parvai

90-களில் ஒரு இளம் வாசகனாக பரிணமித்தபோது எனது அரசியல் சமூகம் சார்ந்த வாசிப்பு தேடல்களை நக்கீரனே நிரப்பியது என ஆணித்தரமாக உரைப்பேன். ஒரு வாசகனாக அன்று தொடங்கிய எனக்கும் நக்கீரனுக்குமான உறவு தொடர்ந்துகொண்டிருக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில் (90-களில்) இரு மாநிலங்களின் ஒட்டுமொத்த அரசியல் சக்திக்கும், காவல்துறையின் பல்வேறு அக -புற உட்பிரிவு எந்திரங்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினான் வீரப்பன். அவனை, ஏறத்தாழ 14 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனத்தில் 80-க்கும் மேற்பட்ட முயற்சிகளுக்கு பின் சந்தித்து நேர்காணல் நடத்தி மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்தியது நக்கீரனின் துணிகர செயல். இதை ஒட்டுமொத்த தமிழ் சமூகமே திரும்பிப் பார்த்தது. அதே காலகட்டத்தில் தமிழகத்தில் பெண்ணுக்கு எதிரான மிகக்கொடூரமான தாக்குதலான சந்திரலேகா ஐ.ஏ.எஸ். மீது ஆசிட் வீச்சு விவகாரத்தின் உண்மை குற்றவாளிகளை அம்பலப்படுத்தியதும், அப்போதைய ஜெயா -சசியின் சொத்துக்குவிப்பிற்காக நடத்தப்பட்ட பல்வேறு கொடுஞ்செயல்களை எதிர்த்து தொடர்ந்து தனது பத்திரிகையில் பதிவிட்டதும், மேலும் அதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்த பத்திரிகை நக்கீரன் மட்டுமே.

Advertisment

2018, மே 11-13 இதழ்:

ரஜினியின் அமெரிக்க பயணமும் அதனைத் தொடர்ந்து "காலா' இசை வெளியீடும், ரஜினி -ரஞ்சித் குறித்த செய்தி சிறப்பு. பாசிச பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் ரஜினி எதன் அடிப்படையில் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசனின் சமூக மற்றும் தொழிலாளர் மேம்பாட்டினை உயர்த்திப்பிடிப்பார்? தமிழக அரசியல் மீதான ரஜினியின் சக்கர வியூகம் எதனை நோக்கி பயணிக்கிறது? குழப்பம் மட்டுமே மேலிடுகிறது.

Advertisment

வழக்கம்போல் ராம்குமார், இளவரசன் வரிசையில் தற்போது விஷ்ணுப்ரியா வழக்கு பூசி மெழுகியது சி.பி.ஐ. ராங்-காலில் தி.மு.க.வின் கள ஆய்வு வேலூர் கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு மா.செக்கள் மீதான புகார் குறித்த தகவல்கள் களத்தின் யதார்த்த நிலையாகவே பார்க்கத் தோன்றுகிறது. நடவடிக்கை பாயும் என்பது கூடுதல் தகவலாக உள்ளது. மாவலி பதில்கள் மிகச்சிறப்பு.

________________

வாசகர் கடிதங்கள்!

பரிதாப துறை!

"தூங்கி வழியும் உளவுத்துறை'யின் உள்விவகாரங்கள் யார் சார்பாகவும் இல்லாமல் உண்மைத் தன்மையோடு அலசப்பட்டுள்ளது. "அன்றாடப் போராட்டமாகிவிட்ட காவிரி சம்பவங்களில் கூட எங்களால் ஒற்றறிய முடியவில்லை' என்கிற அவர்களின் ஆதங்கம் வெட்கத்துக்குரியது.

Advertisment

-கெ.அகிலன், வாணியம்பாடி.

கோவளத்துக் கேவலம்!

கேரள மாநிலம் கோவளத்தில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கேவலமானது. இதனால் தொலைவது நம்பிக்கையும் மானமும் மட்டுமல்ல... அந்நியச் செலாவணியும்தான்.

-ஏ.ஆர்.நாகராஜன், துபாய்.

"காதல்'னா பணம்!

கில்"லேடி'களான அக்கா-தங்கையின் காதலுக்கு இரையானவர்களுக்காக வருத்தப்படுவதா? அல்லது காதலை "கைமா' பண்ணும் இந்த துரோக அழகிகளுக்கு கைகுலுக்கும் அவர்களின் தாயார் மீது ஆத்திரப்படுவதா?

-எஸ்.நந்தினி, துவாக்குடி.