இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் நன்கொடையாகத் தந்த நிலங்களையும் சொத்துக் களையும் வக்ஃபு வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த சொத்துக்கள் பல ஆயிரம் கோடி மதிப்பி லானவை. சொத்துக்களை நிர்வகிப்பதற்காக வக்ஃபு சட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து புதிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது மத்திய பா.ஜ.க. அரசு.
இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியும் ஒப்புதலளித்த நிலையில், வக்ஃபு திருத்த சட்டம் அமலானது, நடைமுறைக்கும் வந்தது. ஆனால், இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், ஏ.ஐ.எம்.ஐ.எம். உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் குரல் கொடுத்தன; உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தன.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான முதல் அமர்வில் 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு முழுமை யாகத் தடை விதிக்கப்படவில்லை. மாறாக, 4 திருத் தங்களுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள். இந்த உத்தரவு, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்தச் சூழலில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், எம்.எல்.ஏ.வு மான பேராசிரியர் ஜவாஹிருல்லாவி டம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
வக்ஃபு திருத்த சட்டம் 2025-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சில திருத்தங் களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
வக்ஃபு சொத்துகள் குறித்து சர்ச்சைகள் எழுந்து அது நீதிமன்றத்தில் வழக்காக இருக்கும் போது இறுதித் தீர்ப்பு வரும்வரை சொத்துக்களை பறிமுதல் செய்யவோ அல்லது அதிகாரப்பூர்வப் பதிவுகளில் மாற்றவோ முடியாது என்ற தீர்ப்பும், அரசு அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வக்ஃபு சொத்து உரிமையை நிரூபிக்க வேண்டும் எனும் பிரிவை தடை செய்துள்ளதும், யார் வக்ஃபுவை உருவாக்கத் தகுதியானவர் என்று தனிப்பட்ட முறையில் எந்த அரசு அதிகாரியும் முடிவுசெய்ய முடியாது எனத் தெளிவுபடுத்தியிருப் பதும், ஒரு குறிப்பிட்ட வக்ஃபு தொடர்பான விசாரணை நடைபெறும்போது அது வக்ஃபு அல்ல என்று கருதப்படமாட்டாது என்று சொல்லி யிருப்பதும் ஆகிய தீர்ப்பு வரவேற்கப்படக்கூடியவை. ஆனால், இடைக்கால தீர்ப்பு, மிகுந்த அச்சத்திற்குரியதாகவும் இருக்கிறது.
எந்த வகையில் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக நீங்கள் அச்சப்படுகிறீர்கள்?
இடைக்கால உத்தரவின் 143 முதல் 152 வரையிலான பத்திகளில் உச்சநீதிமன்றம் கூறியவை சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது. அதாவது, முஸ்லீம் அல்லாதோர் வக்ஃபு செய்யலாம் என்று அனுமதித்த 104-வது பிரிவு, ஆக்ரமிக்கப்பட்ட வக்ஃபு சொத்துகளை மீட்க காலவரையறை சட்டம் 1963 பொருந்தாது என்ற 107-வது பிரிவு, நாட்டைவிட்டு வெளியேறியவர்களின் வக்ஃபு சொத்துகள் குறித்து சிறப்பு பிரிவுகள் கொண்ட 108-வது பிரிவு ஆகிய 3 பிரிவுகளும் மத்திய பா.ஜ.க. அரசின் திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட இந்த 3 பிரிவுகள் குறித்தும் உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை. இதனால், முஸ்லீம் விரோத மாநில அரசுகள், வக்ஃபு சொத்துக்களை கபளீகரம் செய்ய உதவிடும். மேலும், பல நூற்றாண்டுகாலமாக பயன்படுத்தப் பட்டுவரும் பள்ளிவாசல் மற்றும் அடக்கத் தலங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பினை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் வரவேற்கிறபோது நீங்கள் முரண்படுகிறீர்களே?
இடைக்காலத் தீர்ப்பில் சொல்லப்பட்ட வைகள் சிலவற்றை நாங்களும் வரவேற்கவே செய்கிறோம். ஆனால், முழுமையான தீர்வு கிடைக்காததால்தான், பாதகமான விசயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது. குறிப் பாக, நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய வக்ஃபு திருத்த சட்டத்தில் 44 திருத்தங்கள் இருந் தன (உண்மையில் 115 திருத் தங்கள் மேற்கொள்ளப் பட்டிருந்தன). அந்த 44 அபத்தமான திருத் தங்களில் ஒருசில திருத்தங்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகளை மீறும் பல பிரிவுகளுக்கு இடைக் காலத் தடை செய்யப் படாதது பெரும் ஏமாற் றத்தை அளிக்கிறது. இன் னும் சொல்லப்போனால், மத்திய வக்ஃபு குழுமத்தின் (வாரியம்) மொத்த உறுப்பினர் கள் 22 பேரில் அதிகபட்சம் 4 பேர் முஸ்லீம் அல்லாதோர் இருக்கலாம், மாநில வக்ஃபு குழுமத்தின் மொத்த உறுப்பினர்கள் 11 பேரில் 3 பேர் முஸ்லீம் அல்லாதோர் இருக்கலாம் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. இது எப்படி சரியாகும்? இந்து சமய அறநிலையத்துறை, சீக்கியர்களின் குருத்வாரா நிர்வாகத்தில் அந்த மதங்களைச் சேராதவர்களை உறுப்பினர்களாக சேர்க்க முடியுமா? இப்படிபல சிக்கல்கள் இருப்பதால்தான் இடைக்கால தீர்ப்பை முழுமையாக ஏற்க இயலவில்லை.
உங்களின் கோரிக்கைதான் என்ன?
இந்த திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்துசெய்து, வக்ஃபு சட்டம் 2013-யை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் முஸ்லீம் சமூகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை.
உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை?
வக்ஃபு வாரியத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் முழு வலிமையுடன் தொடரும் என்கிற அனைந்திந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியத்தின் அறிவிப்பின்படி போராட்டம் முன்னெடுக்கப்படும். இந்த போராட்டங்கள், நவம்பர் மாதம் 16-ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் நிறைவுபெறும். இந்த போராட்டங்களில் தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட அனைத்து தோழமைக் கட்சிகளும் எங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.
சந்திப்பு: -இளையர்