ஒரு பக்கம் கும்பமேளா... இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசித் திருவிழா என மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, இந்தப் பேரிடரின் இரண்டாம் அலையைக் கையாளும் விதம் பலவித சர்ச்சை களை உருவாக்கிவருகிறது. இந்த நிலையில், தடுப்பூசித் திருவிழா நேரத்தில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக, டி.வி. கேமராக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக், மறுநாளே இதயத் துடிப்பு நின்றுபோய் -நினைவிழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மரணமடைந்த சோகத்தால், தடுப்பூசி மீதான பயமும் குழப்பமும் பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. திருவிழா என்று மோடி அரசு விளம்பரப்படுத்திய தடுப்பூசி விழிப்புணர்வு, மக்களைத் தெறித்து ஓட வைத்துள்ளது.
இந்த இரண்டாவது அலை கொரோனா அனைவரையும் தாக்குகிறது. ஓராண்டுக்கு முன்பு கொரோனா நோய் ஏற்பட்டுக் குணமானவர்களையும் புதிய கொரோனா தாக்குகிறது. கொரோனா நோய்க்கான தடுப்பூசி போட்டுக்கொண்ட வர்களையும் புதிய கொரோனா நோய் விட்டுவைக்க மாட்டேன் என்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் புதிய கொரோனா நோயால் மரண மடைகிறார்கள்.
""முந்தைய கொரோனா வயதானவர்களுக்கும், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கும் மரணத்தைத் தந்தது. புதிய கொரோனா, பிஞ்சுக் குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லை. மரணத்தைப் பரிசாகத் தருகிறது' என்கிறார்கள் கொரோனா தடுப்பு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள். முன்பு இருந்த கொரோனா வைரஸை உலகம் முழுவதும் கண்டுபிடித்துக் கட்டுப்படுத்தியபோதும், அந்த வைரஸ் உயிரோ டிருக்க தனது உருவை மாற்றிக்கொண்டது. இரண் டாவது அலையாக அது தமிழகத்தைத் தாக்கத் தொடங்கியபோது, தமிழகத் தேர்தல் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்ட வைரஸ், வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இப்பொழுது தமிழகத்தில் தினமும் பத்தாயிரம் பேர் கொரோனாவின் புதிய வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த முறை கொரோனா வைரஸ் தாக்கிய போது, அதன் தினசரி தாக்குதல் எண்ணிக்கை, தமிழகத்தில் ஆறாயிரம் என இருந்தபோது... தமிழக அரசு, மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி லாக்டவுன் என அறிவித்தது. ஒட்டுமொத்த தமிழ்நாடே வெறிச்சோடியது. மகாராஷ்டிராவில் இன்றைய தொற்று நோயாளிகள் கணக்கே அறுபதாயிரத்தைத் தாண்டிவிட்டது. அங்கு மருத்துவமனையில் பெட் இல்லை. நோயாளிகளின் மூச்சுத்திணறலைத் தடுக்கும் ""ரெம்டெசிவர்' மருந்து இல்லை. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மூச்சுவிடச் சிரமப்படும் நோயாளிகள், சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லை. மகாராஷ்டிரா அரசு, மத்திய அரசை குறை சொல்லி, குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறது. அங்கே செத்துமடியும் மக்களின் எண்ணிக்கையைத் தடுக்க ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இந்த நிலையை நோக்கித் தமிழகமும் தள்ளப்பட்டுவிட்டது என்கிறார்கள் தமிழக மருத்துவர்கள்.
இதற்கு ஒரே தீர்வு, தமிழக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது தான். அத்துடன் அனைவரும் முகக் கவசம் அணிவதுதான் என்று அழுத்த மாக வலியுறுத்துகிறார்கள். ""தடுப்பூசி போட்டுக்கொண்டால் உருமாறிய கொரோனா வந்தாலும் இறப்பு வராது. முகக்கவசம், சங்கிலித்தொடர்போல் கொரோனா பரவுவதைத் தடுத்து நிறுத்தும்'' என்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். ஆனால் தடுப்பூசி தேவையான அளவிற்கு தமிழகத்தில் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.
