குட்கா ஊழலில் சி.பி.ஐ. எடுத்த நடவடிக்கை உருவாக்கிய அதிர்வலைகள் இன்னமும் ஓயவில்லை. குட்கா ஊழலில் கைதான மாதவராவ் உட்பட ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கிறது சி.பி.ஐ. மாதவராவ் சொன்ன கூடுதல் தகவல்கள் அடிப்படையில் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் உள்ள குடோனையும் லேட்டஸ்டாக ரெய்டு செய்திருக்கிறது சி.பி.ஐ.
""நாங்கள் குட்கா ஊழல் விவகாரத்தில் மிகவும் சீரியஸாக இருக்கிறோம். அது தொடர்பாக நாங்கள் ரெய்டு நடத்தியதில் ஒருவர்கூட தப்பிக்க முடியாது. அந்த அளவிற்கு அவர்களுக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன'' என உறுதியாக சொல்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். "அப்படி என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கிறது' என கேட்டதற்கு அவர்கள் வசம் வைத்திருக்கும் வழக்கு பற்றிய குறிப்புகளை நமக்கு காட்டினார்கள்.
""குட்கா விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் கையூட்டு பெறுவது ஒரு திருட்டு சம்பவத்தில் இருந்துதான் தொடங்குகிறது. 2014-ம் ஆண்டு சென்னை -அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் துணை ஆணையாளராக இருந்த ஒருவர், ஒரு திருட்டு வழக்கில் குட்கா வியாபாரியான மாதவ ராவின் மேனேஜரை கைது செய்கிறார். அவன் அப்போது கவர்னராக இருந்த ரோசையாவின் பெயரை சொன்னதோடு மாதவராவின் குட்கா வியாபாரத்தையும் அவர்கள் செங்குன்றத்தில் வைத்திருக்கும் குடோனை பற்றியும் சொல்கிறான். அவனை அழைத்துக் கொண்டு குடோனுக்குச் சென்ற அந்த துணை ஆணையாளர்தான் மாதவராவின் குடோனுக்குச் சென்ற முதல் காவல்துறை அதிகாரி. அவரை மாதவராவ் வெயிட்டாக கவனிக்கிறார். அத்துடன் தான் தயாரிக்கும் குட்காவை வணிகவரித்துறை அமைச்சராவதற்கு முன்பு திருவள்ளூரைச் சேர்ந்த பி.வி.ரமணாதான் முக்கிய ஏஜெண்டாக விற்று வந்ததாக தெரிவிக்கிறார். வாயை மூடிக் கொண்டு அந்த அதிகாரி வெயிட்டாக கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறார். இதை அரசல் புரசலாக கேள்விப்பட்ட நிருபர் ஒருவர், அப்போது கமிஷனராக இருக்கும் ஜார்ஜிடம் இந்தத் தகவலை கூறுகிறார். ஜார்ஜ் இதுபற்றி விசாரிக்க தற்போதைய விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாரை அனுப்புகிறார். நான்கைந்து இன்ஸ்பெக் டர்களுடன் மாதவராவின் குடோனுக் குச் சென்ற ஜெயக்குமார் சரியான தகவல்களை சொல்லவில்லையாம். ஜார்ஜ் தனக்கு தகவல் சொன்ன பத்திரிகையாளரிடம் ஜெயக்குமார் சொன்னதை சொல்ல அவர் அதை ஏற்கவில்லை. சந்தேகமடைந்த ஜார்ஜ் விமலா என்கிற பெண் அதி காரியை அனுப்பி விசாரிக்கிறார். விமலா உண்மையை போட்டு டைக்கிறார். அதற்கு பிறகு ஜார்ஜ் செய்த செயல்தான் ஊழலின் ஆரம்பம்.
