புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதிக்க முடியாதென்று காவல்துறை உறுதியாக நின்றதால், இறுதியில் கெஞ்சிக்கூத்தாடி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்கியது த.வெ.க. 10 டூ 12 மணி வரை மட்டுமே அனுமதி, க்யூ.ஆர்.கோட் பாஸ் வைத்துள்ள புதுவை தொண்டர்கள், அதுவும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி எனக் கட்டுப்பாடுகளை விதித்தது புதுவை போலீஸ். உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தரப்பட்டது. கூட்டம் நடக்கும் இடத்தை தகர ஷீட் போட்டு பாதுகாப்பு செய்திருந்தனர். மேடை அமைப்பதில் சிக்கலிருந்ததால் வேனிலிருந்தே பிரச்சாரம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. 

Advertisment

ஐயாயிரம் பேர் என்பது, எப்படியும் 20 ஆயிரமாக உயருமென்று எதிர்பார்த்தார் விஜய். கூட்டத்துக்கான க்யூ.ஆர்.கோட் பாஸ்களை முதல் நாள் முதல் ஷோவுக்கு சினிமா டிக்கட்கள் விற்பதுபோல் ரசிகர்களுக்கு 500, 1,000 ரூபாயென விற்பனை செய்து அதிர்ச்சியை தந்தனர் புதுவை விஜய் கட்சி நிர்வாகிகள். 

Advertisment

vijay1

9ஆம் தேதி, காலை 10 மணிக்கெல்லாம் சத்தமில்லாமல் கறுப்பு நிறக் காரில் மைதானத்துக்கு வந்துவிட்டார் விஜய். அந்நேரத்தில் அங்கே வெறும் இரண்டாயிரம் பேர் தான் இருந்தனர். அதைப்பார்த்து அப்செட்டானவர், கேரவனில் உட்கார்ந்துகொண்டு ஜான், புஸ்ஸி, ஆதவ் அர்ஜுனாவிடம், பேச வேண்டிய பேப்பரை வைத்து டிஸ்கஸ் செய்தார். 10.30 மணிவரை 3 ஆயிரம் பேர்தான் வந்திருந்தனர். பாஸ் இல்லாதவர்கள் தகர ஷீட்களை உடைத்துவிட்டும், கேட் மீதேறி எகிறிக் குதித்தும் உள்ளே செல்ல முயன்றனர். இப்படி அத்துமீறி நுழைந்த த.வெ.க. தொண்டர்களை போலீசார் விரட்டிப் பிடிக்கத் துரத்தினார்கள். அப்பகுதியை ட்ரோன் மூலமாக கண்காணிப்பதை அறிந்த தொண்டர்கள், கட்சித் துண்டால் முகத்தை மூடி புதருக்குள் பதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 11 மணிக்கு விஜய் பேசவேண்டிய நேரம் எனக் குறிக்கப்பட்டிருந்தது. மைதானத்தில் எதிர்பார்த்த கூட்டமில்லாததால அதிர்ச்சியான புஸ்ஸி ஆனந்த், நுழைவாயிலுக்கு ஓடிவந்து பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிட மிருந்து மைக்கை வாங்கி, "கார்டு இல்லாதவர்களை யும் உள்ளே விடுங்க' என்றார். அதைக்கேட்டு கோபமடைந்த எஸ்.எஸ்.பி. ஈஷாசிங், ஆனந்த் கையிலிருந்து மைக்கை பிடுங்கிக்கொண்டு முறைத்தார். கார்டு இல்லாதவர்களை ஆனந்த் உள்ளே அனுப்ப முயன்றதும் கடுப்பாகித் தடுத்த ஈஷாசிங், "உங்களால ஏற்கெனவே 40 பேர் இறந் திருக்காங்க, இங்கே யாருக்காவது ஏதாவதானால் நாங்கதான் பொறுப்பு. காவல்துறை என்ன செய்யணும்னு நீங்க சொல்லாதிங்க'' என கடுமை யாக எச்சரித்ததும், ஆனந்த் அசிங்கப்பட்டு மறு பேச்சின்றி நழுவினார். கொஞ்ச நேரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடமிருந்து "அனைவரை யும் உள்ளே அனுமதியுங்கள்' என உத்தரவுகள் காவல்துறை அதிகாரிகளுக்கு சென்றது. ஸ்கூட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு புஸ்ஸி ஆனந்த், "எல் லோரையும் உள்ளே விடுங்க' என கேட் கேட்டாக சென்று போலீஸாரிடம் கெஞ்ச, அதன்பின் அனைவரையும் உள்ளே அனுமதித்தது போலீஸ். 