. அத்துடன் நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் மாரடைப்பால் இறந்து போனது, கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்கிற மனநிலைக்கு பொதுமக்களை கொண்டுவந்துவிட்டது என்பதை, சுகாதாரத்துறை அதிகாரிகளும் உணர்ந்து வருத்தப்படுகிறார்கள்.
மருத்துவமனை வாசலில் நின்று, ""நடிகர் விவேக்குக்கு யாருய்யா ஊசி போட்டது. இந்த ஊசி போடும் கலாச்சாரமே தவறானது. கொரோனா வுக்கு தடுப்பூசி போடுவது தவறு. ஊசி போட்டு விவேக்கை கொன்றுவிட்டார்கள்'' என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பரபரப்பாகி, சமூக வலைத்தளங்களில் வைரலானதால், கிராமம்-நகரம் என எல்லாப் பகுதிகளிலும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மனநிலையில் இருந்தவர்களும், கொரோனா வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என முடி வெடுத்துவிட்டனர். தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரங்களும் வேகம் எடுத்தன.
தடுப்பூசி போட்டு மக்களைக் கொன்னுடு றாங்க என சமூகவலைத்தளங்களில் படித்தவர்கள் பலர் எழுதத் துவங்கினர். யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதீர்கள், தடுப்பூசி அரசியல் மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் வியாபார நோக்கத்தைத் தவிர மக்களின் நலனுக்கானது அல்ல. உங்கள் விருப்பத்தை மீறி தடுப்பூசி போட்டுக்கொள்ளாதீர்கள். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசு பொறுப்பேற்காது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட ஆவணங்கள் வலம்வரத் தொடங்கின.
விவேக்கின் மரணம் தொடர் பாகப் பேசிய நடிகர் அர்ஜுன், ""இது ஒரு அநியாயம்... ஜீரணிக்க முடிய வில்லை'' என்றார். ""விவேக்கின் மரணம், கொஞ்சம்கூட எதிர்பார்க்காத துயரம்'' என்றார் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் எல்லாரும், ""அவர் உடல்மீது அக்கறை கொண்டு அதைச் சீராக வைத்திருந்தவர். அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பமுடியவில்லை' எனச் சொன்னபோது, விவேக்கின் மரணத்திற்குக் காரணம் அவர் போட்டுக்கொண்ட தடுப்பூசி என மக்களின் கோபம் அதை நோக்கித் திரும்பியது என்கிறார்கள் சமூகஆர்வலர்கள்.
விவேக்கின் மரணத்தைப் பற்றி தமிழக அரசு அதிகாரிகளிடம் பேசிய அவரது மனைவி, ""விவேக் எப்பொழுதும் நல்லதைப் பிரச்சாரம் செய்வார். அவர் மருந்துகளையும், நோய்களையும் பற்றி மட்டும் பிரச்சாரம் செய்தார். அது அவருக்கே எதிரியாகியிருக்கிறது. விவேக் டெங்கு காய்ச்சலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். அதே டெங்கு காய்ச்சலில் எங்களது மகன் பிரசன்னா இறந்து போனார். அவர் கொரோனா தடுப்பூசிக்காகக் கடைசியாகப் பிரச்சாரம் செய்தார். அந்த தடுப்பூசி யின் எதிர்விளைவாக அவரே இறந்துபோய்விட் டார்'' எனச் சொல்லி அழ...""அவருக்கு இருதயத்தில் பிரச்சினை இருக்கிறது என எங்களுக்குத் தெரி யாது'' என அவருக்கு ஆறுதல் சொல்லியிருக் கிறார்கள் தமிழக அரசின் மருத்துவர்கள்.
