கில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரான லீடர் அறிவழகனை கேரள மாநில காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளராக அண்மையில் நியமித்திருக்கிறார் ராகுல்காந்தி. காங்கிரசின் தேசிய அரசியலில் பல்வேறு முக்கிய உயரிய பொறுப்புகளை வகித்தவர். சமீபகாலமாக தமிழக காங்கிரசிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். 

காங்கிரசின் தேசிய அரசியலிலிருந்து, தமிழக அரசியலில் உங்களின் பார்வை திரும்பியிருப்ப தற்கு ஏதேனும் பிரத்யேக காரணம் இருக்கிறதா? 

மிக முக்கியமான 10 மாநிலங்களில் பல்வேறு படிநிலைகளில் பொறுப்புகளை வகித்திருக்கிறேன். தற்போது கட்சி யின் தேசிய செய லாளர். கேரள மாநிலத்தின் மேலிட பொறுப் பாளர். கேரளா வில் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதே எனது இலக்கு! தமிழ்நாட்டுக்கும் தேர்தல் வருவதால் காங்கிரசின் வெற்றிக்கு உழைக்கவேண்டும் என்பது எனது உந்துதல்!

Advertisment

ராகுல்காந்தியின் நம்பிக்கைக்குரியவராகவும் அவரின் முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் எப்படி உயர்ந்தீர்கள்? 

எந்த அரசியல் பின்புலமும் எனக்கு இல்லை. ஆனால், நேர்மையும் தூய்மையும் கடும் உழைப்பும் பொதுவாழ்க்கையில் இருந்தால், அரசியலில் உயரிய பொறுப்புகளுக்கு வரலாம் என்பதற்கு எனது அரசியல் வாழ்க்கை ஒரு உதாரணம். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மிகச் சிறந்த இளம் தலைவர்கள் 100 பேரை கண்டறிந்து 2006-ல் தேர்வு செய்தார் ராகுல்காந்தி. அவருடன் அவரது அரசியலை முன்னெடுத்துப் பயணிக்க இந்த தேடுதலை நடத்தினார். அந்த 100 பேரில் தமிழகத்தில் நான் மட்டுமே தேர்வு செய்யப்பட்டேன். ஒவ்வொருவருக்கும் ஒரு அசைன்மெண்ட் கொடுத்தார் ராகுல். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸை மிகமோசமான நிலையில் வைத்திருந்தனர். அங்கு புதிதாக ஒரு மாவட்ட தலைவரை உருவாக்க வேண்டும், மாவட்டத்தில் அடங்கிய தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்களுக்கான தகுதியானவர்களை கண்டறிய வேண்டும் என்கிற அசைன்மெண்ட்டை எனக்கு கொடுத்தார் ராகுல். என்னுடன் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த உமன்சிங்கார், சஞ்சய் பாதக், குந்தன் மால்வியா, பஞ்சாப்பை சேர்ந்த ராஜாபரர், மகாராஸ்ட்ராவை சேர்ந்த சச்சின்சாவந்த் ஆகியோர் இணைந்தனர். ஆறுமாத காலக்கெடுவில், எங்களுக்கு கொடுக்கப்பட்ட ராகுல்காந்தியின் அசைன் மெண்ட்டை சக்சஸாக செய்து முடித்தோம். ராகுலின் கனவை சாத்தியப்படுத்திக் காட்டியதாலும், சாதித்துக் காட்டியதாலும் அவரின் நம்பிக்கைக்குரிய வளையத்திற்குள் வந்தோம். அந்த 100 பேரில் எங்களுக்கு "ஏ-டீம்' என பெயரிட்டதுடன் என்னை "லீடர்' என்றும் அழைத்தார் ராகுல்காந்தி.   

தமிழகத்தில் 1967-ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி இப்போது வரை ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாமல் தடுமாறுகிறது. திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டதா? 

Advertisment

தேர்தல் அரசியலில் இது இயல்பானதுதான். அதுவும் தேசிய கட்சியை வீழ்த்த மாநில கட்சிகள் முயற்சிப்பதும் அரசியல் செய்வதும் சகஜ மானதுதானே! 1950-களில் இந்தியா முழுக்க மாநில கட்சிகளின் ஆதிக்கம் உருவாகத் தொடங்கியது. 1960-களில் அவை வலிமையாகத் தொடங்கின. தமிழகத்திலும் அந்த வலிமை அதிகரித்தது. மக்களும் மாநில கட்சிகள் முன்னெடுத்த அரசியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டனர். அதனால் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் வளர்ச்சி; காங்கிரசின் வீழ்ச்சி என்பதை மறுக்க         முடியாது. 

காங்கிரஸ் கட்சியின் தேய்மானத்துக்கு திராவிட கட்சிகளின் ஆட்சி அதிகாரம் மட்டும் தான் காரணமா, என்ன? 

1967-க்கு பிறகு காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அக்கறை காட்டவில்லை. நேர்மையான உழைப்பை கொடுக்க மறந்தனர். மாறாக, கூட்டணி வைப்பதிலேயே தமிழக தலைவர்களின் அரசியல் சிந்தனை இருந்தது. இதனால் 15-லிருந்து 30 நபர்களின் அரசியல் அதிகாரத்திற்குள் காங்கிரஸ் சுருங்கிப்போனது. மக்களுக்கு செய்ய வேண்டியதை தலைவர்கள் செய்யத் தவறியதால், மக்களுக்கும் காங்கிரஸ் மீதிருந்த எதிர்பார்ப்பு குறைந்து போனது. 

தி.மு.க. கூட்டணியிலுள்ள தோழமைக் கட்சிகளிடம் கூட்டணி ஆட்சிக் குரல் எதிரொலிக் கிறதே?

கூட்டணி ஆட்சி; அதிகாரத்தில் பங்கு என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவு. அதற்கு கட்டுப்படுவது எங்களின் கடமை. அதேசமயம், ஒரு அரசியல் இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி என்பது அதிகாரத்தை நோக்கித்தான் இருக்கும். அதனை தவறு என்று சொல்ல முடியாது. 

தமிழக காங்கிரசில் உள்ள சில தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டணி ஆட்சியை தி.மு.க.விடம் வலியுறுத்த வேண்டும் என கட்சியின் அகில இந்திய தலைமையிடம் வற்புறுத்துவதாக தகவல்கள் வருகிறதே? 

இப்படி வலியுறுத்துகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், தேர்தல் ஜனநாயகத்தில் இதுபோன்ற விவாதங்கள் எழுவதும் வருவதும் ஆரோக்கியமானதுதான். விவாதங்களும் ஆலோசனைகளும் இருக்கவே கூடாது என யாரேனும் எதிர்பார்த்தால், அது ஆரோக்கியமற்றது. எந்த கோணத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தாலும்  இறுதி முடிவை எடுப்பது தலைமைதான். 

கூடுதல் சீட்; கூட்டணி ஆட்சி ஆகியவை களுக்கு தி.மு.க. ஒத்துழைக்க மறுத்தால் பா.ஜ.க. அல்லாத அ.தி.மு.க. அல்லது விஜய்யின் த.வெ.க. கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் திட்டமிடுகிறதா? 

தி.மு.க.வுடன் எந்த சிக்கலும் காங்கிரசுக்கு இல்லை. அதேபோல, ஆட்சியில் பங்கு என்பதை மட்டுமே வைத்துக்கொண்டு விஜய்யை அணுகுவதிலும் எங்கள் தலைமைக்கு உடன்பாடு இருக்காது. அதனால், கூட்டணி அரசியலில் மாற்றுத் திட்டம் எதுவும்  இருக்கவில்லை. கூடுதல் சீட் கேட்பது காங்கிரசின் உரிமை. நிச்சயம் காங்கிரசை கௌரவப்படுத்தும் வகையில் எங்களுக்கான சீட் ஷேரிங்கை முதல்வர் ஸ்டாலின் பரிசீலிப்பார் என்கிற நம்பிக்கை உண்டு.      

முதலமைச்சர் நாற்காலியைக் கைப்பற்ற வேண்டும் என்கிற நடிகர் விஜய்யின் அரசியல் சாத்தியமானதா? 

அரசியல் கட்சி துவக்கும் ஒவ்வொரு வருக்கும் முதல்வர் நாற்காலி மீது கண் இருக்கும். விஜய்க்கும் அந்த ஆசை இருப்பதில் ஆச்சரிய மில்லை. ஆனால், தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தில் உட்கார விஜய் கனவு காண்கிறார். அது கானல் நீர் ; மிதமிஞ்சிய கனவு! தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி விஜய்க்கு இல்லை. ஏனெனில், மக்களின் முதல்வராக இருக்கிறார் ஸ்டாலின். அவரது ஆட்சியில் நிறைவேற்றியுள்ள திட்டங்கள் அனைத்தும் இந்தியாவை வியக்க வைத்திருக்கிறது. முதலில் ஒரு அரசியல் கட்சித் தலைவராக தன்னை இந்த தேர்தலில் நிரூபிக்கட்டும் விஜய்.