விஜய் பேசத்தொடங்கிய 11.20 மணிக்கு அதிகபட்சம் ஆறாயிரம் பேரே இருந்தனர். காவல்துறை அதிகாரியொருவரிடம் பேசியபோது, "பெரியளவில் கூட்டம் வரும்னு எதிர்பார்த்தோம், அவ்வளவா வரல. வந்திருக்கிற கூட்டத்தில் பாதிக்கு மேல கடலூர், விழுப்புரத்திலிருந்து வந்தவங்க தான். எல்லோரையும் உள்ளே அனுப்பச் சொல்லி மேலயிருந்து உத்தரவு வந்ததால 4 கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளோடு 3 பேரையும் உள்ள அனுப்பவேண்டியதாகிடுச்சி'' என்றார்.

Advertisment

vijay2

சிவகங்கை மா.செ. பிரபுவின் தனி பாது காவலராக இருக்கும் சி.ஆர்.பி.எப்.பில் பணியாற்றி ஓய்வுபெற்ற கன்னியாகுமரியை சேர்ந்த டேவிட், துப்பாக்கியோடு வந்தது போலீஸாரை அதிர்ச்சியடையச் செய்தது. அவரிடம் ஐ.பி. அதிகாரிகள் விசாரணை நடத்தி னர். புதுச்சேரியை சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் காளிதாஸ், "தமிழ்நாட்டிலிருந்துதான் விடியற் காலையிலேயே இளைஞர்கள் வந்து குவிந்தார்கள். அவர்களால் இந்த சாலையை முற்றிலும் லாக் செய்துவிட் டார்கள். இந்த சாலையில் அரசு அலுவலகங்கள் உள்ளன, 4 பள்ளிகள் உள்ளன. இது குடியிருப்புப் பகுதி. பல கிராம மக்கள் இந்த சாலை வழியாகத் தான் அரசு பொது மருத்துவமனைக்கு வரவேண்டும். அந்த சாலையை லாக் செய்து, உள் ளூர் மக்களையும் வீட்டுக்குள்ளேயே அடைத்து விட்டனர்.  இப்படியொரு கூட்டம் நடத்த அனுமதி தரவேண்டுமா என்பதை காவல்துறை யோசிக்க வேண்டும். விஜய் கூட்டத்தால் புதுவை மக்களின் நிம்மதிதான் கெட்டது'' என்றார்.

vijay3

11.10க்கு ஆனந்த் பேச்சோடு கூட்டம் தொடங்கியது. 11.20க்கு மைக் பிடித்த நடிகர் விஜய், "ஒன்றிய அரசிற்குத்தான், தமிழ்நாடு தனி மாநிலம், புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம். அவங்களுக்கு தான் தமிழ்நாடு தனி, புதுச்சேரி தனி என இருப் பார்கள். நாமெல்லாம் வேறுவேறு கிடையாது, நாம் எல்லாரும் ஒண்ணுதான். இந்த புதுச்சேரி அரசைப் பற்றி சொல்ல வேண்டும். இது கண்டிப்பாக தமிழ்நாட்டிலிருக்கும் தி.மு.க. அரசைப்போல கிடையாது. எனது கூட்டத்துக்கு அனுமதி தந்த புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி முதல்வருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இதைப் பார்த்து தமிழ்நாட்டில் இருக்கும் தி.மு.க. அரசு கற்றுக்கொண் டால் நன்றாக இருக்கும். 

புதுச்சேரி அரசு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எதிலும் கண்டுகொள்ள வில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டுமென்று கேட்டு பலமுறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கி றார்கள், அதைக் கண்டுகொள்ள வில்லை. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு இதுவரைக்கும் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுடைய வேலை வாய்ப்பிற்காக எதையுமே செய்யவில்லை. 

