திகளும் ஏரிகளுமே அசால்ட்டாக காணாமல்போகும் தேசம் இது. கிணறு காணாமல் போவதா பெரிது. தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் வேடகட்டமடுவு பஞ்சாயத்தை சேர்ந்த அம்மாப்பேட்டை கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான கிணறு ஒன்று காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர் அக்கிராம மக்கள்.

வேடகட்டமடுவு கிராமத்து மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதி மக்களுக்கு புதிதாக கிணறு வெட்ட அரசு உத்தரவு பிறப்பித்தது. நீரோட்டம் மிகுந்த இடம் காணாத நிலையில் பழைய கிணற்றிலே தோண்டுவோம் என்று முடிவெடுத்தது கிராமப் பஞ்சாயத்து. சாமி வரம்கொடுத்தால் போதுமா? அந்த கிணறு இருந்த இடத்தைத் தேடியபோது, அது நிலமாக மாறியிருந்தது. அந்த கிணற்றை ஆக்கிரமிப்பு செய்து நிலமாக மாற்றியுள்ளனர் என்பது தெரியவந்து "கிணத்தை காணோம்' என்று மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

well

மனு மீதான எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், கிணறோடு சேர்த்து, அரசுப் பள்ளி இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து ஊர்மக்களை மிரட்டி வருகிறார் சிவராம உடையார் மூத்த மகன் சக்தி.

அம்மாப்பேட்டை தாம்பல் செல்லும் சாலையை ஒட்டி அரசுப் பள்ளி இயங்கி வந்துள்ளது. இந்தப் பள்ளியை வேறிடத்திற்கு இடமாற்றம் செய்த நிலையில் அந்த இடம் கிராமநத்தத்தில் இருந்துவந்துள்ளது. கிராம நத்தம் நிலத்தை பட்டா கொடுக்கமுடியுமா என்றால் முடியும். அதை ஒரு நபருக்கு வீட்டு பட்டாவாக மூன்று சென்ட் கொடுக்கமுடியும். ஆனால் ஒரே நபருக்கு எப்படி ஒட்டுமொத்த 75 சென்ட் நிலத்தைக் கொடுக்கமுடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர் கிராமத்தினர்.

பட்டா எண்ணை வைத்து பதிவேடு மூலமாகப் பார்த்த தில் "அந்த இடம் இன்றுவரை அரசுப் பள்ளி இடம் என்றுதான் உள்ளது. பணபலம் படைத்த காரணத்தால் அரசு அதிகாரியான ஆர்.டி.ஓ. புண்ணிய கோடியை தன் கையில் போட்டுக்கொண்டு பொதுமக்களை மிரட்டி வரு கிறார் சக்தி. இதுதொடர்பாக அரூர் ஆர்.டி.ஓ. புண்ணிய கோடியிடம் "அந்த இடம் அரசுப்பள்ளி என்றுதான் பட்டாவில் இருக்கிறதே' என்ற போது, பேச மறுத்து தயக்கம் காட்டினார். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழியோ, "விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

நிலத்தின் மீது பிரச்சினை இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க கால அவகாசம் தேவை. "அரசின் பெயரில் இருக்கும் நிலத்தை, பொதுமக்கள் தேவைக்கு வழங்குவதற்கு ஏன் இந்தக் காலதாமதம்' என்கிறார்கள் கிராம மக்கள் கோரஸாக.

-அ.அருண்பாண்டியன்