காங்கிரஸ் கட்சியின் வாக்குத் திருட்டு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், இதற்கு ஹரியானா மாநிலமும் தப்பவில்லை.
கடந்த 2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் முன் னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் காங்கிரஸ் எம்.பி.யுமான பிரிஜேந்திர சிங், ஜிந்த் மாவட்டத்திலுள்ள உச்சனா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக பா.ஜ.க.வின் தேவேந்தர் சத்தார் பூஜ் அட்ரி போட்டியிட்டார்.
தேர்தலில் 32 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிரிஜேந்திர சிங், வெற்றிபெற்ற தேவேந்தருக்கு எதிராக அவரின் வெற்றியை ரத்து செய்யக்கோரி வழக்குத் தொடர்ந்தார். அந்த மனு புறக்கணிக்கப்பட்ட நிலையில், தபால் வாக்குகளை மட்டும் மறு எண்ணிக்கை செய்யக் கோரி ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஏன் தபால் வாக்குகளை மட்டும் எண்ணச் சொன்னார்?
அந்தத் தேர்தலில் பிரிஜேந்திர சிங் வாங்கிய வாக்குகள் 48,936, தேவேந்தர் வாங்கிய வாக்குகள் 48,968. இதில் தபால் வாக்குகள் மொத்தம் 1,377. ஆனால் தேர்தல் அதிகாரி மொத்த தபால் வாக்குகளில் 215 வாக்குகள் செல்லாதவை என நிராகரித்தார். மிச்சமுள்ள 1,158 வாக்குகளில் 636 வாக்குகள் பிரிஜேந்திர சிங்குக்கு விழுந்தன.
வெற்றி வித்தி யாசத்தைவிட தகுதிநீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகள் அதிகமிருப்பின் மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் மறுபடியும் எண்ணவேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்று. அது நடக்கவில்லை. அதிலும் நீக்கம் செய்யப்பட்ட 215 வாக்குகளில் 150 வாக்குகள் பார்கோடு ஸ்கேன் ஆகவில்லை என தேர்தல் அதிகாரியால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாகும். பார்கோடு ஸ்கேன் ஆகாத பட்சத்தில் கவரைப் பிரித்துப் பார்க்கவேண்டும். ஆனால் தேர்தல் அதிகாரியோ வாக்கையே செல்லாதென அறிவித்துவிட்டார் என்பது பிரிஜேந்திர சிங் தரப்பு வாதம்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பதில் மனு போட்டார் தேவேந்தர். அதைப் புறக்கணித்து பிரிஜேந்தரின் மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி பல முறை அழைப்புவிடுத்தும் வராமலே இருக்கிறார் தேவேந்தர். இந்த நிலையில்தான் இந்த வழக்கில் ஹரியானா உயர்நீதிமன்றம் அடுத்து என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.