"ஹலோ தலைவரே, அரசியல் பரபரப்புகளுக்கு நடுவில் த.வெ.க. நிர்வாகிகள் செங்கோட்டையன் மீது ஏகக்கடுப்பில் இருக்கிறார்கள்.''”

Advertisment

"என்னப்பா சொல்றே?''”

"தங்கள் தலைவரான நடிகர் விஜய்யை, தன் பிடியில் செங்கோட்டையன் வைத்துக்கொண்டு, தன் விருப்பத்திற்கு ஆட்டி வைக்கிறார்னு த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகள் கடுப்பில் இருக்காங்க. எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி யான செங்கோட்டையன், ஜெ. காலத்தில் முக்கிய இடத்திற்கு வர ஆசைப்பட்டார். ஆனால் அவருடைய குடும்பப் பிரச்சினை மற் றும் செங்ஸின் சில நடவடிக்கைகளை அறிந்த ஜெ.,’ அவருக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமல் தூரத்திலேயே வைத்திருந்தார். அப்போது கிடைக்காத மரியாதையை விஜய் மூலம் அரசியலில் பெற நினைக்கும் செங்ஸ், அவரைத் தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டு ஆட்டிவைக்கிறார் என்பது அவர்களது குற்றச்சாட்டுகள். நடிகர் விஜய்யோ, அரசியல் அனுபவஸ்தர் என்ற கோணத்தில் செங்கோட் டையனை பார்த்துவருகிறார்.''” 

Advertisment

"சரிப்பா, அடுத்ததாக நடிகர் விஜய், சேலத் தில் தனது கூட்டத்தை நடத்தி எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கப்போகிறாராமே?''”

"கொங்கு மண்டல அரசியலில் மீண்டும் தலையெடுக்க வேண்டும் என்பது செங்கோட்டையனின் ஆசை. அதனால் விஜய்யை வைத்து ஈரோட்டில் பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்தி, தன் இமேஜை உயர்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜய், அடுத்த கூட்டத்தை எங்கே நடத்தலாம் என்று அவரிடமே ஆலோசனை கேட்டாராம். செங்கோட்டையனோ, எடப்பாடிக்கு அதிர்ச்சிகொடுக்கும் வகையில், அவரது சொந்த மாவட்டமான சேலத்தில், ஈரோட்டைவிட பிரமாண்டமாக நடத்தலாம் என்று யோசனை சொல்லியிருக்கிறார். இதன்மூலம் எடப்பாடியை பழிவாங்க வேண் டும் என்பது செங்கோட்டையனின் திட்டமாம். விஜய்யும் இதை ஏற்றுக்கொண்டாராம்.''”

Advertisment

"இந்த நிலையில் தங்கள் கட்சியின் சீனியர்களிடம் விஜய் கடுமையாக நடந்து கொண்டார் என்றும் சொல்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஒவ்வொரு கூட்டத்திலும் விஜய் என்ன பேசவேண்டும் என்று ஒரு டீம் பேச்சைத் தயார்செய்து கொடுக்கிறது. அதை சினிமா வசனம்போல மனப்பாடம் செய்துகொண்டு, ஏற்ற இறக்கத்தோடு பேசிவருகிறார் விஜய். இந்த நிலையில், ஈரோடு கூட்டத்தில் விஜய் பேசிய ரெடிமேட் பேச்சை யாரோ லீக் செய்து விட்டார்களாம். முன்கூட்டியே தன் பேச்சு லீக் ஆனதில் டென்சனான விஜய், புஸ்ஸி ஆனந்த் உட்பட கட்சியின் முன்னணி  நிர்வாகிகளிடம் இதுகுறித்து கடுமையாக விசாரணை நடத்தியிருக்கிறார். தன் பேச்சைக் கசிய விட்ட கருப்பு ஆடு யார் என்று அவர் தேடுகிறாராம். அதனால் பனையூர் தரப்பு அதிர்ந்து போயிருக்கிறதாம்.''”