ஜார்ஜ் தன்னை நெருங்குவதை உணர்ந்த மாதவராவ் அவரது தரகர்களான ராஜேஷை யும், நந்தகுமாரையும் அவரை சந்திக்க அனுப்பு கிறார். அவர்களை அப்போது உளவுத்துறை கூடுதல் கமிஷனராக பதவி வகித்த வரதராஜுலுவை சந்திக்க வைக்கிறார். வரதராஜுலு பேரம் பேசுகிறார். செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத், உதவி ஆணையாளர் மன்னர் மன்னன், துணை கமிஷனர் ஜெயக்குமார், இணை கமிஷனர் தினகரன், கூடுதல் கமிஷனர் வரதராஜுலு, கமிஷனர் ஜார்ஜ் என லஞ்சம் எவ்வளவு என முடிவாகிறது. குட்கா ஊழல் தொடங்குகிறது. இதற்கிடையே கமிஷனர் ஜார்ஜ் மாற்றப்பட்டு டி.கே.ராஜேந்திரன் கமிஷனராகிறார். மாதவராவின் தரகர்களான ராஜேஷும் நந்தகுமாரும் குட்கா விவகாரத்தில் நடந்தவை அனைத்தையும் டைரியிலும் கணக்கு வழக்கு பைல்களிலும் குறித்து வைக்கின்றனர். அத்துடன் இந்த இருவரது செல்போன்களிலும் அவர்களி டம் ரகசியமாக லஞ்சம் பெற்ற அதிகாரிகள் உபயோகித்த செல்போன் எண்கள் பதிவாகியுள்ளன. 2016ஆம் ஆண்டு வருமானவரித்துறை மாதவராவின் குடோனில் ரெய்டு நடத்தும்போது இந்த ராஜேஷ், நந்தகுமாரின் ஆவணங்கள் சிக்குகின்றன.
அதை வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரி பாலகிருஷ்ணா தலைமைச் செயலாளர், ராம மோகனராவிற்கு கடிதமாக எழுதுகிறார். அப்பொழுது டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமாரை மாற்றிவிட்டு அந்த இடத்திற்கு ஜார்ஜையும் டி.கே.ராஜேந்திரனையும் கொண்டு வரும் முயற்சி நடக்கிறது. இதனால் கோபமடைந்த அசோக்குமார் அவருடன் சி.பி.ஐ.யில் ஒன்றாக பணிபுரிந்த அருணாச்சலத்தை களத்தில் இறக்கு கிறார். மத்திய சென்னை இணை ஆணையாளராக இருந்த அருணாச்சலம் வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரியான பாலகிருஷ்ணாவை சந்திக்கிறார். அத்துடன் குட்கா அதிபர் மாதவராவ் மற்றும் அவரது தரகர்களான ராஜேஷ், நந்தகுமாரை ஆவணங்கள் எதுவுமில்லாமல் கைது செய்து போலீஸ் ஸ்டைலில் விருந்து கொடுக்கிறார். அவர்கள் தங்களிடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்கள் பேசிய தொலைபேசி எண் களை கொடுக்கிறார்கள். அந்த தொலைபேசி எண் கள் யார் யார் பெயரில் இயங்குகிறது என அருணாச் சலம் தொலைபேசி நிறுவனங் கள் மூலம் பெறுகிறார்.
இவை அனைத்தையும் ஆதாரத்துடன் திரட்டி அசோக் குமாரிடம் கொடுக்கிறார் அருணாச்சலம். இந்த ஆதாரங்களை வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரி பாலகிருஷ்ணா வின் கடிதத்தோடு ஜெ.வுக்கு அனுப்புகிறார் அசோக்குமார். குட்கா ஊழலில் அதிகாரிகள் மூலமாக சசிகலா பணம் பெறுகிறார் என்கிற அசோக்குமாரின் கடி தத்தை முதலில் படித்த சசிகலா ஜெ.வுக்கு அசோக்குமார் செய்த உதவிகளை (சி.பி.ஐ.யில் இருந்தபோது ஜெ.வுக்கு வெளிநாட்டு டாலர்கள் பரிசாக வந்த விவகாரத்தை ஜெ.வுக்கு சாதகமாக்கினார் அசோக்குமார்.
