சுதந்திரத்துக்குப்பின் இந்தியா-சீனாவுக் கிடையில், எல்லைப்புற உரசல்கள், பொருளாதாரப் போட்டிகள், தெற்காசியப் பகுதியில் யார் பெரியண்ணன் போன்ற அந்தஸ்துப் பிரச்சினைகள் இருந்தபோதும் 1962-ன் இந்திய-சீனப்போரை தாண்டி, இதுவரை பெரிய பிரச்சினைகள் எதுவுமில்லை.
இந்நிலையில் கடந்த 2018 ஏப்ரலில் சீனாவின் யுவான் நகரில் இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் அரசுமுறையாக சந்தித்துப் பேசினர். அதன் தொடர்ச்சியாக வரும் அக்டோபர் 11-ஆம் தேதி தமிழகத்தின் மாமல்லபுரத்துக்கு வருகைதரும் சீன அதிபர் ஜின்பிங், 13-ஆம் தேதி வரை தங்கி வர்த்தகம், சுற்றுலா தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளார். அதைத் தொடர்ந்து அதிபரின் வருகைக்கு மாமல்ல புரத்தை அதிகாரிகள் ஆயத்தப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஜின்பிங் வருகைகுறித்து நம்மிடம் பேசிய தொல்லியல்ஆர்வலரும் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான மல்லை சத்யா, ""தமிழகத்திற்கும் சீனர்களுக்கும் இன்று நேற்றல்ல… சுமார் 1700 ஆண்டுகால நட்புறவு இருந்துவந் துள்ளது. சீனர்கள் போற்றும் போதிதருமர் காஞ்சி யிலிருந்து சீனா சென்றவர். சீனப் பயணியான யுவாங்சுவாங் பல்லவர்களின் தலைநகரான காஞ்சிக்கு வருகைதந்ததும் வரலாறு. இந்த பின்னணியிலேயே சந்திப்பை மாமல்லபுரத்தில் ஏற்பாடுசெய்துள்ளனர். எனினும் சுற்றுவட்டார பொதுமக்கள், சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரி கள், ஓட்டல்கள், தங்கும்விடுதிகள், மீனவர்கள் பாதிக்கப்படாத விதத்தில் ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட வேண்டும். பாதுகாப்புக்காக அவசிய மான நடவடிக்கைகள் எடுக்கும்போது, அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஈட்டுத்தொகை வழங்க அரசு முன்வர வேண்டும்''’என்றார்.
மாமல்லபுரம் சுற்றுவட்டார குடியிருப்புகளை சோதனை செய்ததில் வெண்புருஷம் என்ற மீனவ கிராமத்தில் நாகமுத்து என்பவர் வீட்டில் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் தங்கியிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் பிடிபட்டதும், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப் பட்டதும் அரசை உஷார் செய்துள்ளன. தற்போது கடுமையான கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதி கொண்டுவரப்பட்டுள்ளது.
பட்டிபுலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சம்மந்தன், ""கடந்தமுறை இதே பகுதியில் நான்கு நாட்கள் நடந்த ராணுவ கண்காட்சிக்காக பதினைந்து நாட்கள் பயிற்சி நடத்தி மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை'' என்றார் வருத்தம் தொனிக்கும் குரலில். இப்போது என்ன செய்யப்போகிறார்களோ என்ற கவலை அவர் குரலில் வெளிப்பட்டது.
வரும் அக்டோபர் 11-ஆம் தேதி சென்னை வரும் இருதலைவர்களும் ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை வந்து கோவளத்திலுள்ள தாஜ் குரூப்பின் ஃபிஷ்ஷர்மேன் கோவ் ஓட்டலில் தங்கி, மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கூட்ரோட்டி லுள்ள கன்வன்ஷன் சென்டரில் இருதரப்பு சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்ததை நடத்தவுள்ளனர்.
