வக்பு சட்டத் திருத்த மசோதா வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ்கன்னா, சஞ்சய்குமார், கே.வி.விஸ்வ நாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. நீண்ட காரசாரமான விவாதத்துக்குப் பிறகு, நீதிமன்றம் வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்கால தடை விதித்தது. "இந்த இடைக்கால தடை மூலம் வக்பு உடைமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன'' என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
"இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. சட்டப் போராட்டத்தில் நமக் குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத்தந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்விக்கு நெஞ்சார்ந்த நன்றி'' எனத் தெரிவித் திருந்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். இதேபோல் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இடைக்கால தடை குறித்த கருத்துக்களை தெரிவித்திருந் தனர்.
த.வெ.க. சார்பில், மூத்த வழக்கறிஞர் அபி ஷேக் சிங்வி வாதாட முயற்சி எடுத்த அக் கட்சியின் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நம்முடன் இந்த வழக்கு குறித்து பகிர்ந்துகொண்டார்.
த.வெ.க. வக்பு விஷயத்தில் சட்டப் போராட்டத்தை கையிலெடுக்கக் காரணம் என்ன?
எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் தனது மெஜாரிட்டியைப் பயன்படுத்தி, பா.ஜ.க. அரசு இந்த சட்டத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த சட் டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தி ருப்பதாக மேலோட்டமாக அவர்கள் சொன்னா லும் மூன்று முக்கியப் பிரச்சனைகள் உள்ளன.
நிர்வாகக் கட்டமைப்பில் முஸ்லிம் அல்லாத 2 பிரதிநிதிகள் இருக்க வேண்டும், கலெக்டர் அல்லது அதற்கு நிகரான அதிகாரி வக்ஃபு நிலத்தை அளவீடு செய்ய வேண்டும், தொடர்ந்து 5 ஆண்டுகளாக முஸ்லிம்களாக உள்ளவர்கள் மட்டுமே தங்கள் சொத்துக்களை வக்பு வாரியத்துக்கு தானமாக வழங்கமுடியும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆர்ப் பாட்டம், உண்ணாவிரதம் எனப் பல்வேறு வகை யில் போராடினாலும் நிரந்தரத் தீர்வு கிடைக்க என்ன செய்யலாம் என்று எங்கள் தலைவர் விஜய் கேட்டார். சட்டப்போராட்டம்தான் ஒரே வழி என்கிறபோது, அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த சொன்னார்.
அபிஷேக் சிங்வியை தேர்வு செய்தது ஏன்?
இந்த சட்டத்திற்கு எதிராக ராஜ்யசபாவில் அவரது உரையைப் பார்த்தோம். இந்த சட்டத்தை எதிர்த்துப் போராட அவரது வாதங்கள் உதவும் என்று உணர்ந்து அவரையே த.வெ.க. சார்பில் வழக்கறிஞராக நியமிக்கலாம் என முடிவுசெய்து, தலைவரின் வழி காட்டுதலின்படி அவரை சந்தித்து, எங்கள் கட்சி இந்த சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதை எடுத்து சொன்னோம். அவரும் எங்களுக்காக ஆஜராக ஒப்புக்கொண்டார். இரு அவையிலும் நிறைவேற்றப் பட்ட சட்டத்தை நிறுத்திவைக்க முடியுமா என்ற கேள்வி நீதித்துறையில் உள்ள பலருக்கு எழுந்தது. 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டி ருந்தாலும் எந்த மாதிரியான செக்ஷன் போட்டு ஆர்க்யூ மெண்ட் செய்தால் ஸ்டே கிடைக்கும், இந்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெறவைக்க முடியும் என்று சிங்வியுடன் ஆலோசனை செய்தோம். அப்போது அவர் சில சட்ட வழிகளைச் சொன்னார். இதனை உடனே விஜய்யிடம் தெரிவித்து, அவரும் உடனே ஒப்புதல் கொடுத்த பின்னர் கேஸ் பைல் பண்ணினோம்.
நீதிமன்றத்தில் த.வெ.க. வைத்த முக்கியமான வாதங்கள் என்ன?
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கை விசா ரணைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கடுமை யாக வாதிட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் கூட இந்த வழக்கை ஏன் உயர் நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என்று கேட்டனர். வக்பு சட்ட விவகாரம் நாடு முழுதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சுமார் 8 லட்சத்துக்கும் மேலான வக்பு சொத்துக்கள் உள்ளன. அதனை மொத்தமும் கையகப்படுத்தும் வகையிலேயே தற்போதைய சட்டத்திருத்தம் உள்ளது. எனவே, இந்த மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிப்பது சரியாக இருக்காது. உச்சநீதிமன்றம்தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். வக்பு சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அபிஷேக் சிங்வி வாதிட்டார். இதனை ஏற்று உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்தது.
