சரசரவென அரசியலில் உச்சம் தொட்ட தே.மு.தி.க., சீட்டுக்கட்டாக சிதறிக்கிடக்கிறது. அதைக் கட்டிக்காக்க வேண்டிய தொண்டர்களும், கரை சேர்க்க வேண்டிய தலை மையும் முட்டிமோதுகிறார்கள் என்பதுதான் சமீபத்திய செய்தி.
உள்ளாட்சித் தேர்த லைச் சந்திப்பது தொடர்பான குமரி மேற்குமாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், 7-ந் தேதி நடந்தது. மா.செ. ஜெகநாதன், அவைத் தலைவர் ஸ்ரீகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், “""வளர்ந்துவந்த தே.மு.தி.க. அழிந்துபோகக் காரணமே கேப்டனும், அண்ணியாரும் எடுக்கும் தவறான முடிவுகள்தான். மேலும் ஒரு தவறான முடிவை அவர்கள் எடுக்கக்கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கக் கூடாது. அப்படி நடந்தால் குமரி தே.மு.தி.க.வைக் கலைத்துவிட்டு மாற்றுக்கட்சிக்குச் செல்வோம். இதைத் தீர்மானமாக பதிவுசெய்யுங்கள்''’என்று கேட்டுக்கொண்டதால், அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து குமரி தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ""2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணி, 2019-ல் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி. இப்படி கூட் டணிகளை அமைத்துவிட்டு, அதைத் தொண்டர் களின் முடிவு என்று தலைமை அறிவிக்கிறது. எந்தத் தொண்டன் இதை விரும்பினான். இனி தே.மு.தி.க.வுக்கு தேவை, தலைமையின் முடிவல்ல… தொண்டர்களின் முடிவுதான்'' என்றார்.
""ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றியம், நகரம், மாவட்டம் என 53 நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்களில் 48 பேரின் கருத்தும், குரலும் இதுவாகத்தான் இருந்தது. அதனால்தான், தீர்மானம் போட வேண்டிய சூழல் உருவானது. அதைத் தலைமைக்கு அனுப்பி னோம்''’என்றார் குமரி மேற்கு மா.செ. ஜெகநாதன்.
இந்தத் தீர்மானத்தைப் பார்த்து கடுப்பானது தலைமை. மா.செ. ஜெகநாதனைத் தொடர்பு கொண்டு கடுமையாக சாடியிருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி. அதற்குள் இந்தத் தீர்மானம் பற்றிய தகவல், ஏற்கனவே கொதிப்பில் இருக்கும் மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்குப் பரவியது. தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, ஈரோடு, சேலம் மாவட்ட நிர்வாகிகளும் இதேபோலத் தீர்மானம்போடத் துணிந்தார்கள். ஆனால், இனி எந்தக் கூட்டமும் நடத்தக்கூடாது என்று மா.செ.க்களுக்கு உத்தரவிட்டு, அதை கப்சிப் ஆக்கிவிட்டது தலைமை. மேலும், இதுபோல் மீண்டும் தொடராமல் இருக்க, மா.செ. ஜெக நாதனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது தலைமை. ஜெகநாதனோ அதே சூட்டோடு தி.மு.க.வில் இணைந்தார்.
“உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. உடனான கூட்டணி தொடரும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருக்கும் நிலையில்... குமரி மாவட்ட தீர்மானம் எனும் தீ மற்ற மாவட்டங் களுக்கும் மெதுவாகப் பரவுகிறது.
-மணிகண்டன்