துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக துணைவேந்தர்களுக்கெல்லாம் வேந்தரான ஆளுநரே பகிரங்கமாக குற்றம்சாட்டியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

governorஆளுநரின் குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனோ, “""துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கோ, உயர்கல்வித்துறைக்கோ எந்த விதமான சம்பந்தமும் இல்லை. துணைவேந்தர் நியமனம் ஆளுநர் மூலம் மட்டுமே நடக்கிறது. மூன்றுபேர் கொண்ட ‘"துணைவேந்தர் தேடுதல் குழு'வில்கூட ஒரு நபரைத்தான் அரசு நியமிக்கிறது. அவர்கள், தேர்ந்தெடுக்கும் துணைவேந்தர் பட்டியலைக்கூட அரசிடம் காண்பிப்பதில்லை. அந்த பட்டியலிலுள்ள ஒரு நபரை தேர்ந்தெடுப்பது ஆளுநர்தான். அப்படியிருக்க, ஆளுநர் பேசியிருப்பது வியப்பாக உள்ளது. அரசுக்கு சம்பந்தமே இல்லை என்று ஆணித்தரமாக சொல்கிறேன். ஆளுநர் எதை மனதில்வைத்துச் சொன்னார் என்பதை அவரே சொன்னால்தான் தீர்வு''’என ஊழல் குற்றச்சாட்டு என்ற பந்தை, வந்த திசை நோக்கியே அடித்திருக்கிறார்.

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் செய்வது யார்? எப்படி நடக்கிறது ஊழல்? என்ற விசாரணையில் இறங்கினோம்...

தமிழக அரசின் பல்கலைக்கழகங்களுக்கு அட்மினிஸ்ட்ரேஷன் (நிர்வாகம்), ஃபினான்சியல் (நிதி), அகடெமிக் (கல்வி) என அனைத்து பொறுப்பையும் கவனித்துக்கொள்வது ஆல் இன் ஆல் துணைவேந்தர்கள்தான். அதாவது, மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுமதி கொடுப்பதில் ஆரம்பித்து பல்கலைக்கழக போஸ்டிங்குகளை நிரப்புவதுவரை அனைத்து அதிகாரங்களும் துணைவேந்தர் கையில்தான். இப்படிப்பட்ட துணைவேந்தர் பதவிக்குத்தான் கோடிக்கணக்கில் டீலிங்குகளும் குதிரை பேரங்களும் நடக்கின்றன.

Advertisment

துணைவேந்தர் நியமனத்தில் சீனியாரிட்டி கிடையாது. அந்தந்த பல்கலைக்கழகத்துக்கு அந்தந்தத் துறையில் "பெஸ்ட்'டான ஆளாக இருக்கவேண்டும். மாணவர்களுக்கு புதிய தரமான கல்வியைக் கொண்டு வரவேண்டும். இதனால் ‘பணம்’ விளையாட ஆரம்பித்துவிடுகிறது. எப்படி?

சுமார் 200 பேர் கொண்ட பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு நபர், சுமார் 15 பேர் கொண்ட பல்கலைக்கழக கவர்னிங் கவுன்சிலின் ஒரு நபர், தமிழக அரசு தேர்ந்தெடுக்கும் ஒரு நபர் என்று மூன்றுபேர் கொண்ட ‘தேடுதல் குழு’ துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும். இந்த மூன்று பேரில் யார் வயது அதிகமாக இருக்கிறாரோ அவர் கன்வீனராகவும் மற்ற இரண்டுபேர் உறுப்பினராகவும் இருப்பார்கள். ஒருவேளை, அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பவர்ஃபுல்லான ஆளாக இருந்தால் அவர், கன்வீனராகவும் மற்ற இருவர் உறுப்பினராகவும் இருப்பார்கள். ஆளுநரை சந்திக்கும் தேடுதல் குழுவானது துணைவேந்தர்களை தேர்வு செய்ய விளம்பரம் அறிவிக்கும். சுமார் 50-க்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிப்பார்கள். இதிலேயே பணபேரமும் குதிரை பேரமும் தொடங்கிவிடும்.