துஷார் மேத்தா "விரிவாகக் கருத்து கேட்ட பிறகுதான் இரு அவைகளிலும் இந்த மசோதாவை நிறைவேற்றினார்கள். ஆகையால் எதிர் மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும்' என்றார். அப்போது அபிஷேக் சிங்வி, 'அரசியலமைப்பின் அடிப்படை சட்டத்தை எந்த அரசாலும் மாற்ற முடியாது. வக்பு சட்டத் திருத்தத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய திருத்தங்கள் உள்ளன. அவை குறிப்பிட்ட மதத்தினரை ஒடுக்கும் வகையிலும், உரிமையைப் பாதிக்கும் வகையிலும் உள்ளன. இந்த சட்டத்திருத்தத்தை நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார் கள். அதனை கருத்தில் கொள்ளவேண் டும் என்று அழுத்தமாக வாதாடினார்.
இதையடுத்து நீதிபதிகள், "திருப் பதி தேவஸ்தானம், தேவசம்போர்டு உள்ளிட்ட அமைப்பில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா? வக்பு சொத்தை மாவட்ட கலெக்டர் முடிவு செய்வது நியாயமானதா? ஏற்கனவே வக்பு என்று பதிந்த சொத்து புதிய சட்டத்தின்படி செல்லாதது என்று அறிவிக்கப்படுமா? வக்ஃபு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை?' என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப் பியதுடன் இடைக்கால தடை கொடுத் தார்கள். மேலும், வழக்கு முடியும் வரை புதிய சட்டத்தின்படி வாரியத்தின் உறுப்பினர்கள் நியமனம் எதுவும் நடை பெறக்கூடாது, 1995 சட்டத்தின் கீழ் பதியப்பட்ட சொத்துகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். இதனை ஏற்று உறுதியளித்த சொலிசிட்டர் ஜெனரல், வழக்கு முடியும் வரை புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட மாட் டார்கள், மாநில வாரியங்களில் நியமிக்கப்பட்டால் அது செல்லாததாக கருதப்படும் என்று தெரிவித்தார்.
தி.மு.க. சார்பிலும் மனு தாக்கல் செய்யப் பட்டிருந்ததே?
உண்மைதான். தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட பல தரப்பு வழக்கறிஞர்கள் இருந்தனர். விவாதத்தில் முக்கிய பங்காற்றி இந்த இடைக்கால உத்தரவை பெற முக்கிய காரணமாக இருந்தது த.வெ.க. சார்பிலான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி.
ஒரு பக்கம் நீங்கள் இந்த நட வடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் அகில இந்திய முஸ்லீம் ஜமாத் அமைப்பின் தலைவர் சகாபுதீன் ரஸ்வி, த.வெ.க. வுடன் இசுலாமியர்கள் எந்தத் தொடர் பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தாரே?
ஒரு உண்மையான அமைப்பு சொன் னால் பரவாயில்லை. பெயர், ஊர் தெரி யாதவர்கள் எதிர்ப்பதை கண்டுகொள்ள வில்லை. எங்களது போராட்டத்திற்கு இஸ்லாமிய சகோதரர்கள் உள்பட எல் லோரும் ஆதரவு கொடுத்துவருகின்றனர்.
2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்குகளை கவரவே வக்பு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து மூன்றுமுறை பா.ஜ.க. ஆட்சி யில் மக்களுக்கு இதனை செய்தோம் என்று சொல்ல எதுவும் இல்லாததால் பா.ஜ.க. அரசு இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது. பா.ஜ.க. ஆளும் ஆறு மாநி லங்கள், வக்பு திருத்த சட்டத்தை அமல் படுத்த தீவிரமாக உள்ளன. அம்மாநிலங் களின் வக்பு போர்டுகளையும் கையில் எடுத்துள்ளன. அந்த அளவுக்கு பா.ஜ.க. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிர மாக உள்ளது. இந்த சட்டம் என்ன சொல் கிறது, திருத்தப்பட்ட சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கருத்தரங்கம் நடத்த உள்ளோம். இஸ்லாமியர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களது போராட்டம் தொடரும். இதில் தேர்தல் அரசியலோ, வேறு எந்த உள்நோக்கமோ கிடையாது. வக்பு சட்டத் திருத்த மசோ தாவை ஒன்றிய அரசு திரும்பப் பெறும் வரை த.வெ.க. தொடர்ந்து போராடும்.
சந்திப்பு: -வே.ராஜவேல்