தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகளில் களமிறங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அவற்றில் 2 பொதுத்தொகுதிகள் உட்பட, 4 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியிருக்கிறது. இதன்மூலம், அது ’சாதியத்துக்கான கட்சியாக மட்டும் நாங்கள் இயங்கவில்லை’என்று, தன் பொது அடையாளத்தை நிரூபித்திருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை, வெற்றிப் பரபரப்புக்கு நடுவே சந்தித்தபோது....
2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தி.மு.க. தலைமையில் தேர்தல் நேரத்தில் கூட்டணி உருவான நேரத்திலேயே நான் ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது, "இது வெறும் ஆட்சி மாற்றத்திற் கான யுத்தம் அல்ல, ஒரு சித்தாந்த யுத்தம்... கருத் தியல் போர்...' என்று அறிவித்தேன். "சனாதனக் கும்பலை வீழ்த்துவோம்... விரட்டி அடிப்போம்...' என்று அப்போதே முழக்கமிட்டோம். அ.தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கிற கூட்டணி ஒரு சனாதனக் கூட்டணி, தி.மு.க. தலை மையில் அமைந்த கூட்டணி சமூக நீதிக்கான கூட்டணி. சனாதனத்திற்கும் சமூக நீதிக்கும் இடையே நடக்கின்ற யுத்தமாகத்தான் இந்தத் தேர்தல் இருந்தது. அதன்படி, சமூகநீதிக்கான எங்கள் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அ.தி.மு.க. உடனான சனாதனக் கூட்டணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஆகவே இதனை வெறும் ஆட்சி மாற்றமாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. ஜனநாயகத்தையும் சமூகநீதியை யும் பாதுகாப்பதற்காக மக்கள் அளித்துள்ள தீர்ப்பாகவும் இதை நான் பார்க்கிறேன்.
கள நிலவரம் கடுமையாக இருந்ததாக நினைக்கிறீர்களா?
மிகக் கடுமையான போட்டி என்று சொல்லமுடியாது. அதேபோல் மிக இலகுவாகப் பெற்ற வெற்றி என்றும் சொல்லமுடியாது. அ.தி. மு.க. தலைமையிலான கூட்டணியிடம் மாநில அதிகாரமும் மத்தியில் இருக்கும் ஆட்சி அதிகார மும் இருந்தது. ஆக அதிகார பலத்தோடு அவர் கள் களத்தில் இருந்தார்கள். அதோடு பொரு ளியல் பலமும் அவர்களிடம் மிகப்பெரிய அளவில் இருந்தது. அதுமட்டுமல்லாமல், தேர்தல் ஆணை யமும் அவர்களுக்கு ஒத்துழைக்கும் அளவிற்கு செயல்பட்டது. அனைத்து வகையிலும் அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்தார்கள். அவற்றை யெல்லாம் கடந்துதான் தி.மு.க. கூட்டணி இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இல்லாத கட்சி தி.மு.க. அந்த தி.மு.க. கூட்டணி இடம்பெற்றிருக்கும் கட்சிகளும், சட்டமன்றத்தில் பெரிய அளவிலே பிரதிநிதி களைப் பெற்றிருந்த கட்சிகள் அல்ல, ஆனாலும்கூட கொள்கையை மட்டுமே பலமாகக் கொண்டு, இந்தக் களத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., கூட்டணியை நாங்கள் எதிர்த்து நின்றோம். ஆளும்கட்சியின் துஷ்பிரயோகத்தைக் கடந்து, பொருளாதார துஷ்பிரயோகத்தைக் கடந்து, மக்கள் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். எனவே இந்த வெற்றி மக்களுக்கான வெற்றி. தி.மு.க. கூட்டணிக்கான வெற்றி என்பதைவிட, ஜனநாயகத்தின் வெற்றி... சமூகநீதியின் வெற்றி... என்றே நான் பார்க்கிறேன்.
