"தமிழ் தாத்தா' என்ற பட்டத்திற்குரியவரின் பெயரில் ஒட்டியிருந்த சாதிப்பட்டம் நீக்கப்பட்டு, உ.வே.சாமிநாதர்’என பாடப் புத்தகத்தில் அச்சிடப் பட்டுள்ளது. இதுபோல பல தலைவர்கள், அறிஞர்களின் பெயர்களோடு ஒட்டியிருந்த சாதி, பாடப்புத்தகங்களில் நீக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடப்புத்தகங்களை வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் சிலவற்றில் இன்னமும் சாதி அடை யாளம் நீங்கவில்லை.

scc

"ஆதி திராவிட நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகளில் ‘ஆதி திராவிடர்’ என்ற பெயர் இருப்பது அங்கு பயிலும் மாணவ-மாணவிகளிடம் உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. எனவே அதனை சமூக நலப் பள்ளிகள் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமா வளவன் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, "கார்ப்பரேஷன் ஸ்கூலா?'’என இழிவாகப் பார்க்கும் பார்வை இருந்தது. அதனால், ‘"சென்னை பள்ளிகள்'’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றத்தால், சமூகத்தில் உள்ள நிலை மாறிவிடுமா என்ற கேள்விக்கு விரிவாக விளக்கம் தருகிறார் "சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் இமையம்.

Advertisment

ss

"அரசுப் பள்ளிகளுக்கான மீட்டிங்கின்போது சி.இ.ஓ., டி.இ.ஓ. பொறுப்பில் இருப்பவர்கள், பொதுவான அரசுப்பள்ளி ஹெட்மாஸ்டர்களை அந்த ஊர் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். அதே நேரத்தில், ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் என்றால், “"ஆதி திராவிடர் ஸ்கூல் ஹெச்.எம் யாரு?'’என கேட்பார் கள். மற்ற ஹெச்.எம்.களின் ஒட்டுமொத்த பார்வையும் அவர் பக்கம் திரும்பும். அவர் கூச்சப்பட வேண்டிய உளவியல் சிக்கல் ஏற்படும். அதுபோலத்தான், ஆதி திராவிடர் நல விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் உளவியல் ரீதியான சிக்கல்கள் ஏற்படுகின்றன. நானும் ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கிப் படித்தவன் தான். ஆதி திராவிடர் நலப் பள்ளியில்தான் ஆசிரியராக இருக்கிறேன். இந்த சிக்கல்களை நேரடியாக உணர்ந்திருக்கிறேன்.

சமூக நலப் பள்ளிகள் எனப் பெயர் மாற்றுவதால் உடனடியாக சமூக மாற்றம் ஏற்பட்டுவிடாது. ஆனால், உளவியல் ரீதியாக சின்ன மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்பாக அமையும். காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படும்''’என்கிறார் உறுதியான குரலில்.

Advertisment

எந்த ஒரு சமூகப் புரட்சியும் சின்னச் சின்ன மாற்றங்களால்தான் நடந்திருக்கின்றன. "ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தனது துறையின் மானியக் கோரிக்கையின்போது, முதல்வரின் ஒப்புதலோடு இந்தக் கோரிக்கைக்கு தீர்வு காண்பார்' என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

-கீரன்