ஜனநாயகத்தின் நான்காம் தூணின் மீதான நம்பிக் கையை தக்க வைக்கும் கம்பீரத்தோடு வெளி வருகிற மிகச் சில ஊடகங்களில் நக்கீரனும் ஒன்று.
ஊடகங்களின் மீதான அரசுகளின் ஒடுக்குமுறைகளுக்கு நக்கீரன் இதுவரை சந்தித்த வழக்குகளே சாட்சி. வழக்குகள், நக்கீரன் ஆசிரியர் மீதான கைது நடவடிக்கைகள், அலுவலகம் சந்தித்த தாக்குதல்கள் என்று தனி ஒரு புத்தகமாகவே வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.
தமிழக- கர்நாடக மாநிலங்களின் நலத்தின் பொருட்டு, உயிரைப் பணயம் வைத்து, வீரப்பனைக் காட்டிலே சந்தித்து நக்கீரன் ஆசிரியரும் குழுவும் ஆற்றிய காரியங்கள், செய்திகளைச் சொல்லும் பணியைத்தாண்டி ஊடகவியலாளர்களுக்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்புக்கும், துணிச்சலுக்கும் ஒரு எடுத்துக்காட்டு நக்கீரனின் அரசியல் கட்டுரைகளும், தொடர்களும் அரசியல் ஆர்வலர்களுக்கு ஆவணங்கள். உள்ளடக்கத்தின் ஆழமும், தரமான மொழியாட்சியும் நக்கீரன் கட்டுரைகளின் பலம்.
2019 மே 04-07 இதழ்
திசைக்கொருவராய் நிற்கும் அ.தி.மு.க. ஆளுமைகள் என்பதாய் அட்டைப்படத்திலே போதுமான செய்தியை சொல்லிவிட்டுத்தான் அடுத்த பக்கம் செல்கிறது இந்த இதழ். ‘ரஜினி அழகிரி அடுத்த ரவுண்ட்’ அரசியல் கட்டுரை ரஜினியின் அரசியல் ஆசையையும், காலத்தின் சூழலையும் சொல்லி விட்டது. ‘மாவலி பதில்கள்’ லேசர் ஷார்ப்.
அய்யலூரில் 12 வயது சிறுமிக்கு நடந்த கொடூரத்தை மக்கள் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. குற்றவாளிகள் தண்டனைக் குள்ளாகும் வரை நக்கீரன் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வாசகர்கள் சார்பில் கோரிக்கையை முன்வைக்கிறேன்.
மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் பிரச்சனைகளை, நிர்வாகத்தின் குளறுபடிகளை சொல்லியதிலும், பச்சையப்பன் அறக்கட்டளை குறித்த கவனமும் எப்போதும் போல் தொடரும் நக்கீரனின் சமூகப் பொறுப்புணர்வு.
திரு பழ.கருப்பையா இத்தனை வயதிலும் தன்னிடம் உள்ள இளைஞனை பாதுகாத்து வருகிறார். ஆச்சரியமளிக்கிறார்.
__________
வருத்தமும் வேதனையும்!
2019 ஏப்.27-30 நக்கீரன் இதழில் ‘"கைதி கள் கலவரத்தால் அம்பலமான அசிங்கங்கள்'’ என்ற தலைப்பில் மதுரை சிறைக் கலவரம் தொடர்பான செய்தி வெளியாகியிருந்தது.
அதில் குண்டர் சட்டத்தை உடைப்ப தற்கான ரூட் என்ற துணைத் தலைப்பில் என்னைப் பற்றிய தவறான செய்தி பிரசுரிக்கப் பட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்தவித விசாரணையுமின்றி தடுப்புக் காவலில் அடைக்கப்படும் பெரும்பாலான சிறைவாசிகள் சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கியவர்கள். அப்படிப்பட்டவர்களுக்காக வாதாடும் என்னைப் பற்றி வெளியான தவறான செய்தியால், வருத்தமும் மனவேதனையும் அடைந்தேன்.
-ஆர். அழகுமணி
எம்.ஏ.எம்.எல். பி.எச்.டி. (சட்டம்)
வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்
மதுரை கிளை