கடந்த ஆகஸ்டு மாதத் தில் புதுடெல்லியில் பத்திரிகை யாளர் சந்திப்பை நடத்திய ராகுல்காந்தி, தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியுடன் சேர்ந்து கொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி னார். இந்நிலையில் செப்டம்பர் 18-ஆம் தேதி காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய ராகுல், இந்த வாக்கு நீக்கத்தில் பாதிக்கப்பட்ட 12 நபர்களையும் மேடையேற்றி அவர்களையும் சாட்சியமாக வைத்து, "தேர்தல்கள் எப்படி திருத்தப்படுகின்றன என இந்நாட்டின் இளைஞர்களிடம் விளக்குவதில் இது மற்றொரு மைல்கல்.
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்திய ஜனநாயகத்தை அழித்தவர்களைப் பாது காத்துக்கொண்டிருக்கிறார் என உறுதியான ஆதாரங் களுடன் புகார்கூறுகிறேன்.
ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு குழுவினைச் சேர்ந்தவர் கள் லட்சக்கணக்கான வாக்காளர்களைக் குறிவைத்து இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலிலிருந்து அகற்றுகின்றனர். பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பிரதானமாக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் குறிப்பாக குறிவைக்கப்படுகின்றனர். அதற்கு 100 சதவிகிதம் ஆதாரம் கண்டுபிடித்திருக்கிறோம்.
கர்நாடகாவின் சட்டமன்றத் தொகுதி களில் ஒன்று ஆலந்த். இங்கே 6,018 வாக்குகளை அழிக்கமுயன்றிருக்கிறார்கள். 2023 தேர்தலில் ஆலந்த் தொகுதியில் எத்தனை வாக்குகள் அழிக்கப்பட்டன என எங்களுக்குத் தெரியவில்லை. அவை 6,018-ஐவிட ரொம்பவே அதிகமிருக்கும். ஆனால் 6,018 வாக்குகளை அழிக்கும்போது ஒருவர் அகப்பட்டார். அப்படி அவர் அகப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வு.
ஒரு பூத் லெவல் அதிகாரி, அவளது மாமாவின் வாக்கை அழிக்க முயன்றதைப் பார்த்துவிட்டு, அது யாரென கண்டுபிடிக்க முயன்றிருக்கிறார். அந்த விண்ணப்பத்தைப் போட்டது அந்த அதிகாரியின் பக்கத்து வீட்டுக்காரர். அவரிடம் விசாரித்தால் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றிருக்கிறார். ஆலந்தில், வாக்காளர்களைப்போல ஆள்மாறாட்டம் செய்து 6,018 விண்ணப்பங்கள் தாக்கல்செய்யப்பட்டன. இந்த விண்ணப் பங்களை சம்பந்தப்பட்ட அந்த நபர்கள் விண்ணப்பித்திருக்கவில்லை. அதற்கான ஆதாரங்களை இப்போது காட்டுகிறோம்.
இது மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தி தானாகவே விண்ணப்பிக்கப் பட்டது. ஆலந்த் தொகுதியில், கர்நாடகாவுக்கு வெளியேயுள்ள மாநிலங்களைச் சேர்ந்த மொபைல் எண்கள் மூலம் காங்கிரஸ் வாக்காளர்களை நீக்க விண்ணப்பிக்கப்பட்டது. அந்த மொபைல் எண்களுக்குரியவர்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை வரைபடத்தில் பார்க்கலாம். ஆக, இது ஏதோ தற்செயலாக நடந்ததல்ல. குறிப்பாக காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற பூத்களைக் குறிவைத்து இந்த வாக்காளர்கள் நீக்கம் நடந்தது.
கோதாபாய் எனும் பெண்மணி பெயரில் ஒருவர் போலி லாக்-இன் உருவாக்கி 12 வாக்காளர்களை நீக்க முயற்சி செய்திருக் கிறார்கள். சூர்யகாந்த் என்றொருவர் பெயரிலும். இவர்கள் இருவருக்கும் இது நடந்தது தெரியவே தெரியாது. பின் இது தடுக்கப்ப ட்டுவிட்டது.
ஆக, இந்த எண்கள் யாருடையவை? இவை எப்படி இயக்கப்பட்டன? எங்கிருந்து இவை செயல்பட்டன? செயல்முறையைச் சீர்குலைப்பதற்கான ஓ.டி.பி.யை யார் உருவாக்கினார்? கேள்விகள் இருக்கின்றன.
