நெல்லையருகே அடைமிதியான்குளத்தில் இயங்கும் கல்குவாரியில் பாறைகளை வெடிவைத்துப் பிளக்கும்போது பாறைகள் சரிந்து, அதில் 4 தொழிலாளிகள் சிக்கி இறந்தனர். அதைவிட மோசமான நிலையில் இருக்கின்றன மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள கல்குவாரிகள். இங்குள்ள கிராம மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
"எத்தனையோ முறை அரசிடம் புகார் கொடுத்தும் ஒன்றும்முடியாமல் மொத்தமாக ஊரைக் காலிசெய்து ஓடுமளவுக்கு இருக்கிறார்கள்' என்று சொன்ன வழக்கறிஞர் ஸ்டாலின், மேலும் கூறுகையில், "தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் 20-க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணல் உற்பத்தி செய்யும் குவாரிகள் மட்டுமே 1,200 செயல்படுகின்றன. குவாரிகளில் குறிப்பிட்ட அளவு ஆழம் மட்டுமே தோண்டி பாறைகளை எடுத்து, ஜல்லிக் கற்களாக உடைக்கவேண்டும். ஆனால், 300 அடிக்கும் மேல் தோண்டி பாறைகளை எடுக்கின்றனர். இதனால், பெரிய மலைகள் தற்போது குன்றுகளாக மாறிவிட்டன. குன்றுகள் இருந்த பகுதிகளோ 300 அடி ஆழம் கொண்ட அதலபாதாள கிணறுகளாக மாறிவிட்டன. அரசுக்கு மிகக்குறைந்த தொகையையே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்துகின்றன. இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இந்தப் பகுதியில் சின்ன சொறிக்காம்பட்டி, பெரிய சொறிக்காம்பட்டி, குன்னம், வீரம்பட்டி, குன்னமங்கலம், கரடிகலனப்பட்டி, வண்ணாங் குளம், வடக்கம்பட்டி போன்ற 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன
இங்கு இயங்கும் விக்னேஷ் குவாரி, மெட்ரோ சிட்டி நிறுவனம், கே.பி.எஸ். கிரஷர், மஹேந்திரா வெற்றிவேல் குவாரி, பழனிகுமார் கிரஷர், குவாரி மற்றும் கிரஷர் சங்க தலைவர் கேதர்நாத்துக்கு சொந்தமான கிரஷர் மற்றும் கல்குவாரிகள் ஏராளமாக உள்ளன. அனைத்துமே எந்தவித விதிகளையும் மதிக்காமல் பெரும் அரசியல் புள்ளிகளின் முழு ஆதரவோடு செயல்படுகின்றன. இங்குள்ள சாமானிய மக்களின் உணர்வுகளை, வாழ்வாதாரங்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை''’என்றார்.
சொறிக்காம்பட்டியைச் சேர்ந்த தென்னரசு நம்மிடம், "மதுரை கப்பலூர் எய்ம்ஸ் மருத்துவ மனை அருகிலுள்ள சின்ன சொறிக்காம்பட்டி, பெரிய சொறிக்காம்பட்டி, குன்னம் அனப்பட்டி, வீரம்பட்டி போன்ற பகுதிகளில் வாழ்கிறோம். எங்கள் பகுதியில் நிம்மதியா குடியிருக்க முடியவில்லை. எப்ப இழவு விழுமோ என்று பயந்து நடுங்கவேண்டியுள்ளது. விவசாயம் எல்லாம் மண்ணாப் போயிருச்சு.
இந்த ஊரைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளும் உடைத்த கல்லை ஜல்லியாக மாற்றவும், எம்.சாண்ட் மணலாக்கவும் கிரஷர் தொழிற்சாலைகளும் உள்ளன. இவற்றிலிருந்து வரும் தூசி விளைநிலங்களில் படிந்து பூக்கள் கருகிவிடுகின்றன. இதனால் விவசாயமே செய்ய முடியாமல் குவாரிக்காரர்களிடமே விற்றுவிட்டு நிர்க்கதியாக நிற்கிறோம். நிறைய குடும்பங்கள் ஊரைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டனர். நான் ஊருக்குள் புதிதாக கட்டிய வீட்டை காலி செய்துவிட்டு தொலைவிலுள்ள என் தோட்டத் திற்குச் சென்று வசிக்கிறேன். இங்கிருந்தால் என் பேரன் வெளியில் விளையாடும்போது லாரியில் அடிபட்டுவிடுவானோ என்று பயமா இருக்கு. வீட்டில் தரை, சாப்பாடு, தண்ணீர் என்று எதைத் தொட்டாலும் கிரஷர் தூசி. எவ்வளவோ புகார் கொடுத்துப் பார்த்துவிட்டோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை''’என்றார்.
