கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரை கூட்டத்தில், நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் குறித்து தமிழக மக்களின் கருத்து... சென்ற இதழின் தொடர்ச்சி...
ராஜசேகரன், உதவி பேராசிரியர். அம்மாபேட்டை, சேலம் : சரியான கட்டமைப்பு இல்லாததாலும், இளைஞர்களை வழிநடத்தத் தெரியாத தலைவனாலும் கரூரில் 41 உயிர்களை இழந்துவிட்டோம். கொள்கையின்றி ஒரு நடிகனின் பின்னால் இளைஞர்கள் சென்றதால் இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. கரூர் உயிர்ப்பலிகளுக்கு நடிகர் விஜய்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். அரசை குறை சொல்லி தப்பிக்க முடியாது. தொண்டர்களுக்கு விஜய்தான் முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ, இத்தனை உயிர்கள் பலியான பிறகும் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக பயந்து ஓடிவிட்டார். நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு, சென்னையில் காலை 8.50 மணிக்குதான் விமானம் ஏறுகிறார். இந்த சம்பவத்தில் விஜய் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து, உடனடியாக சிறைப்படுத்த வேண்டும். அரசியலிலிருந்தே அவரை அப்புறப்படுத்த வேண்டும். பா.ஜ.க. ஆட்டிவைக்கும் பொம்மைதான் விஜய். இப்படியொரு துயரம் நடந்த பிறகு அவர் மக்களுடன் நின்றிருக்க வேண்டும். மக்களிடம் குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்டிருக்க வேண்டும். அம்போ என்று விட்டுவிட்டு ஓடியிருக்கக்கூடாது.
சாமுராய் குரு, காடையாம்பட்டி, சேலம்: நடிகர் விஜய் மனித குலத்திற்கே எதிரானவர். அரசியல் ஆதாயத்திற்காக 41 பேரை மட்டுமல்ல, 4000 பேரைக்கூட பலி கொடுக்கத் தயங்கமாட்டார். இத்தனை பேர் பலியான பின்னும், அரசியல் அதிகார போதையில் அரசின் மீது பிரச்னையை திசை திருப்பிவிட்டு தப்பித்துக் கொள்வதி லிருந்தே அவர் எவ்வளவு மோசமான, பொறுப்பற்ற நபர் என்று தெரிகிறது. பிணங்களை வைத்து அரசியல் அதிகாரத்தை அடையத் துடிக்கிறார் விஜய். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த மாட்டார், பாதிக்கப்பட்ட குடும்பங் களை சந்திக்க மாட்டார். ஆனால் இந்த பிரச்னையை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவார். முதலில் விஜய் நல்ல மனநல டாக்டரை பார்த்து ஆலோசனை கேட்க வேண்டும்.
சந்திரசேகர், ஓய்வுபெற்ற ஆசிரியர், சேலம்: மக்களை சந்திப்பதுதான் விஜய்க்கு நோக்க மெனில், அவர் கிராமம் கிராமமாக சென்று அவர்களை சந்தித்திருக்க வேண்டும். கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராமதாஸ் போன்ற தலைவர்கள் அதைத்தான் ஆரம்ப காலத்தில் செய்தார்கள். கரூரில் ஒரு நடிகனுக்காகக் கூடிய கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தால் உலக அரங்கில் தமிழர்களுக்கு வெட்கக் கேட்டை ஏற்படுத்திவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை சந் திக்காமல் வீட்டிற்குச் சென்றுவிட்ட விஜய், அரசின் மீதும், முதல்வர் மீதும் பழி சுமத்துவது எந்த வகையிலும் நியாயமாகாது. தான் செய்த தவறை ஏற்காத விஜய்யை மக்களும் மதிக்கத் தேவையில்லை. மதுரை மாநாட்டில் கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது. விக்கிரவாண்டி மாநாட்டில் ரசிகர்கள் சேர்களை அடித்து நொறுக்கினர். கட்டுப்பாடும், கட்டுக் கோப்பும் இல்லாத த.வெ.க. நடத்தும் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது.
