"பள்ளிக்கூட அளவில்  இடைநிற்றல்  (School Dropout) அதிகம் ஆனது யாரோட ஆட்சியில?'' என்று ஈரோடு கூட்டத்தில் கத்திக் கத்தி கேள்வி எழுப்பினார் த.வெ.க. விஜய். 

Advertisment

இந்தக் கேள்வியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது "விஜய்க்கு பக்கத்தில் மேடையில் நின்றிருந்தாரே அந்த அண்ணன் செங்கோட்டையன் ஆட்சியிலதான் இடைநிற்றல் அதிகம் ஆனது'' என்று சிரித்துக்கொண்டே சொல்லி, விஜய் ஒரு காமெடி பீஸ் என்று அம்பலப்படுத்திவிட்டார்.   

Advertisment

"அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் காலத்தில் (2017-18) பள்ளி இடைநிற்றல் விகிதம் 16% ஆக இருந்தது. தற்போது தி.மு.க. ஆட்சியில் அது 7.7% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரங்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது. விஜய் அரதப்பழசான செய்திகளை வைத்துக்கொண்டு  பேசுகிறார். விஜய் இன்னும் கொஞ்சம் அப்டேட் ஆகணும்''”என்று அமைச்சர் கலாய்த்துத் தள்ளிவிட்டார். 

விஜய் அம்பலப்பட்டது போதாது என்று விஜய்க்கு சொம்படிக்கும் ஒரு பத்திரிகை "பாழடையும் பள்ளிக்கல்வித் துறை' என்று வயித்தெரிச்சலைக் கொட்டி இருக்கிறது. ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளுக்கு முட்டுக்கொடுக்கும் சில புரோக் கர்களும், இந்த பொய்ப் பிரச்சாரத்துக்கு ஒத்து ஊதுகின்றனர்.  பள்ளிக்கல்வித்துறையில் என்னதான் நடக்கிறது? என்று துறை சார்ந் தவர்களிடம் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இதோ.

Advertisment

education2

மாணவர் சேர்க்கை விகிதம்

தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளில், அவர் கள் பள்ளி செல்லும் வயதை அடையும்போது தொடக்கப் பள்ளிகளில் (Classes 1#5)சேர்க்கப்             படும் விகிதம் இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக உள்ளது. கிட்டத்தட்ட நூறு சதவீத Universal Enrollment இலக்கை தமிழ்நாடு எட்டியுள்ளது. 2019-ஆம் ஆண்டில் இந்த விகிதம் 99.6%  ஆக இருந்தது, இது 2024-ல் 99.9% ஆக உயர்ந்துள்ளது. 

மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களின் சதவிகிதம் 

2019-ல் தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களின் சதவிகிதம் 81.3% ஆக இருந்தது. இது 2024-ல் 89.2% ஆக உயர்ந்தது. பீகாரில் 2024-ல் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் சதவிகிதம் வெறும் 65% என்பதுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். 

பெண் கல்விக்கு முக்கியத்துவம் 

2019-ல் தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவிகளின் சதவிகிதம்  89.4% ஆக இருந்து, 2024-ல் 95.6% ஆக அதிகரித்துள்ளது.  இது பெண் கல்விக்கு தமிழ்நாடு  தரும் முக்கியத் துவத்தை நிரூபிக்கிறது. 

education1

அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் மாணவர்கள்

குஜராத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 65.5% ஆக இருக்கும் மாணவர் சதவீதம், மேல்நிலைப் பள்ளிகளில் 36.6% ஆகக் குறை     கிறது. இதேபோல், மகாராஷ்டிராவில் 49.4%-லிருந்து 23.6% ஆகக் குறைகிறது. தமிழ்நாட்டில்  அரசு தொடக்கப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் சதவீதம் 44.4% ஆக உள்ளது. இது, நடுநிலைப் பள்ளிகளில் 48.6% ஆகவும், உயர்நிலைப் பள்ளிகளில் 51.1% ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 49.1% ஆகவும் ஒரு நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது. இது, தனியார் பள்ளி மாணவர்கள்  கூட, உயர் வகுப்புகளில்  சேருவதற்கு அரசுப் பள்ளிகளைத் தேடி வருவதைக் காட்டுகிறது. 