அதாவது, தமிழக அரசு யாரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்கவேண்டும் என்று முடிவுசெய்கிறதோ அவரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய நபரைத்தான் தேடுதல் குழுவுக்கு தேர்ந்தெடுத்து அனுப்புகிறது. இந்த தேடுதல் குழுவிலுள்ள மூன்று பேருமே சேர்ந்து ஒரு நபரை தேர்ந்தெடுக்கவும் பண பேரங்கள் நடக்கும். இப்படி, பேரங்கள் முடிந்தபிறகு மூன்று பேர் கொண்ட தேடுதல் குழுவானது மூன்று பெயரை ஆளுநருக்கு பரிந்துரைக்கும். தேடுதல் குழுவிடம் ஆளுநர் கலந்தாலோசித்துவிட்டு மூன்று பேரில் ஒரு நபரை தேர்ந்தெடுக்கலாம். இல்லையென்றால், அவரே முடிவு செய்தும் ஒரு நபரை தேர்ந்தெடுக்கலாம்.

Advertisment

governorசுர்ஜித்சிங் பர்னாலா ஆளுநராக இருந்தபோது, தேடுதல் குழு பரிந்துரைக்கும் மூன்று பேரில் பெரும்பாலும் ஆளுநர் முடிவின்படிதான் ஒருவரை தேர்ந்தெடுப்பார். காரணம், அப்போது ஆளுநர் அலுவலகம்தான் பவர்ஃபுல்லாக இருந்தது. இப்படி, ஆளுநரே துணைவேந்தரை தீர்மானித்ததால் அவருக்கு கீழ் இருந்த அதிகாரிகளும் அவரது உறவினர்களும் கோடிக்கணக்கில் ஊழலில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஆனால், ரோசய்யா ஆளுநராக வந்தபிறகு துணைவேந்தர் நியமனம் தலைகீழாக மாறியது. அ.தி.மு.க. அரசு யாரை நியமனம் செய்யவேண்டும் என்று தேடுதல் குழு மூலம் பரிந்துரைக்கிறதோ அவரையே கண்ணை மூடிக்கொண்டு தேர்ந்தெடுத்தார்.

அதற்கும் ஒரு பின்னணிக் காரணம் உண்டு. அ.தி.மு.க. ஆட்சியின்போது 2014-லிருந்து மத்தியில் பா.ஜ.க. ஆட்சி. ரோசய்யாவோ காங்கிரஸ் கட்சி. ஆனாலும் ரோசய்யா அ.தி.மு.க.வின் ரப்பர் ஸ்டாம்பாகவே மாறியதால், இப்படியொரு ஆள் தனது கட்சியிலிருந்துகூட கிடைக்கமாட்டார் என்பதால் ஜெயலலிதாவும் அவருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆளுநர் ரோசய்யாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் தூதுவராக இருந்தவர் தெலுங்கு தெரிந்த ஷீலாப்பிரியா ஐ.ஏ.எஸ். விழாக்களில் கலந்துகொண்டு அதன்முலம் நன்கொடை பெறுவதில் ரோசய்யா ஆர்வம் காட்ட... இந்த கேப்பில்தான், அ.தி.மு.க. புகுந்து விளையாட ஆரம்பித்தது. அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள்தான் இணைவேந்தர்கள். துணைவேந்தர்களை நியமித்த இணைவேந்தர்களும் இணைவேந்தர்களை நியமித்த ஆளுங்கட்சி மேலிடமும் கோடிக்கணக்கில் விளையாடிவிட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவை சந்திக்க துணைவேந்தர்கள் கூட்டமாகச் சென்றதே இதற்கான மிக முக்கிய ஆதாரம்.

துணைவேந்தர் பதவிக்கு 40 கோடி ரூபாய் பேரம் என்றால் துணைவேந்தருக்கு போட்டி போடுபவரிடம் சுமார் 5 கோடி ரூபாய்தான் இருக்கும். அப்போது, போட்டிபோடும் துணைவேந்தரில் யார் ஜெயிப்பார்களோ அவர்களுக்கு பின்னால் 10 தனியார் கல்லூரி உரிமையாளர்கள் "கன்சார்டியம்'’ அமைப்பார்கள். கன்சார்டியத்தின் தலைவர் அத்துறை சார்ந்த இணைவேந்தரான அமைச்சரிடம் ‘பேரம்’ நடத்துவார். "இப்போதைக்கு இதை அட்வான்ஸாக வைத்துக்கொள்ளுங்கள், பிறகு நாங்கள் கவனிக்கிறோம்' என்று பேரம் தொடங்கும். இப்படி, ஒவ்வொரு துணைவேந்தருக்குப் பின்னாலும் தனியார் கல்லூரி முதல்வர்களின் கூட்டமைப்பு இருக்கும். தேடுதல் குழுவானது மூன்று பேர் பட்டியலில் ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுத்துவிட்டால் பாதிக்கு பாதி தொகை கல்லூரி உரிமையாளர்களிடமிருந்து அமைச்சருக்கு கைமாறிவிடும். துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் மீதமுள்ள தொகையும் கைமாறிவிடும்.

