கரூரில் கடந்த செப்.27ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் துயரச் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை முதன்முறையாக த.வெ.க. நிர்வாகிகள், உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில், த.வெ.க. தலைவர் விஜய், உயிரிழந்தோரில் இருவரின் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் கரூர், காந்திகிராமம் காந்தி நகரைச் சேர்ந்த தனுஷ்குமாரின் தாயார் மற்றும் அவரது சகோதரியுடன் வீடியோ காலில் விஜய் பேசியுள்ளார். இதனை தனுஷ் குமாரின் உறவினர் ஒருவர் உறுதி செய்துள்ளார். அப்போது தனுஷின் சகோதரி ஹர்ஷினியிடம், “"நான் உங்களுக்கு சகோதரனாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன். விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன்''” என்று கூறியுள்ளார். மேலும், இந்த சந்திப்பின் போது யாரும், புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல்.
அதேபோல், ஏமூர் புதூரைச் சேர்ந்த சக்திவேலிடம் (டாஸ்மாக் ஊழியர்) விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். கூட்ட நெரிசலில் இவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் மகள் தரணிகா ஆகியோர் உயிரிழந்தனர். பிரியதர்ஷினி த.வெ.க. நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், சக்திவேலிடம் வீடியோ காலில் பேசிய விஜய், “"இது ஈடுசெய்ய முடியாத இழப்பு. நான் மிகவும் வருந்துகிறேன். விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன். த.வெ.க. தேவையான உதவிகளைச் செய்யும்''’என்று கூறியதாகத் தெரிகிறது.
இரண்டு குடும்பங்களுடன் பேசும்போதும் விஜய் அதிக நேரம் மவுனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந் தோர் ஒவ்வொருவரின் குடும்பத் தாருடனும் விஜய் வீடியோ காலில் பேசுவார் என்று த.வெ.க. நிர்வாகிகள், பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களிடம் நேரில் சென்று தகவல் சொல்லி வருகின்றனர்.
கடந்த திங்களன்று, கரூர் துயரம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், உயிரிழந்த மகேஸ்வரி என்பவரின் இல்லத்திற்கு சென்று, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது "கமல் பண்பாட்டு மையம்' சார்பில் நிவாரண உதவியாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உறவினர்களிடம் வழங்கினார்.
பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், "ஊடகங்கள் வாயிலாக பல உண்மைகள் இன்று வெளிவந்துள்ளது. இது யாரையும் பாராட்டுவதற்கான நேரம் இல்லை. செந்தில் பாலாஜி எப்படி உடனடியாக வந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது அவருடைய சொந்த ஊர். அவர் எப்படி உடனடியாக வந்தார் என்று கேள்வி எழுப்புவது தவறு. அரசும், முதல்வரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதுபோன்ற கூட்டங்களை ஊரிலிருந்து ஒதுக்குப்புறமான இடங்களில் நடத்த வேண்டும். த.வெ.க. சார்பில் முன்னதாக அனுமதி கேட்கப்பட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் கூட்டம் நடந்து, ஆற்றில் மக்கள் விழுந்திருந்தால், இதைவிட அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
நான் பேசுவது மனிதம். எடப்பாடி பழனிச்சாமி உள் ளிட்டோர் பேசுவது அரசியல். இந்த நேரத்தில் அரசியல் பேசுவது தவறு. அடுத்தடுத்த மாதங்களில் அதுகுறித்து பேசலாம். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க, அனைத்துக் கட்சிகளும் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும். முதலமைச்சரும் அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்'' என்றார்.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடிகை அம்பிகா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை துருவ் விஷ்ணு இல்லத்தில் உறவினர்களை சந்தித்து நடிகை அம்பிகா ஆறு தல் தெரிவித்தார். அதேபோல், மனைவி, இரு மகள்களை இழந்த கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்த ஆனந்த்ஜோதியையும் சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்துள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இன்று கரூர் வந்துள்ளேன்.
அரசியல் கூட்டங்களுக்கு குழந்தைகளை தூக்கிக் கொண்டு செல்லக்கூடாது என்று அரசும், கட்சிகளும் அறிவுரை கூறுகின்றனர். ஆனால், அதையும் மீறி குழந்தைகளை தூக்கிக்கொண்டு செல்கின்றனர். அதற்காக அவர்களை அடித்து தடுத்து நிறுத்த முடியுமா?. இனிமேல் இப்படி நடக்கக்கூடாது. நான் கரூர் வந்துள்ளது குறித்து என்மீது எந்தச் சாயமும் பூச வேண்டாம். நான் எந்தக் கட்சியைச் சார்ந்தும் பேச வரவில்லை" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், த.வெ.க. கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், "கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோகால் மூலம் பேசி யுள்ளார். விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டு டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளோம். டி.ஜி.பி. அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்கவுள்ளோம்'' என்றார்.
விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடை யும் இல்லாத நிலையில், அவரை பின்னி ருந்து இயக்கும் பா.ஜ.க.வின் ஆலோ சனைப்படியே அனுமதி கேட்டிருக்கிறார் கள் என்றும், விஜய் கரூர் செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் தி.மு.க. அரசு மீது பழி போடலாமென்று திட்ட மிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக அரசு சார்பில் 10 லட் சம் வழங்கப்பட்டது. 8-ஆம் தேதி முதல் கட்டமாக காயமடைந்த 45 பேருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை செந்தில் பாலாஜியும் மாவட்ட ஆட்சியர் தங்க வேலும் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.