சனாதன சக்திகளை எதிர்க்கின்ற உங்கள் வி.சி.க. நான்கு தொகுதிகளையும், சனாதன சக்தியாகவே இருக்கிற பா.ஜ.க. நான்கு தொகுதியையும் பெற்றிருக்கிறதே?
பா.ஜ.க.வினர் 20 தொகுதிகளில் போட்டி யிட்டு 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருக் கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகளான நாங்கள் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதி களில் வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே இந்த இரண்டு வெற்றியையும் ஒப்பிட முடியாது. அடுத்து பா.ஜ.க.வுக்கு என்று தனியாக தமிழ் நாட்டில் பெரிதாக வாக்கு வங்கி என்று இங்கே எதுவும் இல்லை. 100 விழுக்காடு அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை வைத்தே பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமக்கென்று சொந்த வாக்கு வங்கியையும் வைத்திருக்கிறது. கூட்டணிக் கட்சியின் பலத்தா லும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆகவே பா.ஜ.க. வையும் எங்கள் வி.சி.க.வையும் ஒப்பிடக்கூடாது.
தனித் தொகுதியைத் தாண்டி, பொதுத் தொகுதியை வி.சி.க. வென்றுள்ளதே?
வழக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தனித்தொகுதியில் போட்டியிடுகிற கட்சி என்றே அடையாளப்படுத்துவது உண்டு. எதற்குப் பொதுத் தொகுதி என்று கேள்வி எழுப்பியவர் களும் உண்டு. பொதுத் தொகுதியில் போட்டியிட உங்களிடம் வேட்பாளர்கள் இருக்கிறார்களா என்றெல் லாம் கூட வினவியவர்கள் உண்டு. நாங்கள் இந்த தேர் தலில் மட்டும் அல்ல. கடந்த சில தேர்தல்களில்... குறிப்பாக 2006, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களிலும் குறைந்தது ஒரு தொகுதியாவது பொதுத் தொகுதியைப் பெற்று அதற்கான வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம். கடந்த முறை மக்கள்நலக் கூட்டணி யில் ஐந்து பொதுத் தொகுதி களில் வேட்பாளர்களை நிறுத்தினோம். இந்த முறை தான் எங்களால் வெற்றியை ஈட்டமுடிந்தது.
அனைத்து தரப்பு மக்க ளும் எங்களை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கான அடையாளம்தான் இந்த வெற்றி. விடுதலைச் சிறுத்தைகளின் மீது, சாதிய முத்திரையை குத்தி, ஒரு மூலைக்குள்ளே முடக்கிவிட முயற்சித்தவர்களின் சதி, இப்போது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. தலித் சமூகமும் இன்னபிற உழைக்கும் மக்கள் யாவ ரும் விடுதலைச் சிறுத் தைகளுக்கு மிகப்பெரும் ஆதரவைக் கொடுத்ததால் தான், தனித் தொகுதி களிலும் வெற்றிபெற முடிந்தது. பொதுத் தொகுதியிலும் எங்களால் வெற்றிபெற முடிந்திருக் கிறது. எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைவருக்குமான வெகுமக்களின் இயக்கம் என்பதை இந்த தேர்தல் உறுதிப்படுத்தியிருக்கிறது.
கூட்டணிக் கட்சியான தி.மு.க. ஆட்சி அமைக்கும் இந்த நேரத்தில், அவர்களிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கை என்னவாக இருக்கும்?
கொரோனா பேரிடர் மிகப்பெரிய சவாலாக, நம் அனைவரின் முன்னாலும் இருக்கிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள், இந்த கொரோனா நெருக்கடியை எதிர்கொள்வதையே பெரும் சவாலாகவும், முக்கியமான நடவடிக்கையாகவும் பார்க்கிறோம். அவர் ஏற்கனவே அளித்த வாக் குறுதியின்படி, ஒவ்வொரு தமிழ் குடிமக்களுக்கும் கொரோனா இழப்பீடாக ரூபாய் 4000 ரூபாயை வழங்கிடவேண்டும். தி.மு.க. கொடுத்திருக்கும் வாக்குறுதிகளும், மக்கள் வைத்த கோரிக்கைகளும் ஏராளமாக இருக்கின்றன. என்றாலும் கொரோனாவை வலிமையாக எதிர்கொண்டு ஒடுக்குவதையும், பொருளியல் சிக்கலால் தவிக்கும் மக்களுக்கு உதவித்தொகை வழங்குவதையுமே, இப்போதைக்கு எதிர்பார்க்கிறோம். அதையே நாங்கள் கோரிக்கையாக வைக்கிறோம்.
