பத்ம சேஷாத்திரி பால பவன் என்னும் PSSB பள்ளியில் இழிவான இச்சைக்கு மாணவிகளை குறிவைத்து மலிவான செயல்களை ஆசிரியர் ராஜகோபாலன் பல வருடங்களாக செய்துவந்த செய்தி வெளியாகி, தமிழகம் முழுவதையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. திரையுலகைச் சேர்ந்த பலரும் இதற்குக் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாகவும் ஆசிரியரையும் பள்ளி நிர்வாகத்தையும் கண்டித்தும் கடுமையான கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர். "96' படத்தில் த்ரிஷாவின் பள்ளிப் பருவ பாத்திரத்தில் நடித்திருந்த கௌரிகிஷன், தனது பள்ளி நாட்களில் தனக்கும் இப்படியான விஷயங்கள் நடந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
"நான் பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர் மாணவ-மாணவிகளை இரட்டை அர்த்தத்தில் பேசுவது, சாதியை குறிப்பிட்டுப் பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பைக் கிண்டல் செய்வது, நம் குணாதிசயத்தைக் கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ- மாணவியர் மீது சுமத்துவது போன்ற கொடுமைகளை செய்துள்ளனர். நான் மட்டுமல்லாது, என்னுடன் படித்த அனைவரும் இதை எதிர்கொண்டனர்'' என்று கூறியுள்ளார்.
"ராட்சசன்' படத்தில் மாணவிகளை இதுபோன்ற கொடுமைக்கு ஆளாக்கும் ஒரு ஆசிரியர் பாத்திரத்தை உருவாக்கியிருந்தார் இயக்குனர் ராம்குமார். அவர் PSSB சம்பவம் குறித்து, "ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யப்படவில்லை. பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்தச் சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜைவிட மோசமானவர்களாக இருந்தார்கள்'' என்று கூறினார். இது குறித்து இயக்குனர் பேரரசு, "இப்படிப்பட்ட ஆசிரியர்களை கடுமையாக தண்டிப்பதுடன் மட்டுமல்லாமல் அதன் பிறகு அவர்கள் வேறெங்கும் ஆசிரியர் பணி தொடர முடியாதவாறு தண்டனை இருக்க வேண்டும்'' என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். "குழந்தைகளுக்குப் பெற்றோர் இடத்தில் நிற்க வேண்டிய ஆசிரியர்களின் இடத்தைக் கறை படிய வைக்கும் ராஜகோபாலன் போன்ற நபர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர் களே. தண்டனைகள் கடுமையாக்கு வதே சிறந்த தீர்வு'' என்று உறுதியாகக் கூறியுள்ளார் சேரன்.
நடிகைகள் இது குறித்து என்ன சொல்லியிருக்கிறார்கள்? "குற்றவாளியை வெளியுலகுக்குச் சுட்டிக்காட்டிய சிறுமிகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அந்த அரக்கனுக்கு எதிராக முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்'' என்கிறார் நிவேதா பெத்துராஜ். "ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் உதவாது. உடனடியாக விசாரணை நடத்தி, குற்றம் செய்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். குழந்தைகள் மனதில் பயத்தோடு பள்ளிக்குச் செல்லமுடியாது. அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்'' என்கிறார் குஷ்பூ. இப்படி, நடந்த கொடூரத்துக்கு திரைத்துறையினர் பலரும் தங்கள் கண்டனத்தையும் குற்றவாளி கடுமையாக தண்டிக்கப் பட வேண்டுமென்ற கோரிக்கையையும் தெரிவித்துள்ளனர்.
இது தடுப்பூசிக் காலம்... நீங்களும் போட்டுக்க வேண்டிய நேரம்!
கொரோனா தொற்றுப் பரவல் உச்சக்கட்டத்தில் இருக்கும்நிலையில்... தடுப்பூசிதான் நம் கையில் இருக்கும் மிகப்பெரிய ஆயுதமென்று அரசும் மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மக்களுக்கு சிறு அச்சமும் இருந்து வருகிறது. அது தேவையில்லை என்பதை வலியுறுத்தும்விதமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடிகைகள் பலரும், தங்கள் புகைப்படத்தை பகிர்ந்துவருகின்றனர். சமீபத்தில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ரம்யா பாண்டியன், மஞ்சிமா மோகன், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டி.டி. உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படங்களை பகிர்ந்தனர். நடிகர் சூரி கடந்த வாரம் தடுப்பூசி போட்டுக்கொண்டு சில நாட்களுக்குப் பிறகு, "நானும் என் மனைவியும் கரோனா தடுப்பூசி போட்டு ஆறு நாளாச்சு. எனக்கு மட்டும் இரண்டுநாள் உடல் சோர்வும், ஊசி குத்தின இடத்துல வலியும் இருந்துச்சு. இப்ப நானும் நார்மலாகிட்டேன். எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்குங்க. உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக, நாட்டுக்காக'' என்று மக்களுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் ஹரிஷ் கல்யாணும், தான் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களும் தயங்காமல் போட்டுக் கொள்ள வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்.
-வீபீகே