சென்னை உயர்நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியிருக்கும் தனியார் பள்ளிகளுக்கான சங்கத்தில் நடக்கும் ஊழல் விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

Advertisment

பி.டி.அரசகுமார் என்பவர் தலைமையில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கம் இயங்கி வந்தது. இந்த சங்கத்தை கலைத்து விட்டு, தமிழகத்தில் இயங்கிவரும் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கான சங்கத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, "தமிழக தனியார் பள்ளிகள் சங்கம்' என்பதை உருவாக்கினார் அரசகுமார். 

இதற்காக, தனியார் பள்ளிகளுக்காகத் தனித்தனியாக சங்கம் வைத்திருந்த பலரையும் அரசகுமார் ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், புதிதாக உருவாக்கப்படும் சங்கத்திற்கு அரசகுமாரை தலைவராக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டதை ஏற்காமல் பலரும் விலகிச் சென்ற நிலையில், அரசகுமார் தலைமையில் நந்தகுமார், இளங் கோவன், ஆறுமுகம், மார்ட்டின் கென்னடி, மனோ கரன் ஜெயக்குமார், ஸ்ரீதர் ஆகியோர் கைகோர்த் தனர். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் உருவானது. சங்கத்தின் காப்பாளராக, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத்தலைவர் முத்துகுமாரை வைத்துக்கொண்டனர். 

இந்த சூழலில், ஏற்கனவே இயங்கிவந்த அகில இந்திய சங்கத்தை ரத்து செய்து விட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட சங்கத்தை அங்கீகரிக்க கூட்டுறவு சங்கங்கள் துறையிடமும், பதிவுத்துறையிடமும் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதற்காக, சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசகுமார் சார்பில் வழக்கு தொடரப் பட்ட போது, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட் டது. இப்படிப்பட்ட நிலையில் தான், ஊழல் விவகாரங்கள் தற்போது வெடித்திருக்கின்றன. 

Advertisment

தனியார் பள்ளிகள் விவகாரத்தில் நடந்து வரும் வில்லங்கங்களை முழுமையாக அறிந் திருக்கும் சமூக ஆர்வலர் செந்தில்கண்ணனிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ‘’"தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இருக்கின்றன. நர்சரி, ப்ரைமரி பள்ளிகளை நடு நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல், 10 ஆண்டுக ளாக செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குதல், பள்ளிக்கட்டடங்களுக்கு நகரமைப்புத் திட்டத்துறையின் (டி.டி.சி.பி.) அனுமதி பெறுதல் ஆகிய மூன்று கோரிக்கைகளை யும் தமிழக அரசிடம் வலியுறுத்தி அதனைப் பெற்றுத் தருவோம் என அரசகுமார் தலைமையி லான இந்த சங்கத்தினர், தனியார் பள்ளிகளிடம் வசூல் வேட்டை நடத்தியிருக்கின்றனர். 

ஒவ்வொரு பள்ளியிடமிருந்தும் 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை என பல நூறு கோடிகள் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்த கோடிகளை பங்கு பிரிப்பதில் முதல் கட்டத்திலேயே இவர்களுக்குள் முட்டல் மோதல் வலுத்துவிட்டன. அதாவது, தங்களின் சங்கத்தைக் கலைத்துவிட்டு புதிய சங்கத்தில் இணைந்திருப்பதால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகையை முதலில் பிரித்துக்கொள்ள வேண்டும் என பேசி முடிவெடுத்தனர். அதன்படி, அரச குமாருக்கு 10 கோடி, பொதுச்செயலாளர்களான நந்தக்குமார், இளங்கோவனுக்கு தலா 5 கோடி, மற்றவர்களுக்கு தலா 3 கோடி என வகைப் படுத்திக்கொண்டனர். 

ஆனால், கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப் பட்டும் பேசிக்கொண்டபடி மற்றவர்களுக்கான முழுமையான தொகையைத் தராமல் குறைந்த தொகையை தந்து ஏமாற்றியிருக்கிறார் அரசகுமார். இதனால், அரசகுமார் மீது மற்றவர்களுக்கு ஏகக் கடுப்பு. வார்த்தைகள் தடித்து மோதல் வெடித்தது. பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட இந்த பஞ்சாயத்து  முடிவுக்கு வரவில்லை. 

Advertisment

இந்த நிலையில், மனோகரன் ஜெயக்குமார் மூலம் கிடைத்த பல தகவல்களின் அடிப்படையில், முத்துகுமாரிடமும், அரசகுமாரிடமும் மக்களுக்காக நியாயம் கேட்டு நான் பேசினேன். ஆனால், அரசகுமாரின் தூண்டுதலின் பேரில் அவருடைய ரத்த உறவுகள் பலர் என்னை மிகமோசமான வார்த்தைகளால் மிரட்டினர். இதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. 

அங்கீகாரம் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். அங்கீகாரத்துக்காக கொடுக்கப்பட்ட இந்த லஞ்ச பணத்தை, அட்மிஷன் என்கிற பேரிலும் வசதிகளை உருவாக்கித் தருகிறோம் என்கிற பேரிலும் ஒவ்வொரு குழந்தையிடமிருந்துதான் தனியார் பள்ளிகள் வசூலிக்கின்றன. இவர்கள் கொடுத்த லஞ்சப் பணத்தை குழந்தைகளிடமிருந்து வசூலிப்பது எவ்வளவு கொடுமை?''’என்கிறார். 

இதற்கிடையே, தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் தரம் உயர்த்துதல்  கோரிக்கை யை முன்னிறுத்தியும், இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும்  அரசகுமாருக்கு எதிராக மனோகரன் ஜெயக்குமாரும், ஆறுமுகமும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு போட்டுள்ளனர். 

இந்த வழக்கில் எதிர்த்தரப்பாக தனியார் பள்ளிகளின் இயக்குநரையும், துறையின் முதன்மைச் செயலாளரையும் சேர்த்திருப்பதால் இதில் தமிழக அரசு தலையிட்டிருக்கிறது. கடந்த 28 மற்றும் 29ஆம் தேதி களில் (வியாழன், வெள்ளிக்கிழமை) இதன் விசாரணை நடந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் மைத்ரி சந்துரு, இந்த வழக்கில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, செப்டம்பர் 2ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 

இந்த சூழலில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறும் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக கோர்ட்டிலேயே சொல்லப் பட்டிருப்பதால் இதனை தீவிரமாக கண் காணிக்கிறது அமலாக்கத்துறை. இதுகுறித்து செந்தில்கண்ணனிடம் அமலாக்கத்துறையினர் விசாரித்திருக்கிறார்கள். 

இந்த நிலையில், "எனக்கு எதிராக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானது. எந்த ஊழலும் நடக்கவில்லை. இதனை சட்டரீதியாக சந்திப்பேன். எனக்குத்தான் மிரட்டல் வருகிறது'' என்கிற ரீதியில் சொல்லிவருகிறார் அரசகுமார். 

-செ.சஞ்சய்