இங்கே ஒரு ஐ.டி. கம்பெனி உருவாக வேண்டுமென்ற எண்ணமே இல்லை. இங்கே ஒரு அமைச்சரை ஊழல் குற்றச்சாட்டினால் பதவியை விட்டு நீக்கி, அந்த இடத்திற்கு இன்னொருவரை நியமித்து 200 நாட்கள் ஆகிவிட்டது, இன்னும் அவருக்கென ஒரு இலாகாவை ஒதுக்கவில்லை. இச்செயல் சிறுபான்மை மக்களை அவமானப் படுத்துவது என அம்மக்களே சொல்கிறார்கள். புதுச்சேரியின் முக்கிய அங்கமாக இருக்கிற காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் முன்னேற்றமே இல்லை. முக்கிய சுற்றுலாத்தலமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங் வசதியில்லை, கழிப்பறை வசதியில்லை. அதனால் புதுச்சேரி மக்களுக்கு ஒன்றை சொல்ல வேண்டும். தி.மு.க.வை நம்பாதீர்கள், உங்களை நம்பவைத்து ஏமாற்றுவதுதான் அவர்களின் வேலையே.

புதுச்சேரி, மத்திய நிதிக்குழுவில் இடம்  பெறவில்லை. புதுச்சேரிக்கான நிதி ஒதுக்கப்படுவதில்லை. இந்த நிலைமை மாற வேண்டுமென்றால் ஒரே வழி, மாநில அந்தஸ்து வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள்தான். இந்தியாவிலேயே ரேஷன் கடைகள் இல்லாத ஒரு மாநிலம் புதுச்சேரிதான்'' எனச் சொல்லத் துவங்கியதுமே புதுவை ரசிகர்கள் கலையத் துவங்கினார்கள். "இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்போதும் துணை நிற்பேன். வரும் புதுச்சேரி தேர்தல் களத்தில் நம்முடைய தமிழக வெற்றி கழகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கும்'' என முன்னுக்குப் பின் முரணாகவும், தவ றான தகவல்களையும் தந்து பேசினார்.  

முதலமைச்சர் ரங்கசாமியை பாராட்டியவர், ரங்கசாமிக்காக புதுவை கூட்டணி மந்திரிசபையி லுள்ள பா.ஜ.க.வை பெயர் சொல்லா மல் ஒன்றிய அரசு எனச்சொல்லி திட்டினர். பா.ஜ.க. கோபித்துக்கொள் ளக்கூடாது என்பதற்காக ரங்கசாமியை மறைமுகமாகக் குட்டினார். அடுத்து, புதுவையில் ஆட்சியமைக்கும் வேகத்திலுள்ள எதிர்க்கட்சியான தி.மு.க.வை நம்பாதீர்கள் என்றார். தி.மு.க.வுடன் கூட்டணியிலுள்ள புதுவை காங்கிரஸ் குறித்து எதுவும் பேசவில்லை. 12 நிமிடப் பேச்சில் பல குழப்பங்கள். 

இக்கூட்டம் குறித்து புதுவையை சேர்ந்த த.வெ.க. நிர்வாகி லட்சுமணன் நம்மிடம், "என்.ஆர்.காங்கிரஸை எதிர்த்துப் பேசவில்லை, கூட்டணியிலுள்ள பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறார். அப்படின்னா பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லைன்னு தெரியவருது. புதுச்சேரி பிரச்சனைகளை பேசினார், இன்னும் அதிகமா அடுத்த கூட்டத்தில் பேசுவார்னு நினைக்கிறோம். புதுச்சேரியில் எந்த பிரச்சனையும் நடக்காம உயிர்ச்சேதமில்லாம கூட்டம் நடத்தியிருக்கோம். இதைக்காட்டி தமிழ்நாட்டில் ரோடு ஷோ நடத்தவும், கூட்டம் நடத்தவும் அனுமதி கேட்பாங்கன்னு நினைக்கிறேன்'' என்றார். 

புதுவை ரசிகர் சனாவோ, "ரங்கசாமியை விமர்சிக்கவில்லை, கூட்டணி குறித்தும் எதுவும் பேசவில்லை. அதே நேரத்தில் பா.ஜ.க.வுடனிருந்து விலகி ரங்கசாமி வெளியே வந்தால் அவருடன் த.வெ.க. கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்க லாம். என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் போய்ச் சேர்ந்தால் சரியாக வராது'' என்றார்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்து, "பொய் பொய்யாகப் பேசினார் விஜய்'' எனக் கடுமையாகக் கண்டித்தார்.

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்