"சரி, காங்கிரஸுக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட அமலாக்கத்துறைக்கு, நீதிமன்றம் சரியான அடி கொடுத்திருக்கே?''”

rang2

"உண்மைதாங்க தலைவரே, காங்கிரஸின் இமேஜை குறைக்கும் திட்டத்தோடு சோனியா மற்றும் ராகுல்காந்திக்கு எதிராக, "நேஷனல் ஹெரால்ட்' வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. இது சட்டவிரோதமானது என்று சமீபத்தில் டெல்லி ரோஸ் அவென்யூ   நீதிமன்றம் அழுத்தமாகத் தீர்ப்பளித்து, அமலாக்கத்துறையின் போக்கை பகிரங்கமாகக் குட்டுவைத்துக் கண்டித்திருக்கிறது. இதன்மூலம்  அமலாக்கத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் மோடி அரசுக்கு சம்மட்டி அடி நீதித்துறையால் கொடுக்கப்பட்டி ருக்கிறது. இதில் உற்சாகமான சோனியா, இந்தத் தீர்ப்பை, தேசம் முழுவதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி மக்களிடம் கொண்டு செல்லுங்கள்னு கட்சியின் சீனியர்களுக்கு அறிவுறுத்தி யிருக்கிறார்.''”

"சென்னையில் கூட இது குறித்து பத்திரிகையாளர்களிடம் ப.சி. விளக்கியிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே... சென்னையில் பத்திரிகையளர்களைச் சந்தித்த காங்கிரஸின்  சீனியர்களில் ஒருவரான ப.சிதம்பரம், "பணப் பரிமாற்றத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்திருந்தால்தான் குற்றம். அப்படி குற்றம் நடந்திருந்தால் எப்.ஐ.ஆர். முறைப்படி பதிவு செய்திருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை அதில் தலையிட முடியும். அப்படியிருக்கையில், "நேஷனல் ஹெரால்ட்' விவகாரத்தில் எப்.ஐ.ஆர். எந்த ஒரு காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்படவில்லை. இதனை பிடித்துக்கொண்ட நீதிமன்றம், எப்.ஐ.ஆர். போடப்படாத நிலையில் அமலாக்கத்துறையின் தலையீடு சட்ட விரோதமானது. குற்றப்பத்திரிகை குறித்து  அமலாக்கத்துறையின் வாதங்களை ஏற்கமுடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. இனியாவது மத்திய அரசு, இத்தகைய பழி வாங்கும் போக்கை கைவிட வேண்டும்'’என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.''”

"இந்த நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையைக் காணோம்னு கட்சி நிர்வாகிகள் தேடிக் கிட்டிருக்காங்களே?''”

"பரபரப்பான இந்த நேரத்தில் செல்வப்பெருந்தகை எமிரேட்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து துபாய் வழியாக லண்டனுக்குப் பறந்திருக்கிறாராம். அங்கே ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு சென்னை திரும்புவார் என்கிறது அவர் தரப்பு. அவர் லண்டன் செல்வதை யாரிடமும் சொல்லாததால், காங்கிரஸின் மூத்த மற்றும் முன்னாள் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என பலரும், செல்வப்பெருந்தகை எங்கே? என்று கடந்த 3 நாட்களாக தேடிக் கொண்டிருந்தார்கள். அவர் 2025 ஜனவரி முதல் தற்போது வரை 8 முறை லண்டனுக்கு சீக்ரெட் ட்ரிப் அடித்திருக்கிறார் என்றும், காங்கிரஸ் தலைவர்களில் இவரைப் போல இந்த வருடத்தில் 8 முறை லண்டன் சென்றவர்கள் யாரும் இல்லை என்றும் மத்திய உளவுத்துறை தங்களின் மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறதாம். ஏகக் கண்காணிப்பில் இருக்கிறாராம் செல்வப்பெருந்தகை.''”

"ஊட்டி தி.மு.க.வினர் உதயநிதியின் பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடி யிருக்கிறார்களே?''”

"முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் மாற்றுத்திறனாளிகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்திவருவது ஊரறிந்த ரகசியம். எனவே, அவர்கள் மனம் மகிழும் வகையில் ஊட்டி நகர தி.மு.க.வினர்  உதயநிதியின் பிறந்தநாள் விழாவை, மாற்றுத்திறனாளிகளுக்கான விழாபோல் கொண்டாடியிருக்கிறார்கள். குறிப்பாக ஊட்டி நகர தி.மு.க. செயலாளரான ஜார்ஜ், 350 மாற்றுத்திறனாளிகளுக்கும்,  மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைத் தடபுடலாகச் செய்திருந்தார். தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும்  நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மைக் பிடித்த அவர்,  ஊட்டி நகரச் செயலாளர் ஜார்ஜ் போல, மக்கள் நலன் சார்ந்த உதவிகளை  நம்  தி.மு.க. நிர்வாகிகள் அங்கங்கே முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.''”

"ராமநாதபுரம் கடல் பகுதியில் கஞ்சா எண்ணெய் பிடிபட்டிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே... திருச்சி சுங்கத்துறை அலுவலகத்துக்கு வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில்  சுங்கத்துறையின் உளவுப்பிரி வும்,  மண்டபம் கடலோர காவல் படையும் இணைந்து 20ஆம் தேதி நடத்திய சோதனையின்போது கடலோரத்தில் சில சிறிய படகுகள் ஒதுங்கி நிற்பது தெரியவந்தி ருக்கிறது. அதில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அவற்றில் 9 பாக்கெட்டுகளில் 9.400 கிலோ கஞ்சா கலந்த ஹாஷிஸ் எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றின் மதிப்பு ரூ.1.17 கோடி என மதிப்பிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்தப் படகுகள் யாருடையவை? கடத்தல் பேர்வழிகள் யார்? என்றெல்லாம் தீவிரமாகத் துருவி வருகின்றனர்.''

"எடப்பாடி கவனத்துக்குப் போகாமலே, வேலுமணி அவரது தொகுதியில் பொதுக்கூட் டம் நடத்தியிருக்கிறாராமே?''”

rang1

"அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் எடப்பாடி விஷயத்தில் ஏமாற்றமடைந்து வருகிறார்கள். எடப்பாடியின் நடவடிக்கை களால் அ.தி.மு.க. ஜெயிக்கிறதோ,…இல்லையோ… நாம் எப்படியாவது ஜெயித்து எம்.எல்.ஏ. ஆகிவிடவேண்டும் என முடிவு செய்திருக் கிறார்கள். அதற்காக தொகுதியில் வரிந்துகட்டி வேலையில் இறங்கியிருக்கிறார்கள். அப்படித்தான் வேலுமணி அவரது தொகுதியில் மாநாடு போல மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார். எடப்பாடியைக் கூப்பிடாமல் நடந்த இந்தப் பொதுக் கூட்டத்துக்கு பத்தாயிரத்துக்கும் அதிகமான வர்களைத் திரட்டியிருக்கிறாராம்.''”

"அ.தி.மு.க.வும் இளைஞரணி மாநாட்டை நடத்தும் முடிவிலிருக்கிறதாமே?''”

"நிஜம்தான் தலைவரே, தி.மு.க. சமீபத்தில் திருவண்ணாமலையில் பிரம்மாண்டமா இளைஞரணி மாநாட்டை நடத்தியது. மோடி, அமித்ஷா என பலரை அழைத்து பா.ஜ.க. கூட்டம் நடத்துகிறது. இதில் நாம் மாநாடு நடத்தாமலிருந்தால் நல்லதல்ல என யோசித்த எடப்பாடி உள்ளிட்ட பெருந்தலைகள், விரைவில் இளைஞரணி மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.''”

"காவல்துறையில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம் குறித்து செய்தி ஏதும் இருக்குதா?''”

