""ஹலோ... குட்மார்னிங். கலைமகள் காலேஜ்..?''
""எஸ் ..''
""நான் சென்னை என்.டி.எம்.ஏ. (தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியம்)-லயிருந்து ட்ரெயினர் ஆறுமுகம் பேசறேன்... நான் கோயமுத்தூர்ல இருக்கற அஞ்சு காலேஜ்களுக்கு விபத்து, தீ விபத்து போன்ற பேரிடர் காலங்களில் எப்படி தப்பிப்பது என ஸ்டூடண்ட்ஸ்களுக்கு ட்ரெய்ன் அப் பண்ண வர்றேன். உங்க காலேஜ்லயும் அட்டன்ட் பண்ணலாம்னு இருக்கறேன். நீங்க ரொம்ப பணம் ஆகும்னு நெனச்சுக்காதீங்க. ஒவ்வொரு ஸ்டூடண்ட்ஸ்கிட்ட இருந்து ஜஸ்ட் 50 ரூபாய் வாங்கிக் கொடுத்தா போதும்..'' என சொல்லித்தான் கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரிக்கு வந்தான் ஆறுமுகம்.
அங்கே அதுவரை இப்படியொரு பயிற்சி அளிக்கப்படுவதாக அந்த கல்லூரி மாணவ, மாணவிகள் யாருக்குமே தெரியப்படுத்தவில்லை கல்லூரி நிர்வாகம்.
முதற்கட்டமாக பி.பி.ஏ. படிக்கும் மாணவிகளை அழைத்த கல்லூரி முதல்வர் விஜயலெஷ்மி... ""இந்தப் பயிற்சியில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்..'' என்று சொல்ல... ""பயமா இருக்கு மேடம்..''னு எல்லா மாணவிகளுமே மறுக்க.. கடும் மிரட்டலின் பேரில் கல்லூரியின் இரண்டாவது மாடிக்கு கூட்டி செல்லப்பட்டனர் மாணவிகள் .
அப்போது நடந்தது என்ன என்பதை நம்மிடம் விவரிக்கிறார் ஒரு மாணவி..
""பயிற்சியாளர் எனச் சொல்லிக் கொண்ட அந்த ஆறுமுகம்... முன்னால நின்னுட்டு இருந்த லோகேஸ்வரியை கூப்புட்டு.. "நான் இருக்கறேன்.. தைரியமா குதிங்க. கீழே பாருங்க.. வலைய விரிச்சுட்டு உங்கள எந்த காயமுமில்லாம காப்பாத்த எத்தனை ஸ்டூடண்ட்ஸ் நிக்கறாங்க பாருங்க..'ன்னு சொன்னான்.
பாவம் அந்த லோகேஸ்வரி.. "சார்.. எனக்கு ரொம்ப பயம் ஜாஸ்தி சார்.. என்னால குதிக்க முடியாது'ன்னு சொன்னா..
அதுக்கு அவன், "உங்க ஜெயலெஷ்மி மேடத்தை கூப்பிடவா..'ன்னு மெரட்டினான். அதுக்கு லோகேஸ்வரி.. "வேணாம் சார்.. வேணாம் சார்..'னு அங்கயே அழுதுட்டு உக்காந்துட்டா .
அதுக்குள்ள அவன்.. "அடக் குதி...'ன்னு சொல்லி லோகேஸ்வரியை அங்கிருந்து தள்ளி விட்டுட்டான். யாருமே எதிர்பாக்கலை. ஒரு செகண்ட்.. அவ்வளவுதான் பஸ்ட் மாடி சிலாப்ல அவ தலையும், கழுத்தும் அடிச்சு தலைகீழா விழுந்தா.
எல்லாரும் பதறி அழுக ஆரம்பிச்சு ஓடிப் போய் பார்த்தோம்.. கழுத்து கட் ஆகி தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டோ கொட்டோன்னு கொட்ட.. லோகேஸ்வரி துடிச்சுட்டு கெடந்தா, எல்லோரும் கதறினோம்.
இதைப் பார்த்த அந்த ஆறுமுகம் எட்டி குதிச்சு ஜெயலெஷ்மி ரூமுக்குள்ள ஓடிட்டான். உடனே பக்கத்துல இருக்கற ஒரு ஆஸ்பிடலுக்கு லோகேஸ்வரியை தூக்கிட்டுப் போனாங்க. அங்க இரத்தத்தை துடைச்சு பஸ்ட் எய்ட் மட்டும் பண்ணாங்க. ஜி.ஹெச்சுக்கு கொண்டு போகச் சொன்னாங்க. ஆனா போற வழியிலேயே லோகேஸ்வரி எங்களை விட்டுட்டு போயிட்டா சார்..'' என அழுதார் அந்த மாணவி....
""இறந்ததைக் கூட அவளோட பேரண்ட்ஸ்கிட்ட காலேஜ் தரப்பிலிருந்து யாருமே சொல்லவேயில்லைங்க சார்.. காலேஜ் முடிஞ்சு போன எங்க தோழி ஒருத்திதான் லோகேஸ்வரியோட அப்பாகிட்ட சொன்னா... இப்படி பயிற்சி கொடுக்கறதே எங்க பேரண்ட்ஸ்கிட்ட இருந்து காலேஜ் நிர்வாகம் பணம் புடுங்கறதுக்கு தாங்க சார்...'' என அழுகிறார்கள் மாணவியர்.