விஸ்வநாதன், கட்டடத்தொழிலாளி, வலசையூர், சேலம்: த.வெ.க. பரப்புரைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்போது எவ்வளவு பேர் வருவார்கள்? பாதுகாப்பு வசதிகள் என்னென்ன செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே திட்ட மிட்டிருக்க வேண்டும். விஜய்யை நம்பி தொண்டர்கள், ரசிகர்கள் வரும்போது அவர்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் கட்சிக்கும், விஜய்க்கும்தான் இருக்கிறது. அதன் பிறகுதான் அரசுக்கு இருக்கிறது. பழிவாங்குவதாக இருந்தால் என்னோடு மோதுங்கள் என்று முதல்வரை விமர்சித்து வீடியோ வெளியிடுகிறார். விஜய் அப்படி பேசியது தலைவருக்கான அழகல்ல. முதல்வருக்கு சவால் விடுத்து பேசியது முற்றிலும் தவறானது. அவர் நிறைய பக்குவப்பட வேண்டும்.
பிரபாகரன், வடகாடு, புதுக்கோட்டை: எங்களுக்கு கூட்டம் கூடுது பார்னு காட்டுறதுக்காக பலமணி நேரம் பச்சிளங் குழந்தைகளோடு மக்கள் சோறு, தண்ணி இல்லாம நிற்க வச்சு இப்படி ஏதுமறியாத பிஞ்சுகளின் உயிரை பறித்துவிட்டு 3 நாள் கழிச்சு எகத்தாளமாக பேசி வீடியோ வெளியிட்டது இன்னும் வேதனையாக உள்ளது. இந்த எகத்தாளப் பேச்சுக்கு பின்னால் ஒரு கூட்டம் மறைந்திருக்கிறது. அந்த கூட்டம்தான் நடிகரை நிஜத்திலும் நடிக்க வைத்து டயலாக் எழுதிக் கொடுத்திருக்கிறது. அரசியலுக்கு வரவேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. முதலில் ரசிகர் கூட்டத்தை அரசியல் கட்சி உறுப்பினர்களாக மாற்றுங்கள்.
ஈஸ்வரி -பீனா, அறந்தாங்கி: விஜய் கூட்டும் கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் அதிகம் கூடுகிறார்கள். ஆனால் எந்த இடத்திலும் கழிவறைகள் வைக்கப்படல. அந்த கூட்ட நெரிசலில் ஒரு தாய் தன் குழந்தைக்கு பசியைப்போக்க பால் கொடுக்கக்கூட முடியாமல் தவித்த தவிப்பு பெரும் கொடுமையானது. முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நகரும் கழிவறைகள் அமைத்திருக்க வேண்டும். ஆங்காங்கே தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், தண்ணீர் வசதிகளை செய்து கொடுத்திருந்தால் இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் நடந்திருக்காது.
கவியரசன் -அனிதா, நாகுடி: நடிகர் விஜய்யை பார்க்க இத்தனை கூட்டம் கூடுவதை முதல் கூட்டத்திலேயே பார்த்தவர்கள், அதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைப் பார்த்து அடுத்தடுத்த கூட்டங்களில் சரிசெய்திருக்க வேண்டும். இப்ப, 15 வருசம் முன்னால ம.தி.மு.க. தலைவர் வைகோ ஒரு மேடையில் பேசிய வீடியோ வெளியாகியிருக்கு பாருங்க. தன் தொண்டர்கள் முண்டியடிக்கும்போது அவர்களை அடித்து விரட்டி பிரச்சினை ஏற்படாமல் செய்திருக்கிறார்கள். அப்படிச் செய்ததால்தான் எந்தப் பிரச்சினையும் நடக்கவில்லை. அதை செய்யவில்லையென்றால் ஒருவர் விழுந்தால் 15 உயிர்கள் பலியாகும். அதனால்தான் தொண்டர்களை அடித்தது என்று அழகாக விளக்கம் சொல்கிறார் வைகோ. அன்று அவர் சொன்னதுதான் இன்று கரூரில் நடந்திருக்கிறது. வைகோவிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் தன் தவறுகளை உணர்ந்து, அடுத்து அந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சக்தி, திருநாவலூர்: நடிகர் விஜய் ஒரு கட்சித் தலைவராக வெளியே வந்துள்ளார். சினிமாவில் பார்த்த அவர் எப்படியிருப்பார் என்பதை பார்ப்பதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆவலாக வருவார்கள். இது எதார்த்தம். இப்படிப்பட்ட கூட்டங்களை ஒருங்கிணைக்கும் அந்த கட்சியின் முன்னோடி கள்... கூட்டம் எவ்வளவு வரும், அவர்கள் பத்திரமாகக் கலைந்து செல்லவதற்கு ஏற்ற இடம்தானா? என்பதை முன்கூட்டியே ஆய்வுசெய்து, உரிய இடத்தை தேர்வு செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட இடத்தை ஒதுக்குவதற்கு காவல்துறையும் அனுமதிக்க வேண்டும். இப்படி திட்டமிடல் சரியாக இல்லாத காரணத்தினால் பெரும் அசம்பாவிதத்தில் 41 உயிர்கள் பறிபோனது.