அனப்பட்டியைச் சேர்ந்த ராசாத்தி, "இரண்டு கிரஷர் குவாரிகளுக்கு மத்தியில்தான் எங்கள் தோட்டம் இருக்கு. ஒரே வரப்புதான். மஹேந்திரா கிரஷர் ஓனர் வெற்றிவேலிடம் நானே என் தோட்டத்துப் பயிர்களை அப்படியே பிடுங்கி அதில் தூசி படிந்து பூவெல்லாம் கருகியதைக் காட்டி நியாயம் கேட்டேன். என்னை அடிக்க வந்துவிட்டார்கள். "போய் எங்க வேண்டுமானாலும் புகார் கொடு' என்று துரத்திவிட்டார்கள். நானும் எல்லா இடத்திலயும் புகார் கொடுத்துவிட்டேன், ஒன்றும் ஆகவில்லை. வேறு வழியில்லை… சொந்த மண்ணைவிட்டு குடும்பம் குடும்பமா வெளியேறத்தான் போறோம்''’என்றார்.
தன் பேத்தியை அழைத்துவந்த கலாவதி நம்மிடம், "20 அடி உள்ள கிராம ரோட்டில் ஒரு நாளைக்கு 1000 லாரிகள் கல் மற்றும் கிரஷர் தூசியை ஏற்றிக்கொண்டு சென்றால் எப்படி? வீட்டைவிட்டு யாரும் வெளியே வரமுடியவில்லை. குழந்தை களைப் படிக்க பள்ளிக்கூடத்திற்கு விடமுடிய வில்லை. புகார் கொடுத்தால் அடுத்த நிமிடம் குவாரிக்காரர்களுக்கு தெரிந்துவிடுகிறது. அவர்கள் வீடு தேடிவந்து மிரட்டுகிறார்கள்.
இப்படியே போனால் அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் வருவதுபோல எங்க ஊரைச் சுற்றி மக்கள் வாழ்ந்த 10 பட்டி ஊர்களும் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இல்லாமல் போய்விடும்''’என்றார். அவரோடு இருந்த மற்ற பெண்கள், "எங்க ஊர் பஞ்சாயத்துத் தலைவர் அம்மா கட்சியை சேர்ந்தவர். இப்ப குவாரி நடத்துபவர்கள் பெரும்பாலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடம் காசை வாங்கிக்கொண்டு அவரும் சேர்ந்து எங்களை மிரட்டுகிறார்'’என்றனர் கோரசாக.
பஞ்சாயத்து தலைவர் அழகுமலையிடம் இது குறித்துக் கேட்டோம். "நான் யாரையும் மிரட்ட வில்லை. இந்த வருடம் திருவிழா இருக்கு. இங்கிருக்கும் கிரஷர்காரர்களிடம் வசூலுக்குப் போகணும். அதுவரை எந்த எதிர்ப்பும் காட்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன்''’என்று நம்மிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.
ஒவ்வொரு கிரஷராகச் சென்று பார்வையிட்டோம். எந்த குவாரியும் அரசு விதி ஒன்றைக் கூட பின்பற்றிய தாகத் தெரிய வில்லை. போகு மிடமெல்லாம் கல்குவாரிகளுக்கு கல் கிரஷர் தூசி களை ஏற்றிக் கொண்டு வரும் லாரிகள் அணிவகுத்து வந்துகொண்டிருந்தன. அருகில் வெடிச்சத்தம் கேட்க, அதை நோக்கி நகர்ந்தோம். சிறிது தூரம் போனதும் குன்னம் பட்டியைச் சேர்ந்த பாண்டி நம்மை வழிமறித்து, ”"தம்பி கொஞ்சம் நின்னுபோங்க. பாறையில் வெடி வைக்கிறாங்க''’என்றார்.
"நீங்க யாரு'' எனக் கேட்டோம். “"நான் பக்கத்தில் இருக்கிற கல்குவாரியில் வெடி வைப்பது மற்றும் கல் உடைக்கிற வேலைபார்க்கிறேன். ஒரு நாள் கூலி 1000 ரூபாய். கொஞ்சம் ரிஸ்க்தான். கிராமத்தில இவ்வளவு கூலி யாரு கொடுப்பா?''’என்றவரிடம்...
