எத்தனையோ பெருவெள்ளத்திலும், 2024 டிசம்பரில் பொழிந்த மழை வெள்ளத்திலும் கூட அந்த பாலம் இடிந்து விடவில்லை; வெள்ளத்தில் அடித்துச்செல்லவும் இல்லை. ஆனால், அதே 54,000 கன அடிக்கு வடிவமைத்து கட்டி முடித்து அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட இந்த பாலம் மட்டும் ஏன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது?

Advertisment

அப்படியானால், பாலம் அடித்துச் செல்லப்பட வடிவமைப்பு மட்டுமே காரணம் அல்ல; பாலத்தின் கட்டுமானத்திலும் ஏகப்பட்ட குளறுபடி நடந்திருப்பதும் புலனாகிறது. ஆக, தரமற்ற பாலத்தினை கட்டி விட்டு (அருகில் உள்ள பாலம் தரமான கட்டுமானத்தில் உள்ளதால் இடிந்து விழவில்லை) மழை வெள்ளத்தின் மீது பழி போட்டு தங்களின் குளறுபடிகளை மறைக்கிறது.

இந்த பாலம் கட்ட 17 கோடி ஒதுக்கப்பட் டது. ஆனால், 13 கோடி என மதிப்பிட்டு, பிறகு 14 கோடியை காண்ட்ராக்டருக்கு கொடுத்து, அதன் பிறகு 16 கோடி செலவானதாகக் காட்டியுள்ளனர். எதனால் தொகை அதிகரித்தது? எப்படி செலவழிக்கப்பட்டது? என்கிற கேள்விகளுக்கு விடை தேடியபோது, பாலத்தில் அதிகப்படியான ஊழல் நடந்திருப்பது தெரிகிறது.

அதனால் பாலத்தில் நடந்த இந்த ஊழல் களுக்கு காரணமான உதவிப்பொறியாளர், உதவி கோட்டப்பொறியாளர், கோட்டப் பொறியாளர், மற்றும் கண்காணிப்பு பொறியாளர் தேவராஜ், இவர்கள் கொடுத்த வடிவமைப்பு ரிப்போர்ட்டை கள ஆய்வு செய்யாமல் அப்படியே அனுமதித்த தலைமைப் பொறியாளர் கீதா ஆகியோர் குற்றவாளிகள்.

இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை பாதுகாத்து வருவதுடன், இந்த ஊழல்களை மறைத்தும் வருகின்றனர். இதனால், உயர்மட்டப் பாலத்தோடு மக்களின் வரிப்பணம் 16 கோடி ரூபாயும் வெள்ளத்தில் அடித்துச் சென்றிருப்பது ஜீரணிக்க முடியாத விசயம். இந்த ஊழல் முறைகேட்டில் தொடர்புடைய அனைவர் மீதும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து இந்த ஊழலை விசாரிக்க வலியுறுத்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்துள்ளோம். அதேபோல, இந்த பால ஊழலில் விசாரணை முடியும்வரை சம்பந்தப்பட்ட அனைவரையும் பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்றும், மக்களின் வரிப் பணத்தை பாழடித்த இவர்களிட மிருந்து அந்த தொகையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் அனுப்பி யுள்ளோம்''’என்று விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார் ஜெயராம் வெங்கடேசன்.

இது குறித்து துறையின் அதிகாரிகளிடம் பேசியபோது, "குறிப்பிட்ட இடத்தில் பாலம் கட்டுவதற்கு முன்பு, நீர் மேலாண்மைத் துறையிட மிருந்து ஒரு சான்றிதழ் பெறப்படும். அந்த சான்றி தழின்படிதான் பாலம் வடிவமைக்கப்படுகிறது. அந்த வகையில், தென்பெண்ணையாற்றில் வெள்ளத் தின் அளவு 54,000 கன அடி என சொல்லப்பட்டது. அதற்கேற்ப பாலத்தை பொறியாளர்கள் வடிவமைத்தனர். ஆனால், அன்றைக்கு பொழிந்த மழையின் அளவு 2 லட்சத்து 25 ஆயிரம் கன அடி. இந்த மழை வெள்ளம் பெருக்கெடுத்து சாத்தனூர் டேமிற்கு வந்தது. யாருமே எதிர்பாராத மிக கனமான மழைப் பொழிவு அது. டேமிற்கு வெள் ளத்தின் வரத்து அதிகமாக இருந்ததால், டேம் உடைந்துவிடுமோ என பயந்து டேமை திறந்து விட்டனர். இதனால், ஒரே வேகத்தில் 2,25,000 கன அடி வெள்ளமும் பாய்ந்து வந்ததால் அதன் வேகத்தினை தாங்கமுடியாமல் பாலம் உடைந்தது. இதுதான் உண்மை. இதில் எந்த ஊழலும் நடக்க வில்லை. இதே குற்றச்சாட்டை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பினார். அதற்கு தகுந்த விளக்கத்தை அமைச்சர் சபையில் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர். ஊழல் நடந்திருந்தால் எடப்பாடி சும்மா இருந்திருப்பாரா? ஆக, பாலம் உடைந்தது எதிர்பாராத வெள்ளத்தால்தான்; ஊழல்களால் இல்லை'' என்று விளக்கம் தருகின்றனர்.

"நேர்மையான நிர்வாகத்தைத் தரவேண்டும் என்று அயராது உழைக்கும் முதல்வர் ஸ்டாலின், இந்த பாலம் தொடர்பான ஊழலில் என்ன நடந்து என்கிற விசாரணைக்கு உத்தரவிடுவாரா?' என்கிற எதிர்பார்ப்பு துறையின் நேர்மையான அதிகாரி களிடம் எதிரொலிக்கிறது.