வீரம்மாள், கூ.கள்ளக்குறிச்சி: பொதுவாக அரசியல் கட்சி கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், போராட்டங்கள் போன்றவற்றுக்கு செல்பவர்கள், குழந்தைகளை, சிறுவர்களை அழைத்துச்செல்வது தேவையா? நமது உயிரைவிட அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கியமானவர்களா? இயற்கை பேரிடர் காலங்களில் வேளாண் பயிர்கள் நாசமானது. இதற்கெல்லாம் நிவாரணம் கேட்டால் அரசு தயங்குகிறது. ஆனால் இதுபோன்ற அசம்பாவிதத்தில் இறப்ப வர்களுக்கு பல லட்சங்களை வாரிக் கொடுக்கின்றன. அரசியல் கட்சிக் கூட்டங்களில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கில் கூடநிவாரணம் கொடுக்கட்டும். தேடிச் சென்று மரணத்தைத் தேடிக்கொள்பவர்களுக்கு அரசு நிவாரணம் கொடுப்பது குறித்து யோசிக்கவேண்டும்.
சின்னப்பொண்ணு, கெடிலம்: அரசியலில் அனுபவமில்லாத நடிகர் விஜய் போன்றவர்கள், நானே ராஜா, நானே மந்திரி என்று தான்தோன்றித்தனமான எண்ணத்துடன் கட்சியை நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட வர்கள் அரசியல் அனுபவம் உள்ளவர்களை தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக் கொள்வதில்லை. அப்படிச் செய்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத படி வழிகாட்டியிருப்பார்கள். நடிகர் விஜய்யின் நான் என்ற ஆணவமே 41 உயிர்களை பலிவாங்கியுள்ளது. தனி மரம் தோப்பாகாது. ஒரு கட்சியை வழி நடத்துவதென்பது தனி மனிதனுக்கு சாத்தியமில்லாதது. இதை விஜய் போன்றவர்கள் உணர வேண்டும்.
அஞ்சலை, தொளார்: கரூரில் இறந்துபோன 41 பேர்களும் சாதாரண ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களது மரணம் அவர்களது குடும்பத்தில் எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கும். எத்தனை லட்சங்கள் நிவாரணமாக வழங்கினாலும் அந்த குடும்பத்தை சேர்ந்த வருங்கால சந்ததிகளின் இழப்பை யாரால் ஈடுசெய்ய முடியும்? கூட்டத்தில் சிக்கி கொத்துக்கொத்தாக இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன அரசாங்கம் சட்டம் போட்டு கட்டுப்பாடுகளை கொண்டுவருவது ஒரு பக்கம் இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் கட்டுப் பாடோடு இருக்கவேண்டும்.