தி.மு.க.வின் ஐந்தாண்டு கால ஆட்சிக் காலத்தில் நீங்கள் எதை, எதை எதிர்பார்க்கிறீர்கள்?
ஐந்தாண்டு காலம் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கான பொறுப்பை இன்றைக்கு தி.மு.க.விடம் மக்கள் வழங்கியிருக்கிறார்கள். தி.மு.க. ஒரு நல்லாட்சியை வழங்கவேண்டும். கடந்த காலத்தில் எடப்பாடியின் தலைமையிலான அரசு ஊழல் மலிந்த ஒரு அரசாகவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடங்கிக் கிடந்த அரசாகவும் இருந்தது. இப்போது அமைந் திருக்கும் தி.மு.க. அரசோ சுதந்திரமாகச் செயல்படக்கூடிய அரசாகவும், உழைக்கும் மக்களின் நலன்களை முன்னிறுத்துகிற மக்கள்நல அரசாகவும் இருந்து, மக்களுக்கு நல்லாட்சியை வழங்கவேண்டும் என எங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோளை வைக்கிறது. அதன் செயல்பாடுகளுக்கு நாங்கள் ஒத்துழைப் பாக இருப்போம். மற்றபடி, பிரச்சினைகளின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் வழக்கம்போல, தன் களப்பணிகளைத் தொடரும்.
-சந்திப்பு: அருண்பாண்டியன்
______________
பொதுத் தொகுதிகளில் பொங்கிய பானை!
தி.மு.க கூட்டணியில் 6 தொகுதிகளைப் பெற்று, பானை சின்னத்தில் களம்கண்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தனிச் சின்னம் என்பதில் உறுதியாக இருந்தது போலவே, தங்களுக்கான தொகுதிகளில் பொதுத் தொகுதிகளும் இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பெற்றது. நாகை, திருப்போரூர் என இரு பொதுத் தொகுதிகளும் காட்டுமன்னார் கோவில், வானூர், செய்யூர், அரக்கோணம் ஆகிய தனித் தொகுதிகளும் வி.சி.க. களம் கண்ட தொகுதிகளாகும். இதில் காட்டுமன்னார்கோவிலில் சிந்தனைச் செல்வன், செய்யூர் தொகுதியில் பனையூர் பாபு ஆகியோர் வெற்றிபெற்றனர். நாகை பொதுத் தொகுதியில் போட்டியிட்ட ஆளூர் ஷாநவாஸ் அங்கு செல்வாக்குடன் இருந்த அ.தி.மு.க வேட்பாளரை எதிர் கொள்வதில் சரியான வியூகங்களை வகுத்தார். சிறுபான்மை + தலித் வாக்குகளுடன், தி.மு.க.வின் களப்பணியால் மீனவர்கள் உள்ளிட்ட பிற தரப்பினரின் வாக்குகளும் சேர, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே முன்னிலை பெற்றார். ஊடகங்களில் ஒலித்த ஷாநவாஸின் குரல், இனி சட்டமன்றத்தில் ஒலிக்கவிருக்கிறது. பா.ம.க.வுடன் வி.சி.க. நேரடியாக மோதிய தொகுதி திருப்போரூர். பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இத்தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட எஸ்.எஸ்.பாலாஜி வெற்றிபெற்றுள்ளார். பொதுத் தொகுதிகளில் தனது கணக்கை கச்சிதமாகத் தொடங்கியிருக்கிறார்கள் சிறுத்தைகள்.