மாணவர்- ஆசிரியர் விகிதம் 

தொடக்கக்கல்வி அளவில் குஜராத்தில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். அகில இந்திய அளவில் 26 மாணவர்களுக்கு ஒரு ஆசிரி யர் உள்ளார். தமிழ்நாட்டில் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். இது மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனிப்பு மற்றும் தரமான கல்வியை உறுதி செய்கிறது.

education3

சமச்சீர் கல்வி முறை

2010இல் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறை, அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை, ஒரே பாடத்திட்டத்தின் கீழ் வழங்குவதை உறுதி செய்கிறது. இது மாநிலம் முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகல்வியை ஒருங்கிணைத்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு இடைவெளியைக் குறைத்தது.

பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்

பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களை மாற்றி, புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டுதல், அரசு பள்ளிகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் நவீனமயமாக்குதல், நவீன நூலகங்கள் உருவாக்குதல் ஆகியவற்றுக்காக பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்துக்கு  ரூ.7,500 கோடி ஒதுக்கப்பட்டு,  பெருமளவு பணிகள் நிறைவேறியுள்ளன. பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களுக்கு அருகே மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புக்கள் அமைக்க மீண்டும், மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளபோதும் ஓரிரு எதிர்பாராத விபத்துக்கள் நடந்ததை பூதாகரமாக்க முயற்சிப்பவர்களின் நோக்கம் தவறானது.

ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள் 

தமிழகத்தில் உள்ள 22,931 அரசு தொடக்கப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி 2025 ஜனவரி மாதம் முழுமையாக நிறைவடைந்தது. உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 8,200 பள்ளிகளில் 519 கோடி செலவில் கணினி ஆய்வகங்கள்    (Hi-Tech Labs)அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 10-20 கணினிகள், இணைய வசதி உள்ளன.

education4

கற்றல் திறனை மேம்படுத்தும் திட்டங்கள்

கணிதத்தின் மீதான பயத்தை குறைத்து, மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு "மகிழ் கணிதம்' திட்டம் என்ற  புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் பொருள் புரிந்து படிக்கவும், அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் திறன்பெற "எண்ணும் எழுத்தும்' திட்டம் பெரும் பங்காற்றுகிறது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கவும், கற்றல் திறன்களை மேம்படுத்தவும் "வாசிப்பு இயக்கம்' திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மணற்கேணி செயலி 

தமிழ்நாட்டில் கல்வியை ஜனநாயகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு புதுமையான டிஜிட்டல் கல்வி முயற்சி "மணற்கேணி செயலி'.  மொத்த பதிவிறக்கங்கள் (பர்ற்ஹப் உர்ஜ்ய்ப்ர்ஹக்ள்) ஒரு மில்லியனுக்கும் மேல் உள்ளன. இந்த செயலி, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை காணொலிகள் மூலம் சுவைபடக் கற்றுத்தருகிறது. அறிவியல் சிந்தனை, தன்னம்பிக்கை, குறிக்கோள் நிர்ணயம், கற்றல் உத்திகள், பொது அறிவுத் தகவல்கள் போன்ற வற்றையும் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது. 

கலைத்திருவிழா

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டுவருவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலம் "கலைத்திருவிழா' நடத்தப்படுகிறது. 1 முதல் 12-ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் தன்னம்பிக்கை, படைப்பாற்றல், மற்றும் குழு ஒருங் கிணைப்பு திறன்களை மேம்படுத்துதல், போன்றவை முக்கிய அடிப்படைகளாக பின்பற்றப்படுகின்றன.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

இத்திட்டம், தொடக்கப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும், பள்ளி வருகையை அதிகரிக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும், வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் சுமையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பன்னாட்டு கல்விச் சுற்றுலா

மாணவர்களின் கல்வி மற்றும் இணைப் பாடத்  (Extracurricular) திறமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கு சர்வதேச அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022 முதல் 2025 வரை சுமார் 150 மாணவர்கள் தென் கொரியா, சிங்கப்பூர்,  மலேசியா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவிற்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனர்.

