2006 சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தன் வெற்றிக் கணக்கைத் தொடங்கிய சி.வி.சண்முகம், 2011 தேர்தலில் தி.மு.க. நட்சத்திர வேட்பாளரான பொன்முடியை எதிர்த்து ஜெ.வால் களமிறக்கப்பட்டார். 2011, 2016 தேர் தல்களில் வெற்றியை வசப்படுத்திக் காட்டிய சண்முகத்துக்கு மீண்டும் இந்தத் தேர்தலிலும் விழுப்புரம் தொகுதியே ஒதுக்கப் பட்டுள்ளது.
தி.மு.க.வின் பொன்முடி கடந்த முறையே திருக்கோவிலூர் தொகுதிக்கு ஒதுங்கிய நிலையில், அ.தி.மு.க.வில் சண்முகத்தின் செல்வாக்கால் தனது மா.செ. பதவி முதல் அனைத்து செல்வாக்கையும் இழந்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட லட்சுமணனுக்கு விழுப் புரம் தொகுதியை வழங்கி யுள்ளார் ஸ்டாலின்.
கட்சியில் சீட் எதிர் பார்த்திருந்த நகர்மன்ற முன்னாள் தலைவர் கனகராஜ், அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், ந.செ. சர்க்கரை ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. "அ.தி.மு.க.விலிருந்து வந்தவருக்கு சீட்டா?' என தி.மு.க.வினர் நினைத்தாலும், முள்ளை முள்ளால் எடுப்பது என்ற வியூகத்தை வகுத்துள்ளது தி.மு.க. தலைமை.
இதுகுறித்து கழக உடன் பிறப்புகளிடம் முணுமுணுப்பு இருந்தாலும், ""தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கவேண்டும்… தளபதி முதல்வராகவேண்டும் அந்த ஒரே நோக்கம் மட்டுமே எங்கள் அனைவரிடமும் உள்ளது. அதனால் வேட்பாளர் யார் என்பதைப் பற்றி கவலைப் படாமல் தலைமை நிறுத்திய வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதில் உறுதியாகவுள்ளோம்'' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
அமைச்சர் சண்முகம் விழுப்புரம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். தொகுதியிலுள்ள கட்சியினரிடம் தாராளமாக நடந்துகொள்வார். தொகுதியினருக்கும் பத்தாண்டுகளாக அறிமுகமான முகம். அதனால் அ.தி.மு.க.வினர் அவரை வெற்றிபெறச் செய்வதற்கு கடுமையாக உழைக்க தயாராக உள்ளனர்.
தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம் -சண்முகம், லட்சுமணன் இருவரையும் எதிர்த்துக் களமிறக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் சண்முகத்தின் மூலம் மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளராக பதவிபெற்று அவரது நம்பிக்கைக்குரியவராக வலம்வந்தவர் பாலசுந்தரம். இவர் சசிகலா தரப்பினரோடு நெருக்கமாக இருந்துவந்தார். அதனடிப்படையில் தினகரன் கட்சியில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு பெற்று தற்போது வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
தி.மு.க., அ.ம.மு.க. இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து சவாலாக இருப்பவர் சண்முகம். அவருக்கு சவாலை ஏற்படுத்துமா 2021 தேர்தல்?