"உங்களுக்கு பாதுகாப்பு உபகரணம் எல்லாம் கொடுக்கிறாங்களா?''’என்றதும் சிரிக்கிறார்.
"ஒரு நாள் பெரிய அதிகாரிகள் வந்து குவாரியை ஆய்வு செய்தபோது இதே மாதிரிக் கேட்டாங்க. கண்ணுக்கு கண்ணாடி, காலுக்கு பூடீஸ், கையில் உறை, சாப்பாடு, தண்ணீர், இதோடு இன்ஸுரன்ஸ் எல்லாம் கொடுக்கணுமாம். அதெல்லாம் கேட்க முடியாது. நான் வேண்டாம்னா, இந்த வேலையைப் பார்க்க ஆயிரம் பேர் இருக்கிறாங்க. கேட்டா, ஏதாவது ஆனா அரசாங்கம் நிவாரணம் கொடுக்கும். போய் வேலையைப் பாருங்க என்பார்கள் முதலாளிமார்கள்''’என்றார் வெள்ளந்தியாய்.
சொறிக்காம்பட்டியை அடுத்துள்ள பொன்னமங்கலம் கிராமத்தில் மிகப்பெரிய கல்குவாரியைப் பார்த்தோம். அங்கு 300 அடிக்கும் மேல் ஆழமா தோண்டப்பட்டு லாரிகள் மூலம் கிரஷர் தூசி அள்ளப்பட்டுக்கொண்டிருந்தது. குவாரிக்கு குன்னமங்கலம் வி.ஏ.ஒ., ஆர்.ஐ. வந்திருந்தனர். நாம் பத்திரிகையாளர் எனத் தெரிந்ததும் விசிட்டுக்கு வந்ததுபோல் காட்டிக்கொண்டு கிளம்பினர்.
அவர்கள் போனபிறகு அங்கிருந்த ஒருவர், "வழக்கமான "மாமுல்' விசிட்தான்'' என அழுத்தமாகச் சொல்லி நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்.
குவாரி உரிமையாளரிடம் போனில் பேசினோம்...’"சார் அருகில் விவசாய நிலங்கள் இருக்கிறது. மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எந்தவித அரசு விதிமுறையையும் பின்பற்றியதாகத் தெரியவில்லையே''’என்றதும் மறுமுனையில் பேசிய பழனிகுமாரோ, "தம்பி பத்திரி கையா? எது பேசவேண்டு மென்றாலும் என் உதவியாளரிடம் பேசிக்கொள்ளுங்கள்''’ என்று போனை வைத்துவிட்டார்.
மாவட்ட குவாரிகள் சங்கத் தலைவர் நீதிமோகனிடம் பேசினோம். "திருமங்கலம், உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள கல்குவாரிகளால் 10-க்கு மேற்பட கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதும், கிராம சாலைகளில் ஒரு நாளைக்கு 1000-க்கும் மேற்பட்ட லாரிகள் கல் கிரஷர் தூசிகளை ஏற்றிக்கொண்டு போவதால் சாப்பிட, தூங்கக் கூட முடியாமலிருப்பதையும் விவரித்தோம். “இதேநிலை நீடித்தால் அங்குள்ள கிராம மக்கள் ஊரைக் காலிசெய்து போகும் நிலை நிலவுகிறதே''’என்றதும், "தம்பி எனக்கு நிறைய சோலி இருக்கு. உங்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது''’என்று தொடர்பைத் துண்டித்தார்.
கனிமவள இயக்குனர் சட்டநாதனிடம் பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைத்து "கல்குவாரிகள் அரசின் விதிமுறைகள்படி செயல்படுகிறதா?'' என்றதும், "நீங்கள் சொல்வதை குறித்துக்கொள்கிறேன். இதுகுறித்து ஆய்வு செய்கிறேன். சட்டத்திற்குப் புறம்பாக இருந்தால் அந்தப் பகுதியில் இயங்கும் குவாரிகளின் அனுமதியை ரத்துசெய்து உத்தரவிடுகிறேன்'' என்றார்.
"ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதால், அவர்களுக்காக நாமும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறோம். விழவேண்டியவர்களின் காதில் விழுந்து, நியாயமான நடவடிக்கைகள் இருக்கிறதா?' என்று பார்க்கலாம்.