இந்த உலகத்தில் பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை' என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டும்படி இருக்கிறது கோவையிலிருந்து வெளியான ஒரு வீடியோ.
கோவை சாய்பாபா காலனியில் இருக்கிறது "ரூட்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க். அங்கே வேலை செய்யும் பெண் ஊழியர்கள் உடை மாற்றும் அறைக்குள், பெட்ரோல் பங்க் மேனேஜராக இருக்கும் சுபாஷ் என்கிற ஒரு கயவன் உள்ளே நுழைகிறான். தனது செல்போனில் உள்ள வீடியோவை ஆன்செய்து மறைத்து வைத்துவிட்டு, அறையை விட்டு வெளியே கிளம்புகிறான்.
அவன் வெளி யேறிய பின்னால் அங்கே வேலை செய்யும் இரண்டு பெண்கள் பேசியபடியே வந்து மேலாடையை கழற்றி மாட்டுகிறார்கள். அதன்பின்... இன்னும் மூன்று இளம்பெண்கள் அந்த அறைக்குள் வந்து உடைகளை மாற்று கிறார்கள். அதற்குப் பின்னால் அறைக்குள் வரும் சுபாஷ், செல் போனை எடுத்துவிட்டுப் போகிறான்.
பத்து நிமிடம் ஓடக் கூடிய அந்த வீடியோவில் உடைமாற்றும் பெண்களில் ஒருவரின் கணவரான மணிகண்டன், இந்த வீடியோ குறித்து நியாயம் கேட்கப்போன போது... ரூட்ஸ் நிர்வாகத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவ ராய் இருக்கும் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் என்பவரின் ஆட்களை வைத்து மணிகண்டனை அடித்து துவம்சம் செய்து விடுகிறார்கள் .
சாய்பாபா காலனி போலீசில் தன்னை அடித்து துன்புறுத்தியதாக புகார் கொடுத்துவிட்டு அடிபட்ட வலியோடு பேசின மணிகண்டன்... ""சார், அதே பெட் ரோல் பங்க்லதான் நானும் வேலை செய்யறேன். ட்ரெஸ் மாத்துற வீடியோவைப் பார்த்ததும் அதிர்ச்சியா யிட்டேன்.
இந்த வீடியோ சில மாசங்களுக்கு முன்னால எடுத்து இருக்கான் மேனேஜராய் இருந்த சுபாஷ். ஆனா அது எங்களுக்கு தெரியாது. காரணமே சொல்லாம அந்த சுபாஷை வேலையை விட்டு நீக்கினாங்க. அப்புறம்தான் இப்படி அவன் வீடியோ எடுத்திருக்கற விஷயம் தெரிஞ்சு தான் அவனை நிர்வாகம் நீக்கி இருக்குதுன்னு.
இப்ப அந்த சுபாஷ்கூட பழகின ஒருத்தன் மூலமாத்தான் இந்த வீடியோ எனக்கு கெடச்சது. கொதிச்சுப் போய் நியாயம் கேட்டுப் போன என்னை கவிதாசன் உள்ளிட்ட சில பேரு அடிச்சு காயப் படுத்திட்டாங்க.
ஒரு நிர்வாகம் தன்கிட்ட வேலை செய்யற பெண்களை எப்படி கண்ணும் கருத்துமா பாதுகாக்கணும்? ஆனா இங்கே அப்படி இல்லைங்க. என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மேல போலீஸ் நடவடிக்கை எடுக்க ணும்ங்க'' என கண்ணீர்விட்டுக் கதறுகிறார்
இந்த நிலையில் சாய்பாபா காலனி போலீசார்... ""இந்த வீடியோ எடுத்த சுபாஷிடம் இருந்து 4 மாதங்களுக்கு முன்பே செல்போனைப் பிடுங்கி வீடியோவை அழித்துவிட்டோம். ஆனால் அவன் வேறு யாரோ ஒரு நண்பனுக்கு அந்த வீடியோவை அனுப்பியிருக்கிறான் என்பது இப்போது தெரிகிறது. அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரிக்கவிருக்கிறோம். மணிகண்டனை தாக்கியதாக கவிதாசன் மீது வழக்குப் பதிந்திருக்கிறோம். அவர் மீது கைது நடவடிக்கை இருக்கும்'' என்கிறார்கள் பொறுமையாய்.
இது குறித்து கேட்க "ரூட்ஸ்' கவிதாசனை அவரது அலைபேசிக்கு தொடர்புகொண்டோம். "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்கிற பாடல் மட்டுமே நமக்கு பதிலாய் கிடைத்தது.
இந்த சமூகத்தில் எப்படியாவது கௌரவத்துடன் வாழ வேண்டும் என நினைத்து பல இடங்களுக்கு வேலைக்கு செல்கிற பெண்கள் மீது காமுகர்கள் தொடுக்கும் துன்பங்கள் கணக்கிலடங்கா தவை. யூ டியூப்பில் இந்த வீடியோ வெளியாகி அப்படி ஒரு துன்பத்தை மீண்டும் கொடுத்திருக்கிறது.
-அருள்குமார்