vijaya prabhakaran

மிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒவ்வொரு தொகுதியிலும் தோல்வியுற்ற வாக்குகள் வித்தியாசத்தைக் கணக்கிடும்போது, விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவு மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது. வெறும் 4379 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அ.தி.மு.க. கூட்டணியின் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயபிரபாகரன் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்.

Advertisment

அ.தி.மு.க. கூட்டணியும், கேப்டனின் மகன் என்ற அடையாளமும், சாதி ரீதியிலான நாயுடு சமுதாய வாக்குகளும் விஜயபிரபாகரனின் பலமாகப் பார்க்கப்பட்டது. அதேநேரத்தில், வேறு எந்தத் தொகுதியிலும் காணமுடியாத நேர்மையான உழைப்பு, விஜயபிரபாகரனுக்காக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடமிருந்து வெளிப்பட்டது.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி முழுவதும், குறிப்பாக சிவகாசி சட்டமன்றத் தொகுதியில், ராஜேந்திரபாலாஜி அளவுக்கு வேறு எந்த அரசியல் கட்சித் தலைவரும், பொதுமக்களின் தேவையறிந்து உதவிக்கரம் நீட்டியதில்லை. மேலும், கோவில்கள், தேவாலயம், மசூதி எனப் பாகுபாடின்றி நன்கொடை வழங்கியதும் இல்லை. ஆனால், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பெற்ற வாக்குகள் 67,086 என்றால், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன் பெற்ற வாக்குகள் 53235 ஆகவுள்ளது. இத்தனை தீவிரமாக உழைத்தும், தனக்கென்று குடும்பம் இல்லாத நிலையில், கட்சியினரையும், மக்களையும் மட்டுமே நேசித்தும், சிவகாசி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான விஜயபிரபாகரனுக்கு வாக்குகள் குறைவாகக் கிடைத்திருக்கிறதென்றால், மக்களின் மனநிலையை என்னவென்று சொல்வதெனக் கலங்கித்தான் போனார் ராஜேந்திரபாலாஜி.

Advertisment

அ.தி.மு.க. மட்டும் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியே வந்தால், எங்கள் மீது பாசம் காட்டிவரும், தொடர்ந்து உதவிவரும் உங்களையே (அ.தி.மு.க.) ஆதரிப்போம் என்று சிறுபான்மையினர் பலரும் ராஜேந்திரபாலாஜியிடம் உத்தரவாதம் அளித்திருந்தனர். ஆனால், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக சொல்-க்கொள்ளும் அளவுக்கு வாக்குகள் விழவில்லை. தனிப்பட்ட ராஜேந்திரபாலாஜி முக்கியமா? மோடியை வீழ்த்த காங்கிரஸ் ஆட்சி அமையவேண்டுமா? என்ற கேள்விக்கு முன்னால், உள்ளூர்ப் பாசம் அடிபட்டுப்போனது.

வேட்புமனுத் தாக்க-ன்போது விஜயபிரபாகரனை "சின்னப்பையன்'’ என்று செல்லமாக விமர்சித்த ராதிகா சரத்குமார் 1,66,271 வாக்குகள் பெற்றுள்ளார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட ராதிகா சரத்குமாரால் விஜயபிரபாகரனை வாக்கு எண்ணிக்கையின்போது நெருங்க முடியவில்லை. அதனால், ராதிகா சரத்குமாரைக் காட்டிலும் 2,14,606 வாக்குகள் அதிகமாக விஜயபிரபாகரன் பெற்றுள்ளார்.

தென்மாவட்டங்களான மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி என்பதால், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் கணிசமாக உள்ள முக்குலத்து வாக்காளர்களில் பலரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டே வாக்களிப்பார்கள் என்று இந்தத் தேர்தல் களத்தில் பேசப்பட்டது. முக்குலத்தோர் ஆதரவு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு இல்லை என்ற கருத்தினை, விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தவிடுபொடியாக்கிவிட்டன. ஏனென்றால், முக்குலத்தோர் பெல்ட்டுகள் பலவற்றிலும், ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையின்போதும், விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக வாக்குகள் விழுந்திருப்பதை அறியமுடிந்தது. அந்த பெல்ட்டுகளில் உள்ள முக்குலத்து வாக்காளர்களில் பலரும், ஓ.பி.எஸ்.ஸýம், டி.டி.வி. தினகரனும் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க.வின் வேட்பாளரான ராதிகா சரத்குமாரை ஆதரிக்காதது பளிச்சென்று தெரிந்தது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பெற்ற வெற்றிக்காக சில தொகுதிகளில் நன்றி தெரிவிக்கக்கூட மாணிக்கம் தாகூர் வரவில்லை, அருப்புக்கோட்டை போன்ற தொகுதிகளில் தலையே காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு ஆரம்பத்திலேயே எழுந்தது. அதனால், அருப்புக்கோட்டை, திருமங்கலம் போன்ற தொகுதிகளில் மாணிக்கம் தாகூரைக் காட்டிலும் பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் அதிகமாக விஜயபிரபாகரனுக்குக் கிடைத்துள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி மாணிக்கம் தாகூரைப் பெரிதாகப் பயன்படுத்திக்கொண்டதால், அவரால் சொந்தத் தொகுதியில் கவனம் செலுத்தமுடியாமல் போனது. அதனால்தான், ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் அரசிய-ல் சீனியரான மாணிக்கம் தாகூருக்கும், மிகவும் ஜூனியரான விஜயபிரபாகரனுக்கும் இழுபறி ஏற்பட்டது. ஆனாலும், இத்தொகுதியில் சில இடங்களில், மெஜாரிட்டி சமுதாயமான முக்குலத்தோர் வாக்குகளில் கணிசமானவை, சாதி அடிப்படையில் மாணிக்கம் தாகூருக்கு கை கொடுத்திருக்கிறது.

ஒருகட்டத்தில், விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளரின் வெற்றியை நிர்ணையிப்பவர்கள் தி.மு.க. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். மற்றும் தங்கம் தென்னரசுவா? அல்லது முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியா? என்ற கேள்வி எழுந்தது. தி.மு.க.விலும் அ.தி.மு.க.விலும் கூட்டணிக் கட்சியினரின் வாக்குகள் மற்றும் சாதி வாக்குகளை எல்லாம் கடந்து மக்களின் மனதில் ஆழமாக நங்கூரமிட்டது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் மாதம்தோறும் கிடைத்துவரும் ரூ.1000 மற்றும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை திட்டமும்தான். அதனால்தான், இழுபறியைக் கடந்து 3,85,256 வாக்குகள் பெற்று, மூன்றாவது தடவையும் எம்.பி. ஆகியிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.

தனது தோல்வி குறித்து "இது முடிவல்ல, தொடக்கம்தான்..'’என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தே.மு.தி.க.வினரைத் தேற்றியிருக்கிறார் விஜயபிரபாகரன்.