"வரவு. செலவுகளைக் கேட்டால் அடிப்பதும், கொலை மிரட்டல் விடுப்பதும், ஊர்விலக்கம் செய்வதும் என்ன நியாயம்?'' என மாவட்ட காவல்துறையிடம் ஜமாத் நிர்வாகிகளுக்கு எதிராக அந்த ஜமாத்தைச் சேர்ந்தவர்களே புகாரளித்திருக்கும் விவகாரம் இஸ்லாமியர் வட்டாரத்தில் பூதாகரமாகி யுள்ளது.

Advertisment

மயிலாடுதுறை அருகேயுள்ள  கிராமம் அரங்கக்குடி. இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்தை சேர்ந்தவர் நூருல்அமீன்.  இவரை அரங்கக்குடி ஜமாத்திலிருந்து ஊர் விலக்கம் செய்துள்ள தாகவும், தங்களை போலவே மேலும் பல குடும்பத்தை  இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஒதுக்கிவைத்திருப்பதாகவும், நிர்வாகரீதியாகக் கேள்வி கேட்டால் கொலைமிரட்டல் விடுவதாகவும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார். 

இதுகுறித்து நூருல் அமீன் கூறுகையில், "அரங்கக்குடி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் 800 உறுப்பினர்கள் உள்ளனர். இப்பள்ளிவாசலின் முத்தவல்லியாக அர்ஷத் பொறுப்பு வகித்து வருகிறார். இதற்கு முன்பிருந்த சம்சுதீன், ஜமாத் வரவு செலவுகளில் குளறுபடி செய்துள்ளதை தட்டிக்கேட்டதால் ஊர்விலக்கம் செய்துவிட்டனர். தற்போதைய முத்தவல்லி பொறுப்பேற்ற நாளிலிருந்து, எனக்கு திருமணம் மற்றும் அனைத்து வைபவங்களுக்கும் தகவல் தெரிவிப்பதில்லை. ரமலான் போன்றவற்றுக்கு சீரணி சோறு கஞ்சி அட்டை வழங்குவதில்லை. இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கும் புகாரளித்திருந்தேன். இதனால்  கோபம்கொண்ட அர்ஷத்தும் அவரது ஆதரவாளர்களும், 'ஜமாத்தாரிடம் கணக்கு கேட்குற அளவுக்கு துணிச்சல் வந்துடுச்சா?' எனக்கேட்டு முகத்திலேயே தாக்கிவிட்டனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில்       சிகிச்சை பெற்று திரும்பினேன். அர்ஷத் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருப்பதாலும், மற்றவர்கள் ஆளுங்கட்சி பிரமுகர்கள் என்பதாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செம்பனார்கோயில் போலீசார் மறுக்கின்றனர். எனது உயிருக்கும் உடைமைக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். ஊரில் நல்லது கெட்டதுல கலந்துக்கவிடாம தடுக்குறாங்க. சமீபத்தில் ஒரு கடை கட்டி வாடகைக்கு விட நினைத்தேன், 

அந்த கடையை வாடகைக்கு வரவிடாமல் தடுத்து எங்க வாழ்வாதாரத்தையே முடக்குறாங்க. இதுக்கெல்லாம் தற்போதைய முத்தவல்லி மட்டுமல்லாமல், அவரோட சித்தப்பா வும், முன்னாள் நிர்வாகியுமான  சம்சுதீன்தான் மூளையாக இருக்கிறார். காவல்துறையும், தமிழக முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்.