கனவு ஆசிரியர் திட்டம்

"கனவு ஆசிரியர்' திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய முயற்சியாகும். உலகளாவிய கல்வி முறைகளைப் புரிந்துகொள்ள திறன்மிக்க ஆசிரியர்கள், ஜெர்மனி, ஆஸ்திரியா, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

மாதிரிப் பள்ளிகள் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயண அனுபவங்களை அடிப்படையாக கொண்டு  மாதிரிப் பள்ளிகள் (Model Schools)திட்டம் தொடங்கப்பட்டது. மாதிரிப் பள்ளிகள் திட்டம், ரூ.960 கோடி மதிப்பீட்டில், 38 மாவட்டங்களில் 38 பள்ளிகளை உருவாக்கி, 15,200 மாணவர்களுக்கு உயர்தரக் கல்வி வழங்கி வருகிறது. இது பின்தங்கிய குடும்பங்களின் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது. 

தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக்கொள்கை

2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை, தேசிய கல்விக்கொள்கை (NEP) 2020-க்கு மாற்றாக உருவாக்கப்பட்டது. NEP-யின் 5+3+3+4 மாதிரியை ஏற்காமல் பாரம்பரிய அமைப்பு (1-12 வகுப்புகள்) தக்க வைத்தல், மூன்று மொழி நிராகரிப்பு, தமிழ் கட்டாயம், திறன் வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தும் மாநிலக் கல்விக் கொள்கை, உடனடியாக அமலுக்கு வந்தது.

தமிழ்நாடு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கப் பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் 2020-21ஆம் நிதியாண்டிற்கான  நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்வி துறைக்கு அளிக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு 34,181.73 கோடி. தமிழ்நாடு அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்வித் துறைக்கு அளிக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு: ரூ.46,767 கோடி. 

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை 

அரசுப்பள்ளி கட்டடங்கள் அனைத் தும் ஏன் புதிதாகக் கட்டப்படவில்லை என் றும், பகுதி நேர ஆசிரி யர்கள் அனைவரும் ஏன் நிரந்தரமாக்கப்படவில்லை என்றும் கேள்விகளை எழுப்புகிறவர்கள், கல்விக்கான நிதி வழங்குவதில்  ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை பற்றி வாய்திறக்க மறுப்பது வினோதமாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழ் நாட்டிற்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (SSA) கீழ் விடுவிக்க  வேண்டிய நிதி 3548.22 கோடி ரூபாயை இதுவரை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது ஒன்றிய அரசு. இந்தித் திணிப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொண் டால்தான் அந்த நிதியை விடுவிப்போம் என்று பிளாக்மெயில் செய்து பொதுவெளியில் பேசியுள்ளார் ஒன்றிய கல்வி அமைச்சர். இது, முன்பு ஒன்றியத்தில் ஆட்சி செய்த எந்தக் கட்சியும் செய்யாத அவலம் நிறைந்த - அராஜகமான நடவடிக்கையாகும். 

தமிழ்நாடு ஒரு ரூபாய் வரி கட்டினால், அதில் வெறும் 29 காசுகள்தான் ஒன்றிய அரசு திருப்பித் தருகிறது. ஆனால் உ.பி. ஒரு ரூபாய் வரி கட்டினால், உ.பி.க்கு 2.75 ரூபாய் திருப்பித் தருகிறது. பீகார் ஒரு ரூபாய் வரி கட்டினால், பீகாருக்கு 7 ரூபாய் திருப்பித் தருகிறது. இந்த ஓரவஞ்சனையால்தான் தமிழ்நாட்டின் கல்வித் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை திட்டங்களும் பாதிக்கப்படு கின்றன.

இந்த ஓரவஞ்சனைக்கு எதிராக விஜய் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களோ அல்லது அவதூறு பரப்பும் புரளி வித்தைக் காரர்களோ வாய் திறப்பதே இல்லை.  இந்த கெடுமதியாளர்களுக்கு தமிழ் நாட்டு மக்கள் ஒரே  குரலில் சொல்ல வேண்டிய பதில்  : "கல்வியில் சிறந்த தமிழ்நாடு பற்றி பொய் பரப்புவோரை புறக்கணிப்போம். கல்வியே தமிழ்நாட்டு இளைஞர்களின் ஒரே நம்பிக்கை!