லோகேஸ்வரியின் அப்பா நல்லாக் கவுண்டரும், அம்மா சிவகாமியும், ""எங்க செல்லப் புள்ளைங்கய்யா லோகேஸ்.. எங்க பொண்ணு என்ன படிப்பு படிக்கிறாளோ அதைய அவளே முடிவு பண்ணிக்கட்டும்.. யாரும் தலையிடக் கூடாதுன்னு வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லிட்டோம். அவளேதான் இந்த காலேஜ்ல சேர்றேன்..னு சொன்னா. விவசாயம் செய்யற ஏழைங்க நாங்க. . கஷ்டப்பட்டு லட்சக்கணக்குல பீஸ் கட்டி படிக்க வச்சுட்டு இருந்தோம்யா.
காலையில காலேஜ்க்கு போகும் போது பரீட்சை இருக்குதுன்னுதான் சொல்லிட்டுப் போனா எங்க பொண்ணு. ஆனா இப்படி பயிற்சி கொடுக்கறதப் பத்தி சொல்லவேயில்லை. ஏன்னா அவளுக்கும் தெரியாதுய்யா. பயிற்சிங்கற பேர்ல அநியாயமா எங்க பொண்ண கொன்னுப்புட்டாங்கய்யா... எங்க பொண்ணு செத்துப் போனதைக் கூட எங்களுக்கு சொல்லலைங்கய்யா இந்த காலேஜ்காரனுக. பீஸ் கட்டலைன்னா மட்டும் நூறு தடவை வீட்டுக்குப் போன் அடிக்கிற இந்த ஈனப் பயலுக.. "உங்க பொண்ணுக்கு இப்படி ஆயிருச்சு..'ன்னு ஒரு போன் அடிச்சிருக்கக் கூடாதா.?'' என அழுகிற அவர்கள். ""எங்க வீட்டுல இருந்த ஒரு மகாலட்சுமிய முடிச்சு மூட்டை கட்டிட்டாங்கய்யா..'' என அழுகிறார்கள்.
லோகேஸ்வரியின் தந்தை நல்லாக் கவுண்டர் ஆலாந்துறை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்க... கலைமகள் கல்லூரியில் பத்திரமாய் இருந்த ஆறுமுகத்தை கைது செய்தது இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான டீம்.
லோகேஸ்வரியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப் பட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மத்வராயபுரத்தில் உள்ள மின் மயானத்தில் எரிக்கப்பட்டது.
எடப்பாடி அரசோ.. உயிர் இழந்த லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி ஐந்து லட்ச ரூபாயை உதவித் தொகையாக அறிவிக்க... அதற்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி லோகேஸ்வரியின் வீட்டிற்குச் சென்று அவரின் பெற்றோர்களிடம் கொடுத்தார்.
மாணவி லோகேஸ்வரியின் கொலை குறித்து பேசும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சுற்றுப்புறச்சூழல் பேராசிரியர் டாக்டர் மணி மேகலன்... ""பேரிடர் பாதுகாப்புக்குழு பயிற்சி நடத்தப்படும் போது பாதுகாப்பு கருதி தீயணைப்புத்துறையின் அனுமதி வாங்க வேண்டும். அதுபோக பேரிடர் காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அந்த பயிற்சியாளர்தான் செய்து காட்ட வேண்டும்.
அந்த பயிற்சியாளர் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர் தானா என்பதை கல்லூரி நிர்வாகம் பரிசோதித்திருக்க வேண்டும்.
பயிற்சியாளர் ஆறுமுகம் அங்கீகாரம் இல்லாத ஆள் என்றிருக்க காலேஜ் நிர்வாகம் என்ன காரணத்திற்காக அந்த நபரை தேர்ந்தெடுத்தது? மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்லவில்லை.
அப்பாவிப் பெண்ணை அநியாயமாய்க் கொன்று விட்டது இந்த காலேஜ் நிர்வாகம். இனிமேல் ஒரு பொண்ணுக்கும் இந்த மாதிரி நேரக் கூடாதபடி இந்த காலேஜ் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்ற காலேஜ்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்..'' என்கிறார் கோபமாய்.
கலைமகள் கல்லூரி, கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையினுடையது என சொல்லப்பட்டதை உறுதி செய்யும் விதமாக புலனாய்வில் இறங்கியபோது ஓர் ஆதாரம் கிடைத்தது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின் வேட்பு மனுத் தாக்கலில், தனது சொத்துக்களில் கோவை கலைமகள் கல்லூரியை காட்டியிருக்கிறார் தம்பிதுரை. அரசியல் செல்வாக்கு கொண்ட கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்கிறார்கள் அ.தி.மு.க.வினரே. கல்லூரியை நிர்வாகம் செய்வது தம்பிதுரையின் மனைவி பானுமதி.
-அருள்குமார்
______________
யார் இந்த ஆறுமுகம்..?
நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த இந்த ஆறுமுகம் சென்னையில் எம்.காம் படித்துக் கொண்டிருக்கும் போது .. இதேபோல அங்கே பேரிடர் காலங்களில் எப்படிச் செயல்படுவது? என தனியார் அமைப்பு அளித்த பயிற்சியை பார்த்திருக்கிறான். அது மட்டுமில்லாமல் அங்கே பயிற்சிக்கு ஒவ்வொரு மாணவரிடமும் அந்த தனியார் அமைப்பு பணம் வசூலித்ததை பார்த்தவன்.அந்த தனியார் அமைப்பில் சேர்ந்து மேம்போக்காக கற்றுக் கொண்டு வெளியேறினான் அசோக் என்பவன் மூலம் போலிச் சான்றிதழ்களை தயாரித்து, தன்னை ஒரு என்.டி.எம்.ஏ ட்ரெய்னர் என பல கல்லூரிகளில் சொல்லிக் கொண்டிருக்கிறான். மாணவர்களிடம் சான்றிதழுக்கு ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு அதிக அளவில் பணம் சம்பாதித்து இருக்கிறான்'' என்கிறார்கள் ஆலாந்துறை போலீசார்.