காஞ்சிபுரத்தில் மூடிய அரங்கத்திற்குள் கூட்டம், புதுச்சேரியில் பொதுக்கூட்டம் என்பன கடந்து 41 உயிர்களை காவு வாங்கிய கரூர் கூட்டத்திற்கு பிறகு மீண்டும் திறந்தவெளி பொதுக்கூட்டத்திற்கு வந்திருக்கின்றார் விஜய்... அதுவும், "பெரியார் மண்ணில் த.வெ.க.' என்கின்ற கோஷத்துடன்! அ.தி.மு.க.விலிருந்து வெளியேறிய செங்கோட்டையன் பொறுப்பில் நடைபெறும் கூட்டம் என்பதால் த.வெ.க.வின் கூட்டத்திற்கு வெகுஜனத்திடம் பதைபதைப் புடன் கூடிய எதிர்பார்ப்பு இருந்தது.
நடிகர் விஜய்க்காக முதல் ரசிகர் மன்றம் அமைக்கப்பட்ட மாவட்டத்தில், முதல் பொதுக்கூட்டம். ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகாவிலுள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி- விஜயபுரி அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை தேர்ந்தெடுத்தது, கொங்கு மண்டல அமைப்பாளரான செங்கோட்டையன் தலைமையிலான டீம். இந்து சமய அறநிலையத் துறையின் விஜயபுரி அம்மன் கோவிலுக்குரிய 16 ஏக்கர் நிலத்தை பயன்படுத்துவதற்கான அனுமதியை கேட்க, "50 ஆயிரம் ரூபாய் வாடகை, டெபாசிட்டாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஒலிபெருக்கி வைத்து கூட்டம் நடத்த காவல்துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும். கூட்டத்திற்கு வருபவர்களுக்கான குடிநீர், உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். கூட்டம் முடிந்த பின்பு பிரச்சாரம் நடைபெற்ற இடத்தை சொந்தச் செலவில் தூய்மை செய்து கொடுக்க வேண்டும். இதன்பிறகு இந்த இடத்திற்கு எந்தவித உரிமையும் கோரக்கூடாது' என 5 நிபந்தனை களுடன் அனுமதி வழங்கியது இந்து அறநிலையத் துறை.
அனுமதிக்கடிதம் மற்றும் முன்னேற்பாட் டுத் திட்டங்களுடன், விஜய் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடத்துவதற் காக காவல்துறையிடம் த.வெ.க. அனுமதி கேட்க, கட்சி சமர்ப்பித்த தள வாட ஏற்பாடுகள், கூட்ட மேலாண்மை திட்டம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்த பிறகு 84 நிபந்தனை களுடன் ஈரோடு மாவட்ட காவல்துறையும் அனுமதி அளித்தது.
நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளில், நடிகர் விஜய் வரும் நேரம், புறப்படும் நேரம், எந்த வழியில் வருகிறார் ஆகிய விவரங்களையும், விஜய்யின் வாகனத்தைத் தொடர்ந்து வரும் 10 வாகனங்களின் பதிவெண் கொண்ட விவரங் களையும் முன்கூட்டியே காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை யுடன், விஜய்யின் வாகனம் வரும் வழியில் ரோடு ஷோ, வரவேற்பு நிகழ்ச்சி அல்லது ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் காவல்துறை ஸ்ட்ரிக்ட்டாகக் கூறியது. முன்னதாக, "கரூரில் நடந்த துயரம் ஈரோட்டிலும் நடக்கக்கூடாது என்ற அடிப்படையில் கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது' என, த.வெ.க. கூட்டத்தை தடை செய்யக்கோரி கோரிக்கை மனுவினை அளித்தது சான் றோர் மக்கள் கழகம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/18/vijay1-2025-12-18-18-10-00.jpg)
பட்டிகளில் அடைக்கப்பட்ட ரசிகர்கள்
"16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மைதானத்தில், த.வெ.க. தொண்டர்கள் 10 ஆயிரம் நபர்களும், பொதுமக்கள் 25 ஆயிரம் நபர்களும் வருவார்கள். இவர்களுக்கென தனித்தனியாக இரும்புத் தடுப்புகளைக்கொண்ட பாக்ஸ் அமைக்கப்பட்டது'' என்றார் செங்கோட்டையன். 60 பாக்ஸ்கள் அமைக்கப்பட்ட நிலையில், 8 பாக்ஸ்கள் மட்டும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. முன்னதாக, மைதானத்தின் வெளிப்புறத்தில் முள்வேலிகளை அமைத்தது த.வெ.க. தரப்பு.