இதற்காக முன்கூட்டியே குவிக்கப்பட்ட போலீஸார் கோவளம் முதல் மாமல்லபுரம் அடுத்த கல்பாக்கம் வரை பாதுகாப்பு ஏற்பாடாக மீனவ கிராமங்கள், சுற்றுவட்ட கிராமங்களில் ஐந்து வீட்டுக்கு ஒரு போலீஸ் என கெடுபிடி காட்டுகின்றனர். மேலும் மாலை முதல் விடிய விடிய வாகனசோதனை, வீடுகளில் திடீர் சோதனை நடத்துகின்றனர். பாதுகாப்பு என்ற பெயரில் அங்கிருந்த ஐநூறு சிறுகடைகளைக் காலி செய்துவிட்டனர். கெடுபிடியால் சுற்றுலா பயணிகளும் 90% குறைந்துவிட்டனர்.
தலைவர்கள் வருகையையொட்டி பல கோடியில் புதிய மின்கம்பம், புதுத் தெருவிளக்கு, தனியார் ஓட்டல்களுக்கு ரோடு, சாலை சீரமைப்பு, பெயிண்ட் அடித்து புதுப்பிப்பு, குப்பையே கண்ணில்படாத அளவு சீர்படுத்தல், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், இரவுபகலாக உள் ளாட்சி துறை பணியாளர்கள், சாலைப்பணி யாளர்கள், மின்வாரிய பணியாளர்கள், சுமார் முப்பதாயிரம் போலீஸ் குவிப்பு, சுகாதாரத் துறையின் கண்காணிப்பு, கொசுக்களை விரட்ட பிரத்யேக தொழில்நுட்பம், புத்தர் சிலைகள், விலையுயர்ந்த செடிகள் என பல கோடி செலவில் மாமல்லபுரம் ஒப்பனை செய்யப்படுகிறது.
""ஏற்கனவே கடல்நீரைக் குடி நீராக்கும் திட்டம், அணு உலைனு மீன்வளமே குறைஞ்சு போச்சு. பாதி மீனவர்கள் கம்பெனி வேலைக்குப் போயிட் டாங்க. இந்த நிலையில ஆறாம் தேதிக்கு மேல கடலுக்கு போகக் கூடாதுனா சாப்பாடுக்கு என்ன பண்றது''…என்றார் மீனவர் கருணாகரன். ஆட்டோ ஓட்டுநர் மோகன் "வருமானமே போச்சு...' என்று விரக்தியாகச் சிரிக்கிறார்.
இருநாட்டுத் தலைவர்கள் வரு கையையொட்டி ஐந்து வழிகளை பாதுகாப்பு வளையத்தில் வைத்துள் ளது மத்திய பாதுகாப்பு பிரிவு. ஒரு பாதை கடல் வழியிலும் தயார்நிலை யில் வைக்கப்பட்டுள்ளது. 20 மீட்டருக்கு இரண்டு சி.சி.டி.வி. என முழு அட்டென்ஷனில் இருக்கிறது மாமல்லபுரம் வட்டாரம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் நம் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலா மென பேசினால், "சார் ரொம்ப பிசி' ’என தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மக்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்கள் பொருட் படுத்தத் தக்கவைதான் என்றாலும், அமெரிக்கா வுக்கே சவால்விடும் பொருளாதாரமாக எழுந்து நிற்கும் சீன அதிபர் ஜின்பிங்கின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் உரிய கவனம் செலுத்துவ தையும் புறந்தள்ளிவிட முடியாது. மாறாக, "கிடப்ப தெல்லாம் கிடக்க கிழவியைத் தூக்கி மனையில் வை' என்பதுபோல, உயர்நீதிமன்றக் கதவைத்தட்டி ஜின்பிங் வருகைக்கு பேனர் வைக்க அனுமதி பெற்று, சாதித்துக் காட்டியிருக்கிறது தமிழக அரசு.
-அரவிந்த்
படங்கள்: சுந்தர்