"தலைவரே, சென்னை கமிஷனர் அருண், சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.பி.யாகவும், ஆவடி கமிஷனர் சங்கர் தலைமையிட அல்லது நிர்வாகப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாகவும், தாம்பரம் தினேஷ் மேடக் அமலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாகவும், திருச்சி கமிஷனர் மதுரை கமிஷனராகவும், தெற்கு மண்டல ஐ.ஜி.யான பிரேம்ஆனந்த் சின்கா, தாம்பரம் கமிஷனராகவும், தற்போது மதுரை கமிஷனராக இருக்கும் லோகநாதன், மேற்கு மண்டல ஐ.ஜி. அல்லது கோவை கமிஷனராக நியமிக்கப்படவும் கூடுதல் வாய்ப்புகள் இருக் கிறதா சொல்றாங்க. அதேபோல கோவை மாவட் டத்தின் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பாலகிருஷ் ணனும், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக அன்புவும், ஆவடி கமிஷனராக செந்தில்குமாரும் நியமிக்கப்படுவார்கள்.  திருச்சி, விழுப்புரம் செங்கல்பட்டு உட்பட மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் மாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. இதில் செங்கல்பட்டு எஸ்.பி.யாக கார்த்திக்கும், திருநெல்வேலி எஸ்.பி.யாக கோபியும் நியமிக்கப்படலாம். சென்னை தெற்கு இணை கமிஷனராக தர்மராஜனும், திருநெல்வேலி கமிஷனராக மணிவண்ணனும் நியமிக்கப்படலாம் என்கிறார்கள்.''”

"எல்லா கட்சிகளைப் போல த.வெ.க.வும் தங்களுக்குன்னு தனியா ஒரு டி.வி. சேனலைக் கொண்டுவருதாமே?'' 

"உங்க காதுக்கும் தகவல் வந்துடுச்சா. என்னதான் விஜய்யின் த.வெ.க. செய்திகளை பல சேனல்கள் ஆர்வமா ஒளிபரப்பினாலும், தங்க ளுக்குன்னு ஒரு சேனல் இருந்தா அது பலம்தான்னு விஜய் நினைக்கிறாராம். அதுக்கேத்த மாதிரி ஒரு சேனலை விஜய் தரப்பில் விலைபேசிக்கிட்டு இருக்காங்களாம். நினைச்ச மாதிரி டீல் முடிஞ்சா பொங்கலுக்கு அப்புறம், விஜய் சேனலா அந்த டி.வி. சேனல் இயங்கும் என்கிறார்கள்.''” 

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கோவை மேட்டுப்பாளையத் தைச் சேர்ந்த சௌந்தர் என்பவர் தரப்பிலிருந்து வெளியான தகவலை நம்பி, நடிகர் ரஜினி செய்துவரும் நலத்திட்ட உதவித் தொகைகளில், அவரது ராகவேந்திரா திருமண மண்டப ஊழியர்கள் கைவைப்ப தாகப் போனமுறை நாம் பேசிக்கிட்டோம். ஆனால் அந்த செய்தியில் எந்த ஒரு உண்மை யும் இல்லையாம். காரணம், ரஜினியின் நிர்வாகத்தில் இப்படியெல்லாம் ஏடாகூடம்  நடக்க அவர் கொஞ்சமும் இடம் தரமாட்டா ராம். அப்படியிருக்க, இப்படி ஒரு உண்மைக் குப் புறம்பான தகவலைக் கசியவிட்டிருக்கிறா ராம் மேட்டுப்பாளையம் சௌந்தர். கடந்த 10 வருடத்துக்கு முன்பே ரஜினி ரசிகர் மன் றத்தை விட்டு சௌந்தரை நீக்கிட்டாங்களாம். அந்த பழைய நெருப்புதான் இப்போது அவர் தரப்பிலிருந்து புகைஞ்சிருக்குன்னு, அந்த செய்தியை ராகவேந்திரா மண்டபத் தரப்பி லிருந்தே அழுத்தமாக மறுக்கிறாங்க.'' 


____________
இறுதிச் சுற்று!

* பொங்கல், திருவள்ளுவர் தினம் அன்று இந்திய பட்டயக் கணக்காளர் கழகம் தேர்வுகளை அறிவித்துள்ளது.

* சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை செய்தது. குழுவில் 3 அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

* எஸ்.ஐ.ஆர்.  மூலமாக தமிழ்நாட்டில் 7.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை, 39,000 பேர் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்.