"கடுமையான வெயிலில் த.வெ.க.வினர் அமர நாற்காலி ஏதும் போடாமல், இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்ட பாக்ஸ் மாதிரியான தடுப்புக்களுக்குள் அடைக்கப்பட்டனர். அதாவது, ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பார்களே, அதுபோல்தான். இது கட்சியின் பொதுக்கூட்டம். ஆனால் அதற்கான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை. கலந்துகொண்டவர்கள் தொண்டர்கள் என்றால் இந்த மண்ணில் சுரணை வந்திருக்கும். ஆனால் வந்தவர்கள் ரசிகர்கள் தானே? விஜய்யும் அவர்களை ஆடு, மாடுகளாக நடத்துகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. பெரியார் மண்ணில் கூட்டம் என்கின்றார்கள். ஆனால் பெரியாரை கேலி செய்வதுபோல் உள்ளது த.வெ.க.வின் நடவடிக்கைகள்'' என்றார் பெருந்துறையைச் சேர்ந்த ஒருவர்.
பாதுகாப்பு
கூட்டம் நடைபெறும் இடத்தைத் தவிர்த்து 20 ஏக்கரில் இரண்டு சக்கர வாகனம் நிறுத்துமிடமும், 60 ஏக்கரில் நான்கு சக்கரம், அதற்கு மேலான சக்கரங்களை கொண்ட வாகனங்கள் நிறுத்துமிடத்தையும் உருவாக்கியுள்ளது த.வெ.க. தரப்பு. 72 மருத்துவர்கள்- 120 நர்சுகள் அடங்கிய குழு, தயார் நிலையில் 24 ஆம்புலன்ஸ்கள், 20 இடங்களில் குடிநீர் தொட்டிகள், 20 கழிவறைகள், 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மைதானத்திலிருந்து பொதுமக்கள் வெளியேற 14 வாயில்கள் என முன்னேற்பாடுகள் இருப்பதாகக் காட்டப்பட்டாலும், அங்கு பொருத்தப்பட்ட 40 சி.சி.டி.வி.க்களின் இணைப்பைப் பெற்று பாதுகாப்பை பலப்படுத்தியது ஈரோடு மாவட்ட காவல்துறை.
பொதுக்கூட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாவண்ணம் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய நான்கு மாவட்டத்தை சேர்ந்த 1,796 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், போலீசாருக்கு தேவையான தொப்பி, பெல்ட், சீருடை மற்றும் காலணிகள் போன்றவைகளை விற்பனை செய்து கல்லாக்கட்டினர் வியாபாரிகள். மைதானம் அருகேயுள்ள தனியார் பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக பாதுகாப்பிற்கான அறிவுரைகளை வழங்கியபடியிருந்தார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான சுஜாதா.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/18/vijay2-2025-12-18-18-10-15.jpg)
புஸ்ஸி முன்னிலையில் கைகலப்பு
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட செங்கோட்டையன் சகிதமாக புஸ்ஸி ஆனந்த் மைதானத்திற்கு வந்த நிலையில், தர்மபுரியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்திற்கு மாலையணிவிக்க முற்பட்டனர். புரோட்டாகால்படி மாவட்டத்திலுள்ள எங்களிடம் கேட்டபிறகே மாலை போடலாம் என ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மாலையணிவிக்க தடை போட்டனர். இதுகண்டு அமைதியாக புஸ்ஸி ஆனந்த் இருந்துவிட, அவருக்கு மாலையணிவிக்க மீண்டும் முயற்சித்த நிலையில், இரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இது இப்படியிருக்க, மாலையணிவிக்க வந்தவர்கள் அனைவரும் புஸ்ஸி ஆனந்துக்கு மட்டும் மாலை போட்டுச் சென்றனர். அருகிலிருந்த செங்கோட்டையனை எவரும் சீண்டவில்லை!