இப்படித் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைவேந்தரின் பி.ஏ.வாக தங்களது ஆளை நியமித்துவிடும் தனியார் கல்லூரி உரிமையாளர்களின் கூட்டமைப்பு. அதற்குப் பிறகு சீட்டுகளை நிரப்பும்போது இந்த கூட்டமைப்பிலுள்ள கல்லூரிகளின் சீட்டுகளை நிரப்பிய பிறகுதான் மற்ற கல்லூரிகளில் சீட்டுகளை நிரப்பும். மற்ற கல்லூரி உரிமையாளர்கள் வந்து துணைவேந்தரை சந்தித்து சீட்டை நிரப்பக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினாலே தங்களால் நியமிக்கப்பட்ட பி.ஏ.வின் மூலம் தகவல் வந்துவிடும். இதனால் தன்னை தேர்ந்தெடுக்க உதவிய கல்லூரி உரிமையாளர்களுக்கு மட்டுமே சீட்டுகளை நிரப்ப வேலை செய்யவேண்டியிருக்கும். அக்கல்லூரிகள் மீது மாணவர்கள் கொடுக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காததற்கும் இதுதான் காரணம். 40 சி வரை கொடுத்து அண்ணா பல்கலை துணைவேந்தரானவர்கள் உண்டு.

இதுகுறித்து, நம்மிடம் பேசும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தலைவர் காந்திராஜன் ""துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையே இல்லை. அதிலும் ஆளுங்கட்சிக்காரர்களே அதிகம் நியமிக்கப்படுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தமிழகத்திற்கே அவமானம். சூரப்பா ஊழல் புகார் அல்லாதவர் என்றால் தமிழகத்தில் வேறு ஊழல் புகார் இல்லாத துணைவேந்தரே இல்லையா? தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா மீது இவரா நடவடிக்கை எடுத்தார்? அப்படிப்பட்டவரை ஆளுநர் துணைவேந்தராக நியமித்தது ஏன்? ரோசய்யா ஆளுநராக இருந்த காலக்கட்டத்தில் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுங்கட்சி விளையாடியதை மனதில் வைத்துக்கொண்டுதான் தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டியிருக்கிறார். அப்படியென்றால், யார் யாருடைய நியமனத்தில் ஊழல் இருக்கிறது என்று தனது செயலாளர் ராஜகோபால் மூலம் தலைமைச் செயலாளருக்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்கவேண்டியது தானே?''’என்று கேள்வி எழுப்புகிறார்.

துணைவேந்தர் நியமனம் என்றாலே ஆளுநர் அலுவலகத்துக்கும் ஆளுங்கட்சிக்கும் நடக்கும் தொழில் போட்டி. ஆளுநர் எதிர்க்கவில்லை என்றால் ஆளுங்கட்சி ஊழலில் விளையாடிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஆளுநர் எதிர்க்கிறார் என்றால் ஆளுநர் மாளிகையில் விளையாட்டு தீவிரமாக இருக்கிறது என்று அர்த்தம். கல்லூரி முதல்வர்கள் அனுமதி கேட்டு துணைவேந்தர்களை அணுகினால், அமைச்சர்களை பார்க்கவேண்டியுள்ளது. அமைச்சர்களை பார்த்தால் ஆளுநர் மாளிகையை கவனித்துவிட்டு வரச்சொல்கிறார்களாம்.

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் யாரும் யோக்கியமாக இல்லை என்கிறார்கள் நேர்மையான கல்வியாளர்கள்.

-மனோசௌந்தர்