கலைஞர் மரணம் அறிவிக்கப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ""முன்னாள் முதல்வரை அண்ணா சதுக்கத்தில் புதைக்க அனுமதியில்லை'' என அறிவித்தார். அப்போது முதல் மறுநாள் காலை பத்தரை மணிக்கு உயர்நீதிமன்றம் அண்ணாவின் அருகே கலைஞரை புதைக்க அனுமதி அளிக்கும் வரை மிகப்பெரிய போராட்டம் ஒன்றை அமைதியான முறையில் தி.மு.க.வின் சட்டத்துறை மேற்கொண்டிருந்தது.
அரசுத் தரப்பு ஆரம்பம் முதலே அண்ணா சமாதியில் இடம் தருவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்தது. கலைஞர் மரண அறிவிப்பு வருவதற்கு முன்பே சென்னை நகர காவல்துறையில் இருந்தவர்கள் மூலம் "காந்தி மண்டபத்திற்கு பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் புதைக்க இடம் தருகிறோம்' என கலைஞரின் உறவினர்களிடமும் தி.மு.க.வின் முன்னணி தலைவர்களிடமும் தகவல்கள் பரிமாறப்பட்டன. அதைப் பற்றி பிறகு பேசலாம் என அவர்கள் ஒதுக்கிவிட்டனர். ""அண்ணா சமாதி மிக அதிகமாக அலைகள் எழும் கடற்கரை ஒழுங்கு முறை பகுதியில் வருகிறது. இங்கு எந்த கட்டுமானமும் இருக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பளித்திருக்கிறது. ஆகவே மத்திய பா.ஜ.க. அரசு கலைஞரை அண்ணா சமாதியில் புதைப்பதை ஏற்கவில்லை'' என தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டு வந்தது.
கலைஞர் மரணத்திற்கு பிறகு அரசு மரியாதை, ஏழுநாள் துக்கம், கலைஞரின் உடலை வைப்பதற்கு ராஜாஜி ஹாலை தருவது என எல்லாவற்றிலும் தி.மு.க. தரப்போடு ஒத்து வந்த தமிழக அரசு அண்ணா சமாதியில் கலைஞரை அடக்கம் செய்வதில் மட்டும் தயக்கம் காட்டியது. இதைப் புரிந்து கொண்ட மு.க.ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து போய் எடப்பாடியை சந்தித்தார். "அண்ணா சமாதியில் கலைஞரை புதைக்க அனுமதி தாருங்கள்' என அவர் கொடுத்த கடிதத்தை அடுத்து எடப்பாடியை நம்பி தி.மு.க. தரப்பிலிருந்து நிச்சயம் கலைஞரை அண்ணா சமாதியில் புதைக்க அனுமதி கிடைக்கும் என நினைத்தனர். மாலையில் கலைஞருக்கு காந்தி மண்டபத்திற்கு பக்கத்தில்தான் இடம், கலைஞரை அண்ணா சமாதியில் புதைக்க அனுமதி கொடுப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளது என தலைமைச் செயலாளர் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதற்கு நீதிமன்றம்தான் முடிவு என பொறுப்புத் தலைமை நீதிபதியான குலுவாடி ரமேஷ் வீட்டிற்கு போனார்கள் மூத்த வழக்கறிஞர் வில்சன் உள்ளிட்டோர். "நான் வழக்கை விசாரிக்கிறேன்' என்றவர் "இரவு பத்தரை மணி' என நேரம் கொடுத்தார் நீதிபதி. "அதற்குள் வழக்கை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யுங்கள்' என்ற அவரது உத்தரவை நிறைவேற்ற படாதபாடு பட்டார்கள் தி.மு.க. வழக்கறிஞர்கள். வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றுவிட்ட உயர்நீதிமன்றப் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்களை பிடித்து வழக்கை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்துவிட்டு கோர்ட் முத்திரையுடன் மூத்த வழக்கறிஞர் வில்சன், நீதிபதியின் கிரீன்வேஸ் சாலை வீட்டிற்கு வரும்போது மணி பன்னிரெண்டரை ஆகிவிட்டது.
தி.மு.க. வழக்கறிஞர்களாக சண்முகசுந்தரம், வீர.கதிரவன், விடுதலை, என்.ஆர்.இளங்கோ, குமரேசன், கண்ணதாசன் என பலரும் ஆஜராகினர். அரசு சார்பில் அன்று 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் ஆஜராகி வாதாடிய டெல்லி சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் வைத்தியநாதன் தலைமையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் அரவிந்த் பாண்டியன், எஸ்.ஆர்.ராஜகோபால் உட்பட ஐந்துபேர் நீதிபதி வீட்டில் காத்திருந்தனர். நீதிபதி குலுவாடி ரமேஷுடன் இணைந்து வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், நீதிபதி ரமேஷின் வீட்டின் முன்பு நின்றிருந்த கூட்டத்தால் நடந்தே வந்து நீதிபதியின் வீட்டிற்கு போனார். அதற்குள், கடற்கரையில் ஜெ.வுக்கு அரசு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெரியார் தி.க. வழக்கறிஞர் துரைசாமியும், பா.ம.க. பாலுவும் தாங்கள் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து அண்ணா சதுக்கத்தில் கலைஞருக்கு இடம் கொடுக்க வேண்டிய வழக்கின் வாதம் தொடங்கியது.