புஸ்ஸியா? செங்கோட்டையனா?
"விஜய்யின் ஈரோடு வருகை எனக்கு டென்சனை ஏற்படுத்தவில்லை. எனக்கு டென்சனில்லாமல் இருக்க, மொத்த வேலையில் 25% செங்கோட்டையன் எடுத்துக்கொண்டார். மீதமுள்ள வேலைகளை மாவட்ட செயலாளர் கள் எடுத்துக்கொண்டார்கள்'' என த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், செங்கோட் டையனை பாராட்டுவதுபோல் பேசிவைத்தார். "உண்மையில் தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்கிறார். பழுத்த அரசியல்வாதியல்லவா? கூட்டத்தினை எப்படி கூட்ட வேண்டும் என்கிற வித்தை அவருக்கு தெரியும். பொதுக்கூட்டத்தின் அத்தனை செலவுகளும் செங்கோட்டையனுடையது. விஜய்க்கு அருகில் செங்கோட்டையன் நெருங்கக்கூடாது என்பதற்காக கவனமாக காய் நகர்த்தி வருகின்றார் புஸ்ஸி ஆனந்த். அதில் ஒன்று தான் மாலை மரியாதை எல்லாம். செங்கோட்டையன் அருகிலிருக்க, அவருக்கு ஒரு மாலையும் விழாமல் பார்த்துக்கொண்டதில் புஸ்ஸியின் சாமர்த்தியம் தெரியும். அதுபோக, பெரும்பான்மையாக ப்ளக்ஸ் பேனர்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றில் செங்கோட்டையன் படம் தவிர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது'' என்றார் செங்கோட்டையன் ஆதரவாளர் ஒருவர்.
சீருடையுடன் மாணாக்கர்கள்
பொதுக்கூட்ட மைதானத்தில் மாணாக்கர்கள் தங்களது பள்ளிச் சீருடையுடன், கையில் த.வெ.க. கொடியுடன் வலம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது ஒரு பக்கம் என்றாலும், இரவிலிருந்தே மைதானத்திற்கு வந்து ஆஜராகினர் ஜென் சி கிட்ஸ். விஜய் பேசும் நேரம் காலை 11 மணி முதல் 2 மணிக்குள் என்பதால், திரையில் பார்த்த விஜய்யை அருகிலிருந்து பார்த்துவிட வேண்டும் என்கின்ற ஒற்றைக் காரணத்தால் அதிகாலையிலிருந்தே மைதானத்திற்குள் படையெடுத்தனர் சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்கள்.
கண்டன போஸ்டர்கள்
ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு வருகைதரும் விஜய்யை வரவேற்கும்விதமாக மூன்று விதமான கண்டன போஸ்டர்கள், பெருந்துறை பேருந்து நிலையம், ரவுண்டானா உள்ளிட்ட பெருந்துறை பகுதி முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. ஒரு போஸ்டரில் "ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போகமாட்டீங்களா?' என்றும், அடுத்த போஸ்டரில் "இங்க இருக்க கரூருக்கு போகல.. ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க? 'WHAT BRO? IT'S VERY WRONG BRO' என்றும், அதற்கடுத்த போஸ்டரில், "விஜய் பரிதாபங்கள்' எனத் தலைப்பிட்டு, PRESENT மற்றும் ABSENT என இரு பகுதிகளாகப் பிரித்து PRESENT பகுதியில் "ஜனநாயகன் Dubbing', Audio launchக்கு மலேசியா செல்வது', "ஆடம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது' எனவும், ABSENT பகுதியில் "மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது', "மக்களை சந்திக்க கரூர் செல்வது', "த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வது' எனவும் குறிப்பிடப்பட்டு, வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கூட்டத்தில் விஜய் பேசியது... "இந்த ஈரோடு மண்ணின் மகத்தான மனிதர் தந்தை பெரியார். மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. இங்கு பேசாமல் வேறு எங்கு மஞ்சள் குறித்து பேசுவது? விவசா யம் செழித்துள்ள இந்த ஈரோட்டில் காளிங்க ராயன் அணை, காளிங்கராயன் கால்வாய், அதனை கட்டியவர் காளிங்கராயன். காளிங்க ராயன் சோர்வான சமயத்தில் அவரது தாய் தைரியம் கொடுத் தாராம். பெற்ற தாய் கொடுக்கும் தைரியத் தை விட பெரிது வேறு எதுவும் கிடையாது. எதையும் சாதித்துக் காட்டமுடியும். அப்ப டிப்பட்ட சொந்தங்கள் அம்மா, அப்பா, தங்கை, நண்பர்கள், நண்பிகள் எனக்குத் தைரியம் கொடுத்து, பலப்படுத்தியுள்ளீர்கள். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நான் நன்றி யுடன் இருப்பேன்.