இளமதி, சென்னை: கரூர் சம்பவத்தைப் பற்றி சொல்லுனும்னா, இன் னும் இந்த மக்கள் அரசியல்படுத்தப்படவில்லை என்றுதான் சொல்லணும். 41 பேர் இறப்பில் இது வரை விஜய்யை அழைத்து விசாரணை கூட செய்யவில்லை. விஜய்யை விசாரித்து, அவர்மீது தவறில் லைன்னு வந்தால் அவருக்கும் அவர்சார்ந்த தொண்டர்களுக்கும்தானே நன்மை. அப்படியில்லா மல் அவர் மட்டும் பாதுகாப்பாக இருக்கும் சூழ்நிலையை பார்த்தால், அவர்மீது சந்தேகத் தைத்தான் எழுப்புகிறது. இதைத்தான் நக்கீரன் ஆசிரியர் அவர்கள் ‘"விஜய்க்கு ஒய் பாது காப்பு, மக்களுக்கு மட்டும் சவக் கிடங்கா?'’ என்று பேசியிருந்தார். நாங்களும் அதேதான் கேட்கிறோம்.
மாநிலக் கல்லூரி மாணவி ஹேமா, சென்னை: ஆளுங்கட்சி மீது குற்றஞ்சுமத்தும் விஜய், ஏன் தனது தவறு குறித்து கொஞ்சங்கூட யோசிக்காமலிருக்கிறார்? இவர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்லாது நடிகராகவும் இருப்பதால் கூட்டம் கூடுவது இயல்பாகவே உள்ளது. சரியான நேரத்துக்கு வராமல் காலதாமதம் செய்தால் கூட்டம் குவியத்தான் செய்யும். பேரறிஞர் அண்ணா இறந்தபோது கூடிய கூட்டத்தை விடவா இந்த கூட்டம் இருந்தது? அப்போதெல்லாம் நடக்காத அசம்பாவிதம் இப்போது மட்டும் எப்படி?
கல்லூரி மாணவி கோபிகா, சென்னை: நானும் விஜய் ரசிகைதான். அதற்காக எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொஞ்ச வயதுடையவர்கள். அவர்களுக்காக வருத்தப்படாமல் மூன்றுநாள் கழித்து அறிக்கை விடுகிறார். இந்த கூட்டத்தையே கட்டுப்படுத்தத் தெரியாத நீங்கள் தமிழ்நாட் டை ஆள நினைப்பது எப்படி நியாயம்?
கல்லூரி மாணவர் முத்துகணேஷ், சென்னை: விஜய்யோடு வரும் இளைஞர் களை அரசியல்படுத்தி வழிநடத்தாமல் இருப்பதுதான் இதுபோன்ற துயரங்களுக்கு முதல் காரணம். இந்த சம்பவம் நடந்ததும் அவசர, அவசரமாக சென்னை திரும்பும் போது விமான நிலையத்திலேயே பத்திரிகையாளர்களை சந்தித்து வருத்தம் தெரிவித்திருந்தால்கூட பரவாயில்லை. மூன்று நாட்களுக்குப் பின் ஆளுங்கட்சி மீது பழிபோடுகிறார். பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்காமல் இப்போது வசனம் பேசுகிறார். இதைத்தான் நக்கீரன் ஆசிரியரும் பேசி கேள்வி எழுப்பியுள்ளார் .
சென்னை பல்கலைக்கழக மாணவர் ரவிசந்திரன், சென்னை: கரூர் நிகழ்ச்சி போன்றே ஏற்கனவே நடந்து முடிந்த திருச்சி, நாமக்கல் போன்ற கூட்டத்திலும் மயக்கம்போட்டு விழுந்திருக்கிறார்கள். கூட்டம் நடக்கும்முன்பே மாநில, மாவட்ட பொறுப்பாளர்களை அழைத்துப் பேசி திட்டமிட்டு செயல்பட்டிருக்க வேண்டும். அதில் தவறியதால்தான் இவ்வளவும். விஜய்யை கைது செய்திருந்தால் இத்தனை உயிர் போனதன் வலியை அவர் உணர்ந்திருக்க முடியும்.
(மக்கள் குமுறல் தொடரும்)
-எஸ்.பி.எஸ்., இரா.பகத்சிங், அருண்பாண்டியன், இளையராஜா