""அரசு, கலைஞரின் அடக்கம் குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கலைஞரின் உடலை அண்ணா சமாதிக்கு பக்கத்தில் ஏன் புதைக்கக்கூடாது என தெளிவாக சொல்லவில்லை. சட்ட சிக்கல்கள் உள்ளதாகப் பொத்தாம் பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. இது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. எனவே இந்த அரசின் உத்தரவை ரத்து செய்யுங்கள்'' என்றது தி.மு.க. தரப்பு. "அரசுத் தரப்பு என்ன பதில் சொல்கிறது, கேட்டுவிடுகிறோம்' என்று அரசுத் தரப்பை நீதிபதிகள் கேட்டனர். அரசுத்தரப்பில் ஆஜரான சி.எஸ்.வைத்தியநாதன், ""எங்களிடம் எந்தப் பதிலும் இல்லை. எங்களுக்கு பதில் அளிக்க நேரம் வேண்டும்'' என்றனர்.
"கலைஞர் இறந்துவிட்டார். அவரது பூதஉடலை வைத்துக்கொண்டு எங்கே புதைப்பது என நாள்கணக்கில் விடை தெரியாமல் காத்திருக்க முடியாது' என நீதிபதிகளிடம் முறையிட்டனர் தி.மு.க. வழக்கறிஞர்கள். நிலைமையை புரிந்துகொண்ட நீதிபதிகள், ""இது மிகவும் சீரியஸான விஷயம். இதில் பதில் அளிக்க அரசுத் தரப்பிற்கு நேரம் கொடுக்க முடியாது. வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் நிற்கிறார்கள். இந்த வழக்கின் முடிவை எதிர்பார்த்து கோடிக்கணக்கான தமிழக மக்கள் காத்துக்கிடக்கிறார்கள். நாளை காலை ஆறரை மணிவரை உங்களுக்கு நேரம் தருகிறேன். காலை ஆறரை மணிக்குள் அரசுத் தரப்பு பதிலை தாக்கல் செய்யுங்கள். காலை 8:00 மணிக்கு கோர்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும். உங்கள் பதிலைப் படித்துவிட்டு 8:30 மணிக்கே தீர்ப்பளித்துவிடுவோம்'' என்றார்கள் நீதிபதிகள்.
நீதிபதிகளின் வேகம் அரசுத் தரப்பிற்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது. நீதிபதியின் வீட்டிலிருந்து வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் முதல்வர் எடப்பாடியின் வீட்டிற்குச் சென்றார். முதல்வர் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் டெல்லி வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகிய மூவர் அடங்கிய கூட்டம் நடந்தது. ""கலைஞரை அண்ணா சமாதியில் புதைக்க அனுமதித்தால் அ.தி.மு.க.வினர் என்னை கேவலமாக பேசுவார்கள். டெல்லியில் இருப்பவர்களும் அதை விரும்பவில்லை. நெருக்கடி தருகிறார்கள். ஆடிட்டர் குருமூர்த்தியும் எதிர்க்கிறார். அம்மாவை அங்கே புதைத்ததை எதிர்த்து நினைவு மண்டபம் கட்டுவதை தவிர்க்க வழக்கு போட்டவர்கள் தற்பொழுது வாபஸ் பெறுகிறார்கள். அந்த வழக்குகளை இனி காரணம் காட்டி சட்ட சிக்கல் என சொல்ல முடியாது. வேறு காரணங்களை வைத்து பரிந்துரையை தயார் செய்யுங்கள்'' என்கிற எடப்பாடியின் ஆலோசனை பேரில் பதிலுரை தயாரித்தார் சி.எஸ்.வைத்தியநாதன்.