உலகமே போட்டி போட்டு வாங்கும் மஞ்சளை, மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய இதுவரை தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை. கரும்பு, நெல்லுக்கு அரசு விலை நிர்ணயம் செய்தாலும், நெல் கொள்முதல் செய்வதில் ஊழல். விளைவிக்கும் விளைபொருளை விவசாயிகள் லஞ்சம் கொடுத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேர்மையாக மஞ்சளுக்கும் நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 24 மணி நேரமும் விஜய்யை எப்படி முடக்கலாம், ,தமிழக வெற்றி கழகத்தை எப்படி முடக்கலாம் என சிந்தித்துக்கொண்டேயிருக்கிறார்கள். பணம், பதவி, பட்டம் என எதற்கும் ஆசைப்படாத பெரியாரின் பெயரை வைத்துக்கொண்டு, தற்போது பதவியில் இருப்பவர்கள், பதவியை வைத்துக்கொண்டு கொள்ளையடித்துக் கொண்டி ருக்கிறார்கள். பெரியார் பெயரைச் சொல்லி கொள் ளையடிப்பவர்கள்தான் நமது அரசியல் எதிரிகள். எதிரிகள் யார் என சொல் லித்தான் அரசியல் களத் திற்கு வந்துள்ளோம். அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தமிழகத்தின் சொத்துக்கள். அவர்களை பயன்படுத்தக் கூடாது எனச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்க்கிறோம். களத்தில் இல்லாதவர்களை நாங்கள் கண்டுகொள்வ தில்லை. தி.மு.க.வும், பிரச் சினைகளும் பெவிகால் ஒட்டியது போன்றது. அதைப் பிரிக்க முடியாது. என்னை எப்படி முடக்கலாம் என 24 மணி நேரமும் சிந்திக்கின்றனர். நான் இலவசங்களுக்கு எதிரானவன் அல்ல. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்வதில் எனக்கு உடன் பாடில்லை. மக்கள் பணத்தில் செய்யப்படும் திட்டங்கள் எப்படி இலவசமாகும்?
தி.மு.க. ஒரு தீய சக்தி, த.வெ.க. ஒரு தூய சக்தி. தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டியே. செங்கோட்டையன் நம்முடன் இணைந்தது நமக்கு மிகப்பெரிய பலம். இன்னும் பலர் வந்து சேரவுள்ளார்கள்'' என்றார்.
விஜய்க்கு செங்கோட்டையன் வெள்ளிச் செங்கோல் பரிசளித்தார்.
________________
மாநாட்டுத் துளிகள்...
* தனி விமானம் மூலம் காலை 9:45 மணி அளவில் கோவை வந்த விஜய், கோவையில் இருந்து ரேஞ்ச்ரோவர் கார் மூலம், பவுன்சர்கள் துணையுடன் மாநாடு நடைபெறும் விஜயமங்கலத் திற்குச் சென்றார். போக்குவரத்தை சீர்செய்யும் பொருட்டு அவினாசி சாலையிலேயே தடுப்புகள் அமைத்து ரசிகர்களைத் தடுத்து நிறுத்தியது கோவை மாநகர போலீஸ்.
* ப்ளக்ஸ், உயர கம்பங்களை அடுத்து ரசிகர்கள் மரத்தில் ஏறாத வண்ணம் மரத்துக்கு மரம், போலீஸை போட்டு பாதுகாப்பு கொடுத்தது மாவட்ட காவல்துறை.
* விஜயமங்கலம் டோல்கேட் அருகே பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் சுங்கச்சாவடி அருகே இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையில் விழுந்தார். அருகிலிருந்த காவலர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/vijay-2025-12-18-18-09-48.jpg)