சாதகமாக்கிக்கொண்டு ஊழல் செய்கிறார். கவர்னர் ரோசய்யாவின் உறவினர்கள் நடத்தும் வியாபாரத்துக்கு (குட்கா) இடைஞ்சல் செய்கிறார் என போட்டுக் கொடுக்க ஜெ., அசோக்குமாரையும் அருணாச்சலத்தையும் தூக்கியடிக்கிறார். தாங்கள் பழிவாங்கப்பட்டாலும் குட்கா விவகாரத்தை விட்டுவிடக்கூடாது என நினைத்த அசோக்குமார், காவல்துறை அதிகாரி களான முருகனிடமும் திரிபாதியிடமும் குட்கா தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார். அசோக்குமாரை தொடர்ந்து டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யானதும் அசோக்குமார் கொடுத்த குட்கா தொடர்பான ஆவணங்களை முருகனும் அசோக்குமாரும் லீக் செய்கின்றனர்.
அந்த செய்திகளை தி.மு.க. பெரிதாக்குகிறது. வழக்குப் போடுகிறது. கடைசியில் சி.பி.ஐ. விசா ரணைக்கு உத்தரவிடப்படுகிறது. சி.பி.ஐ. விசா ரணைக்கு வழக்கை ஏற்றதும் அருணாச்சலம் திரட்டிய வீடியோ மற்றும் ஆவணங்கள் எங்கள் கையில் வந்துவிட்டது. இந்த ஆவணங்களை வைத்தே நாங்கள் குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும்'' என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.
""குட்கா விவகாரத்தில் மட்டும் காவல்துறை அதிகாரிகள் 200 கோடிகளுக்கும் மேல் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள். ஜார்ஜ் கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் திருக்கண்ணூர் ஆகிய ஊர்களில் ஏகப்பட்ட சொத்துகளை வாங்கிக் குவித்துள்ள ஆவணம் எங்களுக்கு கிடைத்துள்ளது. டி.கே .ராஜந்திரன் விழுப்புரத்தில் விவசாய நிலம், சேலம் மாவட்டத்தில் இரண்டு குவாரி நடத்துகிறார். நாமக்கல் திருச்செங்கோட்டில் அவரது உறவினர்கள் பெயரில் வியாபாரம் நடத்துகிறார் என நாங்கள் நடத்திய ரெய்டுகளில் தெரிய வந்துள்ளது. அதனால்தான் மத்திய அமலாக்கத்துறை களத்தில் குதித்துள்ளது. நாங்கள் ரெய்டில் கண்டுபிடித்த லஞ்ச பண பரிமாற்றங்களையும் சொத்துகள்பற்றிய விவரங்களையும் அமலாக்கத் துறையிடம் ஒப்படைத்துள்ளோம். அவர்கள் சட்டவிரோத பணப் பரிமாற்றம், வருமானத் துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்'' என்றனர்.
""இதனிடையே ஜெ. இறந்தவுடன், தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன்ராவ் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. இதைப் பார்த்து பயந்துபோன ஜார்ஜ், தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி "எனக்கும் அந்த ஊழலுக்கும் எந்த தொடர்புமில்லை' என ஒட்டுமொத்த பழியையும் ஜெயக்குமார் மீது போட முயற்சித்தார். இதைக்கண்டு பயந்துபோன ஜெயக்குமார், அ.ம.மு.க. பிரமுகரான வெற்றி வேல் மூலம் டி.டி.வி. தினகரனிடம் பேசி, வண்ணாரப்பேட்டைக்கு இடம் மாற்றல் பெற்றுச் சென்றார். அதன்பிறகு விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக்கினார் டி.ஜி.பி. இவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்துள்ளார்'' என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.
