"ஜெய் பீம்' திரைப் படம் பெரும் பரபரப்பையும் பலத்த வரவேற்பையும் பரவலாகப் பெற்றுவரும் நிலையில், அந்தப் படத்தில் வன்னிய சமூகத்தைப் பற்றிய தவறான பிம்பம் உருவாக்கப்பட்டிருப்ப தாக எதிர்க் குரலும் தற்போது எழுந்து வருகிறது. படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படுபவரின் வீட்டில் வன்னியர் சங்கத்தின் "அக்னி சட்டி' காலண்டர் இடம் பெற்றதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியான இந்தப் படம், லாக்கப் மரணம் தொடர்பான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தில் ராசாக்கண்ணு பாத்திரத்தில் மணிகண்டனும், செங்கனி பாத்திரத்தில் லிஜோமோல் ஜோஸும், படத்தில் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இந்தக் கதையின் மூலத்தை அறிய, நாம் ஏறத்தாழ 18 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
கடந்த 2004-ஆம் ஆண்டு, மே மாதம் 31-ஆம் தேதி, அந்த லாக்கப் மரணம் தொடர்பான வழக்கில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விரைவு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணமூர்த்தி ஒரு பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டார்.
அதில், “கம்மாபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 6,700 ரூபாய் அபராதமும், ஏட்டு வீராசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5,700 அபராதமும், இன்னொரு ஏட்டு ராமசாமிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 3000 ரூபாய் அபராதமும், இன்ஸ்பெக்டர் பாஷ்யத்திற்கு 7000 ரூபாய் அபராதமும், நெய்வேலி மகாலட்சுமி மருத்துவமனை டாக்டர் ராமச்சந்திரனுக்கு மூன்றாண்டு மருத்துவத் தொழில் செய்ய தடையும் விதிக்கப்படுவதாக’குறிப்பிட்டிருந்தது.
இந்த தீர்ப்பு குறித்து அப்போதே 5-6-2004 தேதியிட்ட நம் நக்கீரனில் ’"காவல் நிலைய கொலை! போலீசாருக்கு ஆயுள் தண்டனை!'’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
தோழர் கோவிந்தசாமி, ராசாக்கண்ணு கொலைவழக்கில் காவல்துறையினருக்கு தண்டனை கிடைக்கும்வரை திருமணம் செய்துகொள்வதில்லை என்று சபதமெடுத்து, அதன்படி போலீசாருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிய பிறகுதான், தனது முப்பத்தி ஒன்பதாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தகவல்கள் எல்லாம் நமக்குத் தெரியவர, கோவிந்தசாமியை சந்தித்தோம். அவர், அப்போது நடந்ததை விவரித்தார்.
"போலீசார் லாக்கப்பில் வைத்து அடித்து உதைத்து ராசாக்கண்ணுவை சித்திரவதை செய் துள்ளனர். அதில் அவர் இறந்துபோனார். இறந்த உடலை கொண்டுசென்று மீன்சுருட்டி அருகே சாலையோரம் வீசிவிட்டு வந்த போலீசார், அவர் தப்பி ஓடியதாக நாடகமாடினார்கள். ராசாக்கண்ணு வை போலீசார் கொலைசெய்தனர் என்பது எங்க ளுக்கு உறுதியாக தெரியவந்தது. இதில் கொடுமை என்னவென்றால், கொள்ளைபோன அந்த வீட்டி லுள்ளவர்களை போலீசார் தீர விசாரித்திருந்தால் ராசாக்கண்ணு இறந்திருக்கமாட்டார்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகளை, அதே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் காதல னுடன் வீட்டுக்குத் தெரியாமல் கொண்டுபோயுள் ளார். எந்தத் தவறும் செய்யாத ஒரு அப்பாவியை போலீஸ் கொலை செய்துவிட்டது. (தனது குடும்பத்தினர் நகையை விற்று வழக்கிற்காக செலவுசெய்துள்ளார் கோவிந்தசாமி. இவர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்). உடனடியாக எங்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் தோழர் ராஜ்மோகனுடன் சென்று, அப்போதைய எங்கள் மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணனிடம் (இப்போது மாநிலத் தலைவர்) இந்த வழக்கு விஷயத்தைக் கொண்டுசென்றோம்.
அவர் எங்களுக்கு உறுதுணையாக இருந்து, அந்த வழக்கை நடத்தி போலீசாருக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந் தார். நாங்கள் ஜாதி மதம் கடந்து பாதிக்கப்படும் மக்க ளுக்காகப் போராடிவரு கிறோம். ராசாக்கண்ணு வழக் கில் பல்வேறு வகையிலும் உதவியாக இருந்தவர்கள் அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த தோழர்கள் தான்''’என்றார் அழுத்தமாய்.
அன்றைய சி.பி.எம். ஒன்றியச் செயலாளரான ராஜ் மோகனிடம் கேட்டபோது... “"பல்வேறு விதமான போலி ஆவணங்களையும் போலி சாட்சிகளையும் போலீசார் அப்போது தயாரித்து, வழக்கி லிருந்து தப்பிப்பதற்காக கடும் முயற்சி மேற்கொண்டனர். போலீசார் குற்றவாளி என்று நிரூபிப்பதற்கு எங்கள் தரப்பில் முக்கிய சாட்சியாக இருந்தவர் கள் ராசாக்கண்ணுவின் மூத்த சகோதரியான பந்த நல்லூர் ஆச்சி, இவரது கணவர் குள்ளன், இவரது உறவினர் கோவிந்தசாமி மூவரும்தான். தற்போது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சந்துருவை, அப்போது சந்தித்தோம். அவர் அப் போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞ ராகப் பணி செய்துவந்தார். இந்த வழக்கை மிகவும் தீவிரமாக நடத்தினார். அவரால்தான் குற்றவாளி கள் தண்டனை பெற்றார்கள். இதுபோன்ற திரைப்படங்கள் நிறைய வரவேண்டும் அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவேண்டும்''’என்றார் உற்சாகமாக.
சி.பி.எம். கட்சி சார்பில் இந்த வழக்கை எடுத்துநடத்த உதவியாக இருந்த வழக்கறிஞர் சந்திரசேகரோ, "எங்கள் இயக்கம் சாதி, மதம், இனம் கடந்து செயல்படுகிறது. அதேநேரத்தில் இந்த வழக்கில், வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்துதான் இயக்கரீதியாகவும் சட்டரீதியாக வும் ஜனநாயக ரீதியாகவும் போராடி வெற்றிபெற முடிந்தது. உண்மைச் சம்பவங்களை அடிப்படை யாகக் கொண்டு திரைப்படம் எடுப்பவர்கள் தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைத் திணிக்கக்கூடாது''’என்கிறார் உறுதியான குரலில்.
ராசாக்கண்ணு மனைவி பார்வதியின் மனநிலையை அறிய முயன்றோம். அவர் சென்னையில் வசிப்பதாகக் கூறினார்கள். அவரை செல்போன் எண்ணில் தொடர்புகொண்டும் பிடிக்க முடியவில்லை. வன்னியர் சமூக எதிர்ப்பின் காரணமாக, "அக்னி சட்டி' அடையாளத்துடனான காலண்டர் மாற்றப்பட்டுள்ளது. சாதிகளைக் கடந்து ஒருங்கிணைய வேண்டிய காலகட்டம் இது.