Advertisment

mylai1

பதினைந்து வருடங்களுக்கு மேலாக ஊர் விலக்கத்திற்கு ஆளான தாகக் கூறும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தமீம் கூறுகையில், "இப்போ இருக்கிற முத்தவல்லி அர்ஷத் என்னோட சித்தப்பா மகன். முன்னாள் முத்தவல்லியான சம்சுதீன் என்னோட மற்றொரு சித்தப்பா. சம்சுதீன் கடந்த 25 வருடமாக ஊர் நிர்வாகியாக இருந்துவந்தார். 2024-ல் சம்சுதீன், அர்ஷத்தை நிற்கவைத்தார். அவரோடு 13 நிர்வாகக் குழுவினரும் நின்றார்கள். அவர்களை எதிர்த்து நாங்கள் போட்டியிட்டதில் அர்ஷத் அணி வெற்றிபெற்றது. நாங்கள்  முன்பிருந்த நிர்வாகிகளிடம் கணக்கு கேட்டோம். இப்போ உள்ளவங்க, தங்களை கேட்டதாக நினைத்து, ஊர் உரிமைகளை மறுக்கிறாங்க. இது என்ன நியாயம்? என்னுடைய உரிமை மறுக்கப்பட்டதால் நான் தனி ஜமாத் போன்ற சங்கத்தை நடத்திவருகிறேன்'' என்கிறார்.

இதுகுறித்து அர்ஷத்திடம் கேட்டோம். "சொந்த பிரச்சனைக்கு பொதுப்பிரச்சனைய இழுத்து பொய்ப்பிரச்சாரம் செய்வதே வேலை. தமீம் என்பவர் ஊருக்கு அவப்பெயரை உருவாக்கி வருகிறார். 

Advertisment

எனக்கு அரசியலிலும், ஊர் மக்களிடமும் நல்லபெயர் இருக்கு. கெட்ட பெயரை உருவாக்குவதற்கு முயற்சி செய்கிறார். தமீம், நூருல் அமீன் உள்ளிட்ட சிலர் கூறுவது முழுக்கப்பொய். அவர்களின் நோக்கமே ஊர் இரண்டுபடணும் என்பதுதான். தமீம் மனைவி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும்போது பல்வேறு ஊழல்களை செய்து  ஊராட்சி அலுவலகமே இழுத்து மூடப்பட்டது. 

அதேபோல அவர் வீட்டில் வேலை பார்த்த பெண் தீக்குளித்த வழக்கில் கூடப்பிறந்த  தங்கையும் அம்மாவும் சிறைக்கு சென்றதில் நான் மீட்டுவந்தேன். இதெல்லாம் பார்த்துதான் நல்லவன் என என்னை முத்தவல்லியாக      தேர்வு செய்தாங்க. நான் முத்தவல்லியாக வந்தபிறகு 10 காலனிகளைக் கட்டி ஊருக்கு வருமானம் வரும்படி  செய்துள்ளேன்.  அதேபோல  பெண்கள் நடக்க தனி நடைபாதையும், சிறுவர்கள் விளையாட பூங்காவும் அமைத் திருக்கேன். ஊரில் ஒதுக்கப்பட்டதாக கூறுவது பொய். விரைவில் மாவட்ட அதிகாரிகளை சந்தித்து அவர்கள் மீது புகார் கொடுக்கவிருக்கிறோம்''  என்கிறார்.

அரங்ககுடி இஸ்லாமிய  மக்கள்  சிலரிடம் விசாரித்தோம், "ஊர் நீக்கம் என்பது, எல்லா கிராமத்திலும் இஸ்லாமியர்கள் வட்டாரத்தில் இருக்கக்கூடிய ஒன்றுதான். முன்பிருந்த முத்தவல்லி சம்சுதீன் அடாவடி பேர்வழி,  அவரை மீறி எதுவுமே செய்யமுடியாது. அதோடு எங்க ஜமாத்துல வருமானம் அதிகம். அதனால பதவிய விட்டுத்தர மறுத்தார்.  நீதிமன்றம் மூலம் பிடுங்கப்பட்டது. சம்சுதீன் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் தமீம். அவரையும் கடந்த 15 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள அர்ஷத் நேர்மையான மனிதர். ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டும், பிரிந்து சென்றவர்களும் ஓர் அணியில் வரவேண்டும் என முயற்சி செய்கிறார்'' என்கிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், "புகார் குறித்து விசாரிக்க செம்பனார்கோயில் காவல்நிலையத்திற்கு அனுப்பியுள்ளோம்'' என்கிறார்.