சி.பி.ஐ.யின் தாக்குதலைப் பார்த்த டி.ஜி.பி. ரெய்டு நடந்த அன்றே தனது ராஜினாமா கடிதத் துடன் முதல்வர் எடப்பாடியை சந்தித்தார். போலீஸ் அதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டை ஊழல் வழக்கில் கைது செய்ய மாநில லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்தது. ஆனால் மத்திய அரசு அனுமதி தர மறுத் தது. அதனால் ஜாபர்சேட்டை இன்றுவரை எதுவும் செய்ய முடியவில்லை. அதுபோல "உங்கள் மேல் நட வடிக்கை எடுக்க எடப்பாடி தலைமையிலான மாநில அரசு அனுமதி தராது. உங்கள் வீட்டில் ரெய்டு நடத்த வும், குட்கா ஊழல் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு என எந்த வழக்கை வேண்டுமானா லும் போடட்டும். உங்களை மாநில அரசு அனுமதி யின்றி எதுவும் செய்யமுடியாது' என டி.ஜி.பி. கொண்டு வந்த ராஜினாமா கடிதத்தை எடப்பாடி முன்பே கிழித் துப் போட்டார் சத்தியமூர்த்தி. அவர் கொடுத்த தெம் பில் சாதாரண காரில் எடப்பாடி வீட்டுக்கு ராஜி னாமா கடிதத்தோடு வந்த டி.கே.ஆர்., டி.ஜி.பி.க்கு சொந்தமான காரை வரவழைத்து வீட்டுக்குப் போனார்.
அவசர அவசரமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்திய ஜார்ஜ், ""குட்கா விவகாரத்தில் முறைகேடு நடந்தது உண்மை. அதற்கும் எனக்கும் டி.கே.ஆருக்கும் தொடர்பு இல்லை'' என்றவர் ""ஊழ லின் தொடக்கத்திற்குக் காரணம் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார்'' என பேசினார். ஜார்ஜின் இந்த பேட்டி குட்கா ஊழல் தொடர்பான ஒப்புதல் வாக்குமூல மாகவே அமைந்துவிட அதை சந்தோஷமாக வரவேற்ற சி.பி.ஐ. அதிகாரிகள், ""இந்த ஒரு பேட்டியே போதும் குட்காவில் ஊழல் நடந்தது என்பதற்கு. தெளிவான ஒரு சாட்சியமே கிடைத்துவிட்டது'' என் கிறார்கள். அதேபோல் கோட்டை வட்டாரத்திலும் கூட ""வில்லங்கமான இந்த குட்கா வழக்கில் போலீஸ் உயர் அதிகாரிகளே வில்லன்களாகிவிட்டார்கள்'' என்ற பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.
அமைச்சர் வீட்டில் பலமுறை சோதனைகளை வருமானவரித்துறை மேற்கொண்டதால் இந்தமுறை சோதனை நடத்திய சென்னை சி.பி.ஐ.க்கு பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. அதேநேரத் தில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சம்பத் என்கிற ஆய்வாளரின் ராயபுரம் வீட்டை பூட்டி சீல் வைத்துள்ள சி.பி.ஐ., அவர் தூத்துக்குடிக்கு இடமாறுதல் பெற்ற பிறகும் ஏன் ராயபுரம் வீட்டை ஒப்ப டைக்கவில்லை என்பதை சீரியஸாக பார்க்கிறது. அந்த வீட்டைத் தோண்டினால் ஏகப் பட்ட பூதங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கிறது.
இந்த விவகாரத்தில் ஜெ. காலத்தில் அமைச்சராக இருந்த ரமணாவை தொட்டிருக்கிறது சி.பி.ஐ. அதன் தொடர்ச்சியாக சசிகலாவை விசாரிக்கவும் முடிவு செய்துள்ளது. குட்கா விவகாரத் தில் யாரும் தப்ப முடியாது என உறுதியாக அடித்துச் சொல் கிறது சி.பி.ஐ.
-தாமோதரன் பிரகாஷ்
படங்கள் : ஸ்டாலின், குமரேஷ்