ன்னும் இரண்டு நாட்கள்தான் தரிசிக்க முடியும் என்பதால் காஞ்சி அத்திவரதரைப் பார்க்கக் கூடிய பெருங்கூட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டு, திங்களன்று பக்தர்களுக்குள் கைகலப்பு உருவானது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதற்கு இரண்டு நாட்கள் முன்பே, அத்திவரதர் தரிசன விவகாரத்தில் கலெக்டருக்கும் காவல்துறைக்குமான மோதல் வீடியோவாக வெளியாகி வைரல் ஆனது.

aa

நாற்பது ஆண்டுகள் கழித்து தண்ணீரி லிருந்து வெளியே வந்திருக்கும் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வதால் அந்த சிறிய நகரம் திணறுகிறது. போலீசார் பெரும்பாடு படு கிறார்கள். மாவட்ட நிர்வாகம் திக்குமுக்காடு கிறது. வழக்கமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசிக்க லேட் ஆகும் என்பதால், இந்து சமய அறநிலையத்துறையின் பாஸ்கள் மூலம் சற்று எளிதாக தரிசிக்க பலரும் போட்டி போடுகின்றனர். ஒரு கட்டத்தில் பாஸ் வாங்க வந்தவரின் வேட்டி கழன்றும் ஜட்டியுடன் லைனில் நின்று பாஸ் வாங்கியதை நாம் போட்டோவில் கிளிக் செய்துகொண்டோம்.

Advertisment

ad

டோனர் பாஸ், வி.வி.ஐ.பி. பாஸ் ஆகிய வற்றை பல வழிகளிலும் பெற்று யார் யாரோ உள்ளே வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஆரம்பத்திலிருந்தே எழுந்தது. பாஸ் வாங்க எம்.பி., எம்.எல்.ஏ. அமைச்சர்கள் போன்றவர் களின் பரிந்துரைக் கடிதங்கள் கலெக்டர் ஆபீசில் குவிகின்றன. இப்படி வாங்கப்படும் பாஸ்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததுடன், அதில் கமிஷன் விளையாடுவதும் தெரிய வந்தது.

கலெக்டர் பொன்னையா இது பற்றி ஆய்வு செய்தபோது, பிரபல துணிக்கடையான பாபுஷாவின் மேலாளர் ரவி என்பவர் பிடிபட் டார். ஆனால் பெரிய நடவடிக்கை இல்லை. பத்திரிகையாளர் பாஸ்களிலும் முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டு அதுவும் கட்டுப் படுத்தப்பட்டது. ஆனாலும், மாவட்ட நிர்வாக மும் காவல்துறையும் தனக்கு வேண்டியவர் களுக்கு முன்னுரிமை தருகிறது என்ற போட்டா போட்டி புகார்கள் ஓயவேயில்லை.

Advertisment

திருவள்ளூர் மாவட்ட ஏ.எஸ்.பி. சந்திரசேகரன் தனக்கு வேண்டப்பட்டவர்களை சைரன் வைத்த காரில் அழைத்து வந்து, சாமி தரிசனம் செய்ய வைப்பதும், தனி வசூல் நடப்பதும் கலெக்டரால் கண்டுபிடிக்கப்பட, கோவில் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடக் கூடாது என ஏ.எஸ்.பி. வெளியேற்றப்பட்டார். சாமி தரிசனம் செய்யவந்த ஒரு நீதிபதி, புரோட்டோகால் படி சிறப்பு பாதையில் அழைத்து வராததால் கோபம் அடைந்தவர் ஆட்சியரை பார்த்து "17 ஆம் தேதிக்கு பின் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டுப் போனார்.

கடந்த 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அத்திவரதரை தரிசிக்க வந்த சுப்பிரமணியசாமிக்கு சரியான வரவேற்பு வழங் காமல் திரும்ப செல்லும் போது கூட்ட நெரிசலில் சிக்கியதால் கடுப்பான அவர் மேலிடத்தில் புகார் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மனைவி தரிசிக்க வந்தபோதும் சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததும் சர்ச்சை ஆனது. எல்லா கேள்விகளும் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை நோக்கியே பாய, அவர் ஆய்வில் ஈடுபட்ட போது, காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் என்பவர் தன்னுடன் சிலரை நேரடியாக அழைத்துச் சென்றதால், இருந்த கோபத்தை யெல்லாம் அவரிடம் கொட்டி, ஏகவசனத்தில் பேசினார் கலெக்டர். இந்த வீடியோதான் பெரும் வைரலாகி, காவல்துறை தலைமை வரை கொந்தளிக்க வைத்தது.

இரவு பகல் பாராமல், இயற்கை உபாதைகள் கழிக்க வழியில்லாமல் ஆண் -பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போது கலெக்டர் அடாவடியாகப் பேசுவது என்ன நியாயம் எனக் கேள்விகள் கிளம்பின. அதே நேரத்தில், போலீசின் தேவையற்ற கெடுபிடிகள் பற்றியும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. டோனர் பாஸை போலீஸ் கிழித்ததால் ஓர் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார், கோயில் உள்ளே உள்ள மருத்துவக்குழுவினரின் பாஸ் கிழித்ததை கண்டித்து சுகாதார துறையினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். லோகேஸ்வரி என்ற போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் நடுரோட்டில் ஆட்டோவை விறகு கட்டையால் தாக்கியதில் ஆட்டோவே சேதமானது. ரோட்டில் கடை வைத்திருந்த நரிக்குறவரை போலீஸ் தாக்கிய வீடியோவும் வைரலானது.

பொறுமையை வலியுறுத்துகிறது ஆன்மிகம். ஆனால், அத்திவரதர் தரிசன விவகாரத்தில் பெரும்பாடுபடும் மாவட்ட நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் பொறுமையில்லாமல் போனதும், வசூல் வேட்டையும் தேவையில்லாத அவப்பெயரை உண்டாக்கி விட்டன.

-அரவிந்த்

கோட்டையில் எதிரொலி!

நியமன ஐ.ஏ.எஸ்.ஸான காஞ்சி கலெக்டர் பொன்னையாவுக்கு சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் சப்போர்ட் கிடைக்கவில்லை. இன்ஸ்பெக்டர் ரமேஷை கலெக்டர் திட்டுகின்ற வீடியோ விவகாரம் தொடர்பாக முதல்வர், தலைமைச் செயலாளர் ஆகியோர் வரை டி.ஜி.பி. திரிபாதி புகார் தெரிவிக்க, இது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து நிற்கிறது.

-இளையர்