இதற்கிடையே "கலைஞருக்கு அண்ணா சமாதியை தர மறுக்கிறது தமிழக அரசு. அவரை அண்ணா சமாதியில் புதைக்கக்கூடாது' என ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆடிட்டர் குருமூர்த்தி அறிக்கை வெளியிட்டார். நினைவிடம் தொடர்பான வழக்கு நீதிபதி குலுவாடி ரமேஷ் முன் நடக்கிறது என்கிற செய்தியை ஆங்கில-இந்தி சேனல்கள் இந்தியா முழுவதும் ஒளிபரப்பின. அதைப் பார்த்த முன்னாள் பிரதமர் தேவகவுடா கர்நாடகத்தை சேர்ந்தவரான குலுவாடி ரமேஷின் உறவினர்களிடம் பேசினார். ""ஒருவேளை தமிழக அரசின் நிலைப்பாட்டின்படி அண்ணா சமாதியில் கலைஞரை புதைக்காவிட்டால் ஒரு பெரிய பூகம்பமே தமிழகத்தில் வெடிக்கும். சட்டம்-ஒழுங்கு சீர்கெடும். அதனால் ஏற்படும் உயிர்ப்பலிகளுக்கு நீதிமன்றம் பொறுப்பாளியாகக்கூடாது'' என தேவகவுடா வாதம் செய்தார்.
மறுநாள் அரசு பதில் மனு தாக்கல் செய்தவுடன் கூடிய நீதிமன்றம் எடுத்த எடுப்பிலேயே, "கலைஞரை புதைக்க எனக்கு ஆட்சேபணை இல்லை' என கூறிய டிராபிக் ராமசாமி, பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி, பா.ம.க. வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்தது. கடற்கரையில் கலைஞரை புதைக்க சட்ட சிக்கல் என கூறப்பட்ட வழக்குகள் காணாமல் போய் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்ற நிலை உருவானது. தி.மு.க. தரப்பில் வாதாடிய சீனியர் வழக்கறிஞர் வில்சன், ""கலைஞர் திராவிட இயக்கத்துக்கு சொந்தக்காரர். அவரை காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் புதைப்பதை ஏற்க முடியாது. 1988ஆம் ஆண்டே அண்ணா சமாதி அமைந்துள்ள பகுதியை மயானம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது என்று தமிழக அரசே ஜெ.வின் சமாதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சொல்லியுள்ளது. அந்த பகுதி கூவம் கரையில் உள்ளது. அது கடற்கரை ஒழுங்கமைவு பகுதியில் வரவில்லை. எனவே கலைஞரின் உடலை அண்ணா சமாதியில் புதைக்க உத்தரவிட வேண்டும்'' என்றார். அதற்குப் பதிலளித்து பேசிய வைத்தியநாதன், ""காந்தி மண்டபம் அருகே அரசு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. அவரை குறிப்பிட்ட இடத்தில்தான் புதைக்க வேண்டும் கலைஞர் யார்?'' என்றார். அதனால் டென்ஷன் ஆன தி.மு.க. வழக்கறிஞர் வில்சன், ""கலைஞர் யார் என்று தெரியாமலா அவரது உடலை ராஜாஜி மண்டபத்தில் வைக்க அரசு உத்தரவிட்டது. ஏழு நாட்கள் அரசு துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. மனித உரிமை என்பதில் ஒருவரது மரணத்திற்கு பின்பு கொடுக்கப்படும் மரியாதையும் இருக்கிறது'' என்றார் அழுத்தமாக. அதற்கு பதிலளித்த வைத்தியநாதன் ""அந்த மரியாதையை கலைஞர் ஆட்சியில் காமராஜர், ஜானகி, தந்தை பெரியாருக்கு தரவில்லை. அவர்களை கடற்கரையில் புதைக்கவில்லை'' என்றார். அதற்கு நீதிபதிகளே பதிலளித்தனர். ""பெரியார் வேப்பேரியில் புதைக்கப்பட்டது அவர்களது விருப்பம். ஜெ.வை எந்த உத்தரவு அடிப்படையில் கடற்கரையில் புதைத்தீர்கள். கலைஞரை அண்ணா சமாதியில் புதைக்கவில்லையென்றால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை அரசால் சமாளிக்க முடியுமா?'' என கேட்டனர்.
அதற்கு துள்ளி எழுந்து பதிலளித்தார் வைத்தியநாதன். ""அரசிடம் போலீஸ் இருக்கிறது. கலவரம் செய்ய தி.மு.க.வினர் முயன்றால் நாங்க அடக்குவோம்'' என்றார். இந்த பதில் நீதிபதிகளை கோபப்படுத்தியது. ""நாட்டில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை உருவாகி அதன்மூலம் பெரும் கலவரம் உருவாகி உயிர்கள் பலி ஆவதை கண்ணை மூடிக்கொண்டு பார்க்க முடியாது'' என்ற நீதிபதிகள் ""கலைஞரை அண்ணா சமாதியில் அடக்கம் செய்யுங்கள்'' என உத்தரவிட்டனர். ""இது திராவிட இயக்கத்திற்கும் அதன் லட்சியங்களுக்காக உழைத்த கலைஞருக்கும் அவரது மரணத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி'' என்கிறார் வழக்கில் வாதாடி வெற்றி பெற்ற வில்சன்.
-தாமோதரன் பிரகாஷ்