இந்தச் செயல்முறை தனிநபர்களைப் பயன்படுத்தி அல்ல, மென்பொருளைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இது ஒரு மையப்படுத்தப்பட்ட முறையில், பெரிய அளவில் செய்யப்பட்டது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இது தொண்டர்கள் மட்டத்தில் செய்யப்படவில்லை, இது கால்சென்டர் மட்டத்தில் செய்யப்பட்டது. காங்கிரஸ் வலுவாக இருக்கும் பூத்களை குறிவைத்து அதிலும் காங்கிரஸுக்கு அதிகமாக வாக்கு விழுந்த 10 பூத்களில் அதிகளவு வாக்குகள் நீக்கப்பட்டிருக்கிறது. 2018-ல் காங்கிரஸுக்கு அதிக வாக்கு விழுந்த 6 பூத்களிலும் அதற் கடுத்தபடியாய் வாக்குகள் நீக்கப்பட்டி ருக்கின்றன. இது தற்செயலானது அல்ல. திட்டமிடப்பட்ட செயல்பாடு. நான் ஏன் ஞானேஷ்குமார் மீது நேரடியாக குற்றம் சுமத்துகிறேன்?
இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் ஒரு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் 18 மாதங் களில் 18 கடிதங்களை தேர்தல் ஆணையத் துக்கு அனுப்பி மிகவும் எளிய விஷயமொன்றை கேட்கிறது. இந்த வாக்காளர் நீக்க படிவங்களை அனுப்பிய ஐ.பி. டெஸ்டினேஷன், இந்த விண்ணப்பங்கள் தாக்கல்செய்யப்பட்ட சாதன இலக்கு போர்ட்கள், அந்த ஓ.டி.பி. ட்ரெய்ல்ஸ் ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் அவற்றைத் தரவேயில்லை. ஏன் கொடுக்க மறுக்கிறது? கொடுத்தால் இந்த ஆபரேஷன் எங்கிருந்து செயல்படுத்தப்பட்டது என்பது தெரிந்துவிடும்.
2024 பிப்ரவரியில் முதல் தகவலறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடைசியாக செப்டம்பர் 25-ல் 18-வது நினைவூட்டல் கடிதத்தை எழுதுகிறது. இது நடந்து கொண்டிருக்கையில் கர்நாடக தேர்தல் ஆணையம், டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு தகவல்களை வழங்குமாறு கோருகிறது. எதற் கும் மசியவில்லை தேர்தல் ஆணையம். ஞானேஷ்குமார்தான் இதில் சம்பந்தப்பட்ட நபர்களைப் பாதுகாக்கிறார் என்பதற்கு இதைவிட உறுதியான ஆதாரம் என்ன வேண்டும்?
இதனை மேற்கொள்ளும் அந்த யாரோ ஒருவர் யார்? அதற்கான விடை தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது. இதைச் செய்வது யாரென இந்திய தேர்தல் ஆணையம் அறியும். அவர்கள் இந்தியாவின் ஒவ்வொரு தனி இளைஞர்மீதும், அவர்களது எதிர் காலத்தின் மீதும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த விவரங்களைக் கொடுக்கவில்லை எனில் ஜனநாயகத்தைப் படுகொலை செய்கிறவர் களைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையர் கர்நாடக சி.ஐ.டி.க்கு யார் இதைச் செய்கிறார் என்பதைச் சொல்ல மறுக்கிறார்.
இது எதுவோ தனிப்பட்ட விஷயமல்ல. இதுபோல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மகாராஷ்டிராவின் ரோஜ்வாராவிலும் இதே யோசனையைப் பயன்படுத்தி 6,850 வாக்குகள் சேர்க்கப் பட்டுள்ளன. ஆலந்தில் வாக்குகள் நீக்கப் பட்டன. ரோஜ்வாராவில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள். ஆனால் அடிப்படையான யோசனை ஒன்றுதான். வெளியிலிருந்து போன்கள் மூலம் வாக்காளர்கள் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்துக்குள்ளிருந்தே எங்களுக்குத் தகவல் கிடைக்கத் தொடங்கி விட்டது. தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் எங்களுக்கு தகவல்களை வழங்கத்தொடங்கி விட்டனர். இது நிற்கப்போவதில்லை.
தேர்தல் ஆணையம் இந்தப் போன்களின் தரவுகளை வெளியிடவேண்டும், இதற்கான ஓ.டிபி.க்களை ஒரு வாரத்துக்குள் வெளியிடவேண்டும். இன்னும் சில மாதங்களில் வாக்குத் திருட்டு குறித்த முழுமையான ரிப்போர்ட்டை வெளியிடப்போகிறோம்''’என அதிரடித்தார்.
இறுதியாக மக்களை நோக்கி வேண்டுகோள் விடுத்த ராகுல்காந்தி, “"இந்திய ஜனநாயகத்தைக் காலிசெய்துவிட்டார்கள். ராகுல்காந்தியால் மட்டும் ஜனநாயகத்தைக் காப்பாற்றமுடியாது. இந்திய மக்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்''’என அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், அவை தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது. பா.ஜ.க.வில் யார் பெயரையும் ராகுல் குறிப்பிடாத நிலையில், முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்கூர், "பங்களாதேஷ், நேபாள் போன்ற நிலமையை இந்தியாவில் ஏற்படுத் தப் பார்க்கிறார்' என ராகுல் மீது பாய்ந் திருப்பது பலரது விழிகளையும் உயரச் செய்துள்ளது.