விவேக்கின் மரணத்தைப் பற்றி கருத்துச் சொன்ன தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர், ""விவேக்கின் மரணத்திற்கும் அவர் போட்டுக் கொண்ட கோவாக்சின் என்கிற கொரோனா தடுப் பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்கிறார். ஆனால் ""ராதாகிருஷ்ணனின் கருத்தை முதல்வர் எடப்பாடியோ, பிரதமர் நரேந்திர மோடியோ எதி ரொலிக்கவில்லை. விவேக்குக்கு அஞ்சலிச் செய்தி வெளியிட்ட பிரதமரும் முதல்வரும் "அவரது மர ணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை' என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை'' என்கிறார்கள் தமிழக அரசு டாக்டர்கள்.
லட்சக்கணக்கானவர்கள் தமிழ்நாட்டில் தடுப் பூசி போட்டுக்கொண்டு நலமாக இருக்கிறார்கள். ஆனால், ஒரு பிரபலத்தின் மரணம், மக்களிடம் எதிர்மறையான பெரும் தாக்கத்தை உருவாக்கிவிட் டது. இதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், சிறுநீரகப் பிரச்சினை கொண்டவர்களுக்கு, தடுப்பூசி எதிர்விளைவை ஏற்படுத்தும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்... டெஸ்ட் ஊசி போட்டு பரிசோதித்துவிட்டு, அதன்பிறகு தானே தடுப்பூசி டோஸ் போட்டிருக்க வேண்டும் எனப் பாமர மக்கள் வரை எழுப்பப்படுகின்ற கேள்விக்கு, சுகாதாரத்துறையிடமோ, அரசிடமோ பதில் இல்லை. பிரதமரின் தடுப்பூசித் திருவிழா வைப் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத் தில், டெஸ்ட் ஊசி பற்றி அக்கறையின்றி அலட்சிய மாக இருந்திருக்கிறது அரசு. இந்த நிலையை மாற்றுவதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.
தடுப்பூசி பற்றிய அச்சத்துடன், தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவுவதால், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு எனத் தமிழகம், மகாராஷ்டிரா பாணியில் செயல் பட ஆரம்பித்திருக்கிறது. ""அடுத்தடுத்து முழு ஊரடங்கு வரும்... அதைத் தவிர்க்க முடியாது' என்கிறார்கள் கொரோனாவின் வேகத்தைக் கணக்கிடும் தமிழக மருத்து வர்கள். கடந்த ஊரடங்கி லிருந்தே பொருளாதார ரீதியாக மீள முடியாமல் பல துறைகளும் முடங்கியிருக்கின்றன. தற்போதைய ஊரடங்கு- கட்டுப் பாடு ஆகியவை மக்களைக் கடுமை யாகப் பாதிக்கின்றன. அத்துடன், கொரோனா பரவும் வேகமும், அரசு தரப்பின் மெத்தனமும் மக்களை பீதியில் உறைய வைக்கிறது.
""ஆனால், தமிழகம் மற்ற மாநிலங்களைப் போல் இல்லை. இங்கு சுகாதாரத்துறை பல பிரிவு களாகப் பிரிக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டி ருக்கிறது. தமிழகம், எவ்வளவு பெரிய நோய்த் தாக்குதலையும் சமாளிக்கும்'' என்கிறார்கள் அதிகாரிகள் நம்பிக்கையுடன்.
""இன்றளவிலும் தமிழகத்தில் தனியார் மருத் துவமனைகளைவிட அரசு மருத்துவமனைகள்தான் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் முன்நிற்கின்றன. பணக்காரர்கள்-பிரபலங்கள் கூட அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுகிறார்கள். இதை வேறெந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது'' என்கிறார்கள்.
அதேநேரத்தில் ""கடந்த கொரோனாவைப் போல இந்த முறையும் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறையின் கொள்முதலில் கொள்ளை யடிக்கிறார். காபந்து அரசாக இருந்தாலும் கமிஷன் சிஸ்டம் மட்டும் மாறவில்லை' என்கிற குரலும் கேட்கிறது.
-தாமோதரன் பிரகாஷ்