ரு சவுக்கு கழியில் பெட்ஷீட்டால் சுற்றப்பட்ட சடலத்தை இருவர் சுமந்து சென்ற படம் சமூக வலைத் தளத்தில் வெளியாகி "தமிழகத்தில் இப்படியொரு கிராமமா?' என மனதை உலுக்கிவிட்டது. அடிப்படை வசதிகளற்ற அந்த கிராமம் அமைச்சரின் தொகுதிக்குள்தான் இருக்கிறது என்பதால் பெரும் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.

vv

வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் கொண்டாம்பட்டி கிராமத்தில் இருந்து மலையேறி சென்றால் வருகிறது அந்த நெக்னாமலை கிராமம். கிரிசமுத்திரம், வளையாம்பட்டு, லாலாஏரி, செக்குமேடு, கொன்னாங்குட்டை, வெள்ளக்குட்டை என மலை அடிவாரத் தில் உள்ள கிராமங்களில் இருந்து நெக்னாமலைக்கு செல்லலாம். எந்த வழியாக மேலே ஏறுவதாக இருந்தாலும், புதியதாக மலையேறுபவர்களுக்கு இரண்டரை மணி நேரமாகிவிடும். மலைவாழ் மக்களுக்கு ஒன்னரை மணி நேரம். தலைச்சுமை இருந்தால் அவர்களுக்கும் 2 மணி நேரத்துக்கு மேலாகிவிடுமாம்.

நெக்னாமலையில் சுமார் 100 வீடுகள் உள்ளன. வனத்துறை தரும் இரும்புத் தகரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வீடுகளும், சில கூரை வீடுகளும் உள்ளன. அந்த ஊரின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 500 சொச்சம். மலைமேல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளியில் 14 மாணவ- மாணவிகள் ஒரே வகுப்பறையில் இருக்கின்றனர். ""முன்னாடி இரண்டு வாத்தியார் இருந்தாங்க. இப்ப ஒரு வாத்தியார்தான் இருக்கார். அவரும் சரியா வர்றதில்லை. அதனால் சிலர், மலைக்குக்கீழ தங்களோட சொந்தக்காரங்க வீட்டுக்கு பசங்கள அனுப்பி அங்கயே தங்கவச்சி படிக்க அனுப்பறாங்க. சிலர் திருப்பத்தூர், ஆலங்காயம், வேலூர்ல இருக்கற விடுதியில சேர்த்து விட்டு படிக்க வைக்கறாங்க''’’என்ற ஊர்ப்பெரியவரிடம்,

Advertisment

vv

டோலிகட்டி தூக்கிப்போன சடலம் குறித்து கேட்டபோது, "அது முத்துச்சாமியின் சடலம்'’ என்று சொல்லிவிட்டு அவரது 7 மாத கர்ப்பிணி மனைவி அனிதாவிடம் அழைத்துச்சென்றார். ""என் வீட்டுக்காரர் கோயம்புத்தூரில் சென்டரிங் அடிக் கும் வேலை பார்த்து வந்தார். பிரசவ தேதிக்கு முன்னாடியே எனக்கு வயித்து வலி வந்து டோலி கட்டி என்னை கீழ கொண்டு போய் ஆலங்காயம் ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. குழந்தை பிறந்ததுக்கு அப்பறம் ஊருக்கு vvவந்துட்டோம். அடிக்கடி குழந்தைக்கு காய்ச்சல் வந்து மேலயும், கீழயும் ஏறி இறங்கிக்கிட்டு இருந்தோம். இதனால எங்களையும் கோயம்புத்தூர் கூட்டிக்கிட்டு போய்ட்டாரு. டிசம்பர் 10-ந்தேதி சென்டரிங் வேலை செய்யற இடத்தில் கரண்ட் ஷாக் அடிச்சி இறந்துட்டாரு. அதனால் அவரோட உடம்ப கம்புல கட்டி தூக்கிக்கிட்டு மேல கொண்டு வந்து அடக்கம் செய்தோம்'' என சொல்லிவிட்டு அழுதார் அனிதா.

தனகோட்டி என்கிற மூதாட்டி நம்மிடையே, ""உப்பு, புளி, மிளகா வாங்கறதுல இருந்து எல்லாத்துக்கும் கீழதான் போயாகணும். ஒரு ரோட்ட போட்டு தாங்கன்னு நாங்களும் பல வருஷமா அதிகாரிகள் கிட்ட மனு தந்துட்டோம். பலமுறை போராடிட்டோம், உண்ணாவிரதம் இருந்துட்டோம். யாரும் நடவடிக்கை எடுக்கமாட் டேன்கிறாங்க'' என்றார் வேதனையான குரலில்.

Advertisment

கிராமத்திலுள்ள சிவக்குமார் நம்மிடம் பேசியபோது, ‘""2011-ல் சட்டமன்ற தேர்தலின் போது மலை அடிவாரத்தில் இருக்குற அ.தி.மு.க. ஒ.செ. சம்பத்குமார், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. தேர்தல்ல நின்றார். அவரை டோலி கட்டி மேல தூக்கி வந்தோம். "நான் ஜெயிச்சா ரோடு போட்டு தர்றேன்'னு சொன்னார். எம்.எல்.ஏ.வான பிறகு அவரிடம் போய் "ரோடு போட்டு தர்றீங்கன்னு சொன்னீங்களே'ன்னு கேட்டதுக்கு, "ரோடு போட்டு தர்றவேலை என் பாக்கெட்லயா இருக்கு'ன்னு சொல்லி விரட்டினார். "இப்ப தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்குறது அமைச்சர் நிலோபர்கபில். அவுங்க ஓட்டு கேட்கவே இங்க வரல. நாங்க 2019, நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கறதா அறிவிச்சப்ப ரோடு போட்டு தர்றோம்ன்னு வந்து அளந்தாங்க. அளந்ததோடு சரி. அதுக்கப்பறம் எந்த நடவடிக்கையும் எடுக்கல'' என்றார் ஆதங்கத்துடன்.

அம்மாயி என்ற பெண்மணி நம்மிடம், ""எங்க ஊர்ல யாரும் பொண்ணு எடுக்கறதில்லை, பொண்ணு குடுக்கறதில்லை. இங்கயே மாத்தி, மாத்தி கல்யாணம் செய்து வைக்கறாங்க. எந்த வசதியும் இல் லாத இந்த ஊர்ல நாங்க இருக்க றோம், மத்தவங்களுக்கு என்ன விதியா? நாங்களும் மனுசாளுங்க தானே, நாங்க போடற ஓட்டு மட்டும் வேணும்னு நினைக்க றாங்க, ஒரு ரோடு போட்டு தரக்கூட இந்த அரசாங்கத்துக்கு மனசு வரமாட்டேங்குதே''’என்று வெடித்தார்.

மலையை விட்டு கீழே இறங்கிவரும்போது எதிர்ப்பட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த முனுசாமி நம்மிடம், ""1980-ல் ரோடு போடச்சொல்லி அரசாங்கம் ஜீ.ஓ. போட்டிருக்கு. ஆனா, என்ன காரணத்தால ரோடு போடமாட்டறாங்கன்னு தெரியல'' என்றார்.

இது தொடர்பாக தொகுதிக் குட்பட்ட அமைச்சரின் கருத்தை அறிய அவரது செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோதும், போனை எடுக்கவில்லை. விசயம் பெரிதாவதை அறிந்து, மாவட்ட ஆட்சி யர் சிவன் அருள் இக் கிராமத்திற்கு விசிட் அடித்துவிட்டு, நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

-து.ராஜா