விழுப்புரம் தொகுதி தேர்தல் தகிப்பில் மூழ்கியிருக் கிறது. ஏற்கனவே நாம் குறிப் பிட்டபடி இங்கே, தி.மு.க. கூட்டணியில் சிறுத்தை கட்சி சிட்டிங் எம்.பி. ரவிக்குமார் இந்த முறையும் களத்தில் இருக்கிறார். அ.தி.மு.க.விலோ, மாவட்ட மாணவரணி காந்தலவாடி பாக்கியராஜ், போட்டியிடு கிறார். பா.ஜ.க. கூட்டணி யில் பா.ம.க. முரளிசங்கர் களத்தில் குதித்திருக்கிறார்.
சிறுத்தைகள் ரவிக் குமார் புதுச்சேரிக்காரர். தற்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பாரத மாதா நகரில் வசித்துவருகிறார். எழுத்தாளரான இவர் ஏற்கனவே எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருந்து அனுபவம் பெற்றவர். இவரை அறிமுகப்படுத்திப் பேசிய அமைச்சர் பொன்முடி, "கடந்த 2019 தேர்தலில் , புதுச் சேரி உட்பட 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். அந்த அளவுக்கு தமிழக முதல்வர் சாதனைகளைச் செய்திருக்கிறார். ரவிக்குமாரும் இந்தத் தொகுதிக்கு செய்துள்ள திட்டங்கள் ஏராளம். அப்படிப்பட்டவரை மீண்டும் வெற்றிபெறச் செய்வது எல்லோ ரின் கடமை'' என்று மகிழ்வாகக் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க. பாக்யராஜோ, கள்ளக்குறிச்சி மா.செ.வும் வேட்பாளருமான குமரகுருவின் தீவிர ஆதரவாளர். விழுப்புரம் மா.செ.வான மாஜி மந்திரி சி.வி.சண்முகம், இவரது வெற்றிக் காக விறுவிறுப்பாகக் காய்களை நகர்த்திவருகிறார். பாக்யராஜை விழுப்புரத்தில் அறிமுகப் படுத்திப் பேசிய சண் முகம், அனைத்துக் கட்சியையும் கண்ட மேனிக்குச் சாடினார். பிரதமர் நாட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் தமிழகத்திற்கு கூஜா தான் என்றும் டாப் கியருக்குப்போனார். பா.ம.க.வையும் இவர் விட்டு வைக்கவில்லை.
பா.ம.க. வேட் பாளர் முரளிசங்கர், விளையாட்டு வீரராவார். 6 மொழியில் பேசத் தெரிந்தவர். 2016ஆம் ஆண்டு பா.ம.க.வில் இணைந்த முரளி, அதேவருடம் சட்டமன்றத் தேர்தலில் அரூரில் போட்டியிட்டவர். 2021இல் வந்தவாசி தொகுதியிலும் போட்டியிட்டுப் பார்த்தார்... ஒன்றும் ஆகவில்லை. அவர் இந்தத் தேர்தலில் விழுப்புரத்தில் களமிறங்கியிருக்கிறார்.
இவரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வதை தவிர்த்துவிட்டு, "மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமர் ஆக வேண்டும். நதிநீர் இணைப்பு அவர் ஆட்சியில்தான் நடக்கும்'' என்றெல்லாம் பாராட்டு மழை பொழிந்தார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக திரைப்பட இயக்குனர் களஞ்சியம் களத்தில் குதித்திருக்கிறார். எழுத்தாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய களஞ்சியம், திரைப்படத் துறையில் புகுந்து "பூமணி' என்ற வெற்றிகரமான படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அரசியலில் முத்திரை பதிக்கும் நோக்கோடு இங்கே களமிறங்கியிருக் கிறார். அவருக்காக சீமானின் தம்பிகள் களப்பணியாற்ற ஆர்வமுடன் கிளம்பியுள்ளனர். இவர் மூலம் விழுப்புரம் தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
சிட்டிங் எம்.பி.யான ரவிக்குமார், கடந்த ஐந்து ஆண்டு களாக மக்களை அதிகம் சந்திக்கவில்லை என்று தொகுதி முழுக்க ஆதங்கங்கள் இருக்கின்றன. எனினும், தனது எம்.பி. நிதி மூலம் பல திட்டங்களை அவர் செயல்படுத்தி உள்ளார். அவருக்காக சிறுத்தைகள், தொகுதி முழுக்க கிராமம் கிராம மாகச் சென்று திண்ணை பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.விற்கு கணிசமான அளவில் வாக்குகள் இருக்கின் றன. இதனை சிந்தாமல் சிதறாமல் தங்கள் பக்கம் கொண்டு போக வேண்டும் என்று சி.வி. சண்முகம் தீவிரம் காட்டிவரு கிறார். பா.ம.க. வேட்பாளர் முரளிசங்கருக்கு, தொகுதியில் கணிசமான உள்ள வன்னியர்கள் வாக்குகள் தெம்பைத் தந்து வருகின்றன. அதோடு மாற்றுக் கட்சிகளில் உள்ள வன்னியர்களின் வாக்குகளையும் பெறுவதற்கான முயற்சியில் பா.ம.க. நிர்வாகிகள் இருக்கிறார்கள்.
அதேசமயம் கடந்த 2019 தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல்ராவணனை விட சுமார் ஒரு லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று சிறுத்தைகள் ரவிக்குமார் வெற்றி மகுடம் சூடினார். இந்த முறை அந்த அளவை விடவும் அதிக வாக்கு களைப் பெறுவேன் என்று அவர் கூறிக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் பற்றி கணிக்கும் நடுநிலையாளர்களோ, "இந்தமுறை இங்கே யார் வெற்றி பெற்றாலும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் கரையேற